ஆந்திராவில் வெறுங்கால்களுடன் நடந்த பெண்கள்: ஒரு கிராமத்துக்கே காலணிகளை அனுப்பிய பவன் கல்யாண்

19 சித்திரை 2025 சனி 12:34 | பார்வைகள் : 306
ஆந்திராவில் கிராமத்தில் உள்ள வயதான பெண்கள் உள்ளிட்ட அனைவரும் வெறும்கால்களுடன் நடப்பதை கண்ட துணை முதல்வர் பவன் கல்யாண் அந்த கிராமத்தில் அனைவருக்கும் காலணிகளை அனுப்பி வைத்து இருக்கிறார்.
அல்லூரி சீதாராமராஜூ மாவட்டத்தில் அரகு மற்றும் தும்பிரிகுடா வட்டத்தில் உள்ள பெடபாடு என்ற கிராமத்துக்குச் சென்றார். அங்குள்ள மக்களின் பிரச்னைகள் என்ன என்பதை அறிந்து அதை தீர்த்து வைப்பதே இந்த பயணத்தின் நோக்கமாகும்.
அந்த கிராம பெண்களிடம் பவன் கல்யாண் உரையாடிக் கொண்டு இருந்தார். அப்போது பாங்கி மிது என்ற முதிய பெண்மணியை கண்டார். அவரின் கால்களில் காலணிகள் இல்லை. அவர் போல அந்த கிராமத்தில் பலரும் காலணிகள் இல்லாமல் இருந்ததை கவனித்தார்.
மனவேதனை அடைந்த பவன் கல்யாண், உடனடியாக அந்த கிராமத்தின் மக்கள் தொகை எவ்வளவு என்பது குறித்து விசாரித்துள்ளார். 350 பேர் வசிப்பதை அறிந்ததும், அனைவருக்கும் காலணிகள் ஏற்பாடு செய்யுமாறு தமது அலுவலக அதிகாரிகளிடம் கூறினார்.
இதையடுத்து,சுறுசுறுப்பாக இறங்கிய அதிகாரிகள், கிராமத்தில் உள்ள அனைவருக்கும் காலணிகளை விநியோகித்தனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், இதற்கு முன்பாக எந்த தலைவரும் இங்கு வந்து எங்களின் பிரச்னைகளை கவனிக்கவோ, கேட்கவோ இல்லை என்றனர்.