மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம் – யாழில் ஜனாதிபதி உறுதி

17 சித்திரை 2025 வியாழன் 13:04 | பார்வைகள் : 488
வடக்கில் பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள மக்களின் காணிகளில் விடுவிக்கக்கூடிய சகல காணிகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுப்போம் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.
யுத்தம் இல்லாத நிலைமையில் இனியும் பாதுகாப்பு காரணத்தை காட்டி மக்களின் காணிகளை வைத்திருக்கும் உரிமை அரசாங்கத்திற்கு கிடையாது என்றும், இதனால் அந்த காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம் என்பதுடன், வடக்கில் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்ட வீதிகளை திறக்கவும் நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, அங்கு தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது திஸ்ஸ விகாரை விவகாரம் தொடர்பில் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி அண்மையில் நடந்த பாராளுமன்ற ஆலோசனை குழு கூட்டத்தில் திஸ்ஸ விகாரை பிரச்சினையை மிக இலகுவாக தீர்க்கலாம் என்றும், அதனை அடிப்படையாகக் கொண்ட வடக்கு, கிழக்கு அரசியலில் இருந்து விலகுங்கள் என்று கூறினேன். அதில் தங்கியுள்ள அரசியலை நீக்கி விகாரையின் மதகுமார், நாக விகாரை பிக்குமார், அந்த கிராமத்தில் வாழும் மக்கள் ஒன்றிணைந்தால் இந்தப் பிரச்சினையை தீர்க்கலாம். இதனை தீர்க்க முடியாமல் தடுப்பது யார்? அரசியல்வாதிகளே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் தெரிவித்துள்ள ஜனாதிபதி, பிள்ளைகளை அரசாங்கத்திடமும், பொலிஸ் நிலையங்களிலும், இராணுவ முகாம்களிலும் ஒப்படைத்திருந்தால் அந்த பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதனை ஆராய வேண்டும். அதுவே பொறுப்புள்ள அரசாங்கத்தின் கடமையாகும் என்று தெரிவித்துள்ளார்.