டொனால்ட் ட்ரம்ப் மூன்றாவது தடவையும் ஜனாதிபதியாக பதவியில் இருக்க முடியுமா?

17 சித்திரை 2025 வியாழன் 15:48 | பார்வைகள் : 237
78 வயதான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மூனாறாவது பதவிக் காலத்துக்கும் ஜனாதிபதியாக இருப்பது குறித்து சிந்திப்பதாக மார்ச் 30 ஆம் திகதி கூறினார். தான் பகிடி விடுவதாக நினைக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். சட்டங்களில் உள்ள ' ஓட்டைகளை ' பயன்படுத்தி மூன்றாவது பதவிக்காலத்துக்கும் ஜனாதிபதியாக தன்னால் இருக்கக் கூடியது சாத்தியம் என்றும் அவர் மேலும் கூறினார்.
அமெரிக்க அரசியலமைப்பு அனுமதிக்குமா?
அமெரிக்க ஜனாதிபதிகள் இரு பதவிக்காலங்களுக்கு தெரிவாவதை மட்டுப்படுத்தும் அரசியலயைப்புக்கான 22 வது திருத்தம் 1951 பெப்ரவரி 27 அங்கீகரிக்கப்பட்டது. அமெரிக்காவின் முதலாவது ஜனாதிபதி ஜோர்ஜ் வாஷிங்டன் இரு பதவிக்காலங்களுக்கு ஜனாதிபதியாக இருந்த பிறகு மூன்றாவது பதவிக்காலத்துக்கு செல்வதை 1796 ஆம் ஆண்டில் தானாகவே மறுத்தார். அவர் வகுத்த எழுதப்படாத ' இரு பதவிக்கால ' முன்னுதாரணத்தை மீறி பிராங்ளின் ரூஸ்வெல்ற் நான்கு பதவிக் காலங்களுக்கு ( 1933 -- 1945 ) ஜனாதிபதியாக பதவி வகித்ததை அடுத்தே அந்த அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்பட்டது.
எவரும் இரு தடவைகளுக்கு மேலாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதை தடுக்கும் அந்த திருத்தம் எவராவது இன்னொரு ஜனாதிபதியின் பதவிக்காலத்தின் இரு வருடங்களுக்கும் அதிகமான காலப்பகுதியில் ஜனாதிபதியாக பதவி வகித்தால் ( உதாரணமாக, ஜனாதிபதி ஒருவர் மரணமடைந்தால் அல்லது பதவி விலகினால் துணை ஜனாதிபதி ஜனாதிபதியாக பதவியேற்பதை போன்று ) அவர்கள் மீண்டும் ஒரு தடவை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதை மாத்திரம் அனுமதிக்கிறது. அதன் வாயிலாக அமெரிக்க ஜனாதிபதி ஒருவரின் கூடுதல்பட்ச பதவிக்காலம் பத்து வருடங்களாக ( முதலில் பதவியில் இருந்தவரின் பதவிக் காலத்தின் இரு வருடங்களும் முழுமையான இரு பதவிக்காலங்களின் எட்டு வருடங்களும் சேர்த்து) இருக்க முடியும்.
டொனால்ட் ட்ரம்ப் 2016 , 2024 ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர். அடுத்தடுத்து தெரிவு செய்யப்படாவிட்டாலும் , அவரது இரு பதவிக் காலங்களுக்கு ( 2017 -- 2021, 2025 -- 2029) தெரிவு செய்யப்பட்டவர் என்பதால் மூனறாவது பதவிக்காலத்துக்கு செல்வதை 22 அரசியலமைப்பு திருத்தம் எந்த ஐயப்பாட்டுக்கும் இடமில்லாத வகையில் தடைசெய்கிறது.
சட்டத்தில் ஓட்டை?
22 திருத்தம் நிலைமையை தெளிவாக விளக்குகின்ற போதிலும், சட்ட நியதியை தவிர்த்துச் சுற்றிவளைத்துச் செல்வதற்கு ட்ரம்ப் இரு வழிகளைக் கூறுகிறார். அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி தேர்தல் 2028 ஆம் ஆண்டில் நடைபெறும்.
அப்போது தற்போதைய துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸை போட்டியிட வைத்து அவரின் துணை ஜனாதிபதி வேட்பாளராக ட்ரம்ப் நிற்பது ஒரு யோசனை. வான்ஸ் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்க அனுமதிப்பதற்கு அவர் பதவியை துறந்து வழிவிடவேண்டும்.
ஆனால், இந்த தந்திரோபாயத்தை அரசியலமைப்புக்கான 12 வது திருத்தம் தடுக்கிறது. அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதியாக பதவிக்கு வருவதற்கு தகுதி இல்லாத எவரும் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக வருவதற்கு தகுதி இல்லாதவராகிறார் என்று அந்த திருத்தம் கூறுகிறது. ட்ரம்ப் இன்னொரு பதவிக் காலத்துக்கு ஜனாதிபதியாக தெரிவாவதை 22 வது திருத்தம் தடை செய்வதால் அவரால் துணை ஜனாதிபதியாகவும் வரமுடியாது.
துணை ஜனாதிபதியை பயன்படுத்துகின்ற மார்க்கம் தடைப்படுகின்ற அதேவேளை, அடுத்தடுத்து பதவிக்கு வருவதற்கு இருக்கின்ற இன்னொரு கோட்பாட்டு ரீதியான பாதையை அமெரிக்காவின் ஒரு அரசியல் விஞ்ஞானப் பேராசிரியரான புரூஸ் ஜி. பீபொடி தனது ஆய்வு அறிக்கை ஒன்றில் விளக்கியிருக்கிறார்.
22 வது அரசியலமைப்பு திருத்தம் ஒருவர் இரு தடவைகளுக்கு மேலாக ஜனாதிபதியாக " தெரிவாவதை " ( Elected ) தடுக்கிறது. ஆனால், இரு பதவிக்காலங்களுக்கு அப்பால் " பதவியில் இருப்பதை ' ( Serving ) அது தடுக்கவில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இரு தடவைகள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஒருவர் இன்னொருவருக்கு பதிலாக ( Line of succession) பதவிக்கு வருவதன் மூலம் அமெரிக்க ஜனாதிபதியாக முடியும்.
அமெரிக்க காங்கிரஸின் ஜனப்பிரதிநிதிகள் சபையின் சபாநாயகராக உறுப்பினர்களினால் தெரிவு செய்யப்படுபவர் காங்கிரஸின் ஒரு உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ட்ரம்ப் அவ்வாறாக சபாநாயகராக தெரிவாக முடிந்தால், (ஜனாதிபதியும் துணை ஜனாதிபதியும் பதவியில் இருந்து விலகும் பட்சத்தில் ) மீண்டும் ஜனாதிபதியாக வரமுடியும் என்று பேராசிரியர் பீபொடி கூறுகிறார்.
22 வது அரசியலமைப்பு திருத்தத்தை இரத்துச் செய்வது மூன்றாவது பாதை. அது பெரிதும் சாத்தியமில்லை. அந்த திருத்தத்தை இரத்துச் செய்ய வேண்டுமானால் காங்கிரஸின் இரு சபைகளிலும் ( ஜனப்பிரதிநிதிகள் சபையும் செனட்சபையும் ) மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் தேவை அல்லது அரசியலமைப்பு பேரவையை ( Constitutional convention ) கூட்ட வேண்டும்.
அந்த செயன்முறை ஒருபோதும் பயன்படுத்தவில்லை. அரசியலமைப்பு பேரவையை கூட்டி 22 வது திருத்தத்தை இரத்துச் செய்வதானால் 50 மாநில சட்டசபைகளின் மூன்றில் இரண்டு சபைகளின் (34) ஆதரவும் அடுத்து நான்கில் மூன்று சபைகளின் ( 38) அங்கீகாரமும் தேவை. அமெரிக்காவின் தற்போதைய அரசியல் கோலங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது அரசாயலமைப்பு திருத்தம் ஒன்றை ட்ரம்ப் கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கான ( கடந்த 33 வருடங்களாக அவ்வாறு செய்யப்படவில்லை) சாத்தியப்பாடு அறவே கிடையாது.
பதவிக்காலங்களை நீடித்த தலைவர்கள்
உலகம் பூராவும் பல தலைவர்கள் மிகவும் சாதுரியமான முறையில் அரசியலமைப்பு மட்டுப்பாடுகளை மாற்றியமைத்திருக்கிறார்கள். உதாரணமாக, விளாடிமிர் புட்டின் ரஷ்யாவின் ஜனாதிபதியாக இரு பதவிக்காலங்களுக்கு பிறகு ( 2000 --2008) 1993 ஆண்டின் அரசியலமைப்பின் 81(3) சரத்தின் கீழ் ' தொடர்ச்சியான ' இரு பதவிக்கால மட்டுப்பாட்டு எல்லையை அடைந்தார்.
பிறகு அந்த எல்லையை சட்ட நியதிகளை தவிர்த்து சுற்றிவளைப்பதற்காக அவர் ( 2008 - 2012 ) பிரதமரானார். அவரின் நேச அணியான டிமிட்ரி மெட்வெடேவ் ஜனாதிபதியாகி முன்னர் இருந்த நான்கு வருட பதவிக்காலத்தை ஆறு வருடங்களாக நீடித்தார்.
2012 ஆண்டிலும் 2018 ஆம் ஆண்டிலும் மீண்டும் ஜனாதிபதியாக வந்த புட்டின் அவருக்கு விசுவாசமான பாராளுமன்றத்தினதும் ( டுமா) நீதீத்துறையினதும் ஆதரவுடன் 2020 ஆண்டு கொண்டுவந்த அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலமாக பதவிக்காலங்களின் எண்ணிக்கையை மாற்றியமைத்தார். அதன் மூலமாக அவர் 2036 ஆம் ஆண்டுவரை ஜனாதிபதி பதவியில் அவரால் தொடரமுடியும்.
துருக்கியில் பிரதமராக இருந்த றிசெப் தயிப் எர்டோகான் ( 2003 - 2014) ஜனாதிபதியாக வந்து 2007 ஆம் ஆண்டில் நடத்திய சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் மூலமாக ஜனாதிபதியின் பதவிக்கால மட்டுப்பாட்டை இல்லாமல் செய்ததுடன் துருக்கியின் ஆட்சிமுறையை ஜனாதிபதி ஆட்சாமுறையாக மாற்றியமைத்தார்.
அதேபோன்றே சீனாவிலும் சி ஜின்பிங் ஜனாதிபதியின் இரு பதவிக்கால மட்டுப்பாட்டை 2018 ஆம் ஆண்டில் இல்லாமல் செய்தார். இந்த மாற்றம் அவர் காலவரையறையின்றி சீனாவை ஆட்சி செய்வதற்கு அவரை அனுமதித்தது. அதன் மூலமாக அவர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசு மீதான தனது பிடியை பலப்படுத்திக் கொண்டார்.
அதேவேளை, சால தலைவர்கள் சட்டங்களை மாற்றி எழுதாமலேயே பல வருடங்கள் ஆட்சி செய்கிறார்கள். ஜேர்மனியில் அதிபர்களுக்கு ( Chancellors ) பதவிக்கால மட்டுப்பாடு இல்லை. ஆனால், தொடர்ச்சியாக பல பதவிக் காலங்களுக்கு ஆட்சியில் இருப்பதற்கு பாராளுமன்றத்தின் ஆதரவு தேவை.
அஞ்ஜெலா மெர்கெல் 16 வருடங்கள் ஜேர்மனியின் அதிபராக பதவியில் இருந்தார். அதேபோன்றே கனடாவிலும் பிரிட்டனிலும் பிரதமர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பதவிக் காலங்கள் கிடையாது. அவர்கள் தங்களது கட்சியின் நம்பிக்கையை தக்கவைக்க முடியுமானால் காலவரையறையின்றி பதவியில் தொடர முடியும்.
இந்திய பிரதமர்
அமெரிக்க ஜனாதிபதி ஆட்சிக் கட்டமைப்பைப் போலன்றி, இந்திய பாராளுமன்ற ஆட்சிமுறை பிரதமருக்கு பதவிக்கால மட்டுப்பாடுகளை விதிக்கவில்லை. அவரின் பதவிக்காலங்கள் ( அரசியலமைப்பின் 75 (3) சரத்தின் பிரகாரம் லோக்சபாவின் நம்பிக்கையை தொடர்ந்து தக்கவைப்பதில் தங்கியிருக்கிறது.
இது முறைமை வாக்காளர்களின் இறைமை, ஜனநாயக நெகிழ்ச்சி மற்றும் பாராளுமன்ற பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதிசெய்வதுடன் மக்களின் நம்பிக்கையை தொடர்ந்து தக்கவைக்கக் கூடிய தலைவர்கள் நீண்ட காலத்துக்கு பதவியில் இருப்பதை அனுமதிக்கிறது.
உதாரணமாக, தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி 2029 ஆம் ஆண்டுவரை (15 வருடங்கள் ) பதவியில் இருக்க முடியும். ஆனால், நம்பிக்கையில்லாப் பிரேரணை போன்ற ஏற்பாடுகளையும் இந்த முறைமை உள்ளடக்கியிருக்கிறது.
அது வரலாற்றில் வி.பி.சிங்,(1990), எச்.டி. தேவகௌடா ( 1997), அடல் பிஹாரி வாஜ்பாய் (1999) போன்ற பிரதமர்களின் பதவிக் காலங்களை முடிவுக்கு கொண்டுவந்தது. மேலும், கிரமமான தேர்தல்கள், கூட்டணி அரசியல், பாராளுமன்ற விவாதங்கள் , நீதித்துறையின் மேற்பார்வை மற்றும் சுதந்திரமான பத்திரிகைத்துறை ஆகியவை துடிப்புமிக்க ஒரு ஜனநாயக சமநிலையை உறுதிசெய்கின்றன.
நன்றி virakesari