தமிழ் வழி கல்வி படித்தவர்களுக்கு வேலையில் முன்னுரிமை: புதிய அரசாணை வெளியீடு

19 சித்திரை 2025 சனி 10:25 | பார்வைகள் : 336
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு பணிகளில் முன்னுரிமை வழங்குவதற்கான, வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் செய்து, புதிய அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், தமிழ் வழி கல்வியில் படித்தவர்களுக்கு, வேலை வாய்ப்பில், 20 சதவீதம் ஒதுக்கீடு வழங்க, 2010 முதல், பல்வேறு அரசாணைகள் வெளியிடப்பட்டு உள்ளன. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியாகியுள்ளன.
அவற்றில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, சில திருத்தங்கள் செய்து, தமிழக அரசின் தலைமை செயலர் முருகானந்தம், புதிய அரசாணை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
* முதல் வகுப்பில் பள்ளியில் சேராமல், கல்வி உரிமை சட்டம் வயதின் அடிப்படையில், இரண்டு முதல் எட்டாம் வகுப்பு வரை, நேரடியாக பள்ளியில் சேர்ந்து, தமிழ் வழியில் படித்து தேர்ச்சி பெற்றவர்களும், பிற மாநிலங்களில் தமிழ் வழியில் படித்து, பின் தமிழகத்தில் தொடர்ந்து, தமிழ் வழியில் படித்தவர்களுக்கும், பணி முன்னுரிமைக்கு தகுதி உண்டு
* பள்ளியில் தமிழ் வழியில் படித்ததற்கான சான்று, பணியில் இருந்த தலைமை ஆசிரியர்களும், உயர்கல்வியில் தொழிற் பயிற்சி நிலையம், கல்லுாரி, பல்கலைகளின் பணியில் இருந்த முதல்வர், பதிவாளர்களின் சான்றின் அடிப்படையில் மட்டுமே முன்னுரிமை வழங்க வேண்டும்
* பள்ளியில் நேரடியாக 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2, தமிழ் வழியில் தேர்வெழுதி, அவற்றில் தேர்ச்சி பெறாமல், தனித்தேர்வராக தேர்வெழுதி தேர்ச்சி பெற்று, மீண்டும், பள்ளி, கல்லுாரிகளில் தமிழ் வழியில் படித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கும் முன்னுரிமை உண்டு
* பள்ளி, கல்லுாரியில் இருந்து பெற்ற மாற்று சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் உள்ளிட்டவற்றின் உண்மை தன்மையை, பணியாளர் தேர்வு முகமைகள், பணி நியமன அதிகாரிகள், அந்தந்த பள்ளி, கல்லுாரிகளின் வாயிலாக உறுதி செய்ய வேண்டும்
* பள்ளிகள் மூடப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலரிடம்; கல்லுாரிகள் மூடப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட பல்கலை பதிவாளரிடம், தமிழ் வழி படிப்புக்கான சான்றிதழை பெற்று சமர்ப்பிக்க வேண்டும்
* பள்ளி, கல்லுாரிகளில், தமிழ் பாடம் நடத்தும் ஆசிரியராக, தமிழ் இலக்கியத்தில் கல்வித் தகுதி பெற்றவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும்.
தகுதி இல்லை
* தேர்வை மட்டும் தமிழ் வழியில் எழுதி, வேறு பயிற்று மொழிகளில் படித்தவர்கள்; பள்ளிக்கு செல்லாமல், தனித் தேர்வர்களாக தமிழ் வழியில் தேர்வெழுதி, தேர்ச்சி பெற்றவர்கள் ஆகியோர், இச்சலுகையை பெற இயலாது
* தமிழ் பாடத்தையும், வேறு பாடத்தையும் 'கிராஸ் மேஜர்' முறையில் படித்தவர்களுக்கு, பள்ளி, கல்லுாரிகளில் தமிழ் பாடம் நடத்தும் ஆசிரியர் ஆக தகுதி கிடையாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.