பொன்முடி மீது இன்னும் கடும் நடவடிக்கை எடுத்திருக்கலாம்: காங்., எம்.பி., கருத்து

17 சித்திரை 2025 வியாழன் 18:08 | பார்வைகள் : 254
என்னை பொறுத்தவரைக்கும் முதல்வர் ஸ்டாலின் இன்னும் கடுமையான நடவடிக்கையை எடுத்து இருக்கலாம்'' என அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு குறித்த நிருபர்கள் கேள்விக்கு காங்., எம்.பி., கார்த்தி சிதம்பரம் பதில் அளித்தார்.
பெண்களையும், சைவம், வைணவத்தையும் இழிவுபடுத்தும் வகையில், ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடிக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவரது அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.ஆனால், தி.மு.க., தலைமை, பொன்முடியை கட்சிப்பதவியில் இருந்து மட்டும் நீக்கியது; அவர் இன்னமும் அமைச்சர் பதவியில் நீடிக்கிறார். இந்த விவகாரம் குறித்து காங்., எம்.பி., கார்த்தி சிதம்பரம் கூறியதாவது: அமைச்சர், குறிப்பாக அவர் பேராசிரியர். அவர் அந்த மாதிரி பேசி இருக்க கூடாது. என்னை பொறுத்தவரைக்கும் முதல்வர் ஸ்டாலின் ஒரு நடவடிக்கை எடுத்து இருக்கிறார். ஆனால் அந்த நடவடிக்கை பத்தாது என்பது பல பேருடைய கருத்து. அந்த கருத்து ஒரு நியாயமான கருத்து என்று எனக்கு தெரிகிறது.
இன்னும் கொஞ்சம் கடுமையான நடவடிக்கை எடுத்து இருக்கலாம். இந்த மாதிரி பொது வாழ்கையில் இருப்பவர்கள், பொறுப்பு உள்ள பதவியில் இருப்பவர்கள் பொதுமேடைகளில் அத்தகைய கருத்துகளை சொல்ல கூடாது. அப்படி சொல்லி இருக்க கூடாது. என்னை பொறுத்தவரைக்கும் முதல்வர் ஸ்டாலின் இன்னும் கடுமையான நடவடிக்கையை எடுத்து இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
நிருபர்: உங்களுக்கு காங்., மாநில தலைவர் பதவி கொடுக்க உள்ளதாக பரபரப்பாக பேசுகிறார்களே?
கார்த்தி சிதம்பரம் பதில்: எனக்கு கொடுக்கவே மாட்டார்கள். நான் வந்து ஒரு திசையில் கட்சியை எடுத்து செல்வேன். ஒரு ஸ்டைலில் நடத்தி செல்வேன். என்னை பொறுத்தவரைக்கும் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியோ, டில்லியில் இருக்கும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியோ தயாராக இல்லை. அதனால் என்னை அந்த பதவியில் நியமிக்க மாட்டார்கள் என்று நான் உறுதியாக இருக்கிறேன். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.