ஐரோப்பா மீது நம்பிக்கை குறைவு: 32 மருந்து நிறுவனங்கள் அதிர்ச்சி தகவல்!!

16 சித்திரை 2025 புதன் 04:56 | பார்வைகள் : 1386
ஐரோப்பிய ஒன்றியத்தில் மருந்து விலைகள் மற்றும் கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கும் காரணத்தால் பல்வேறு முக்கிய மருந்து நிறுவனங்கள் அமெரிக்காவை நோக்கி முதலீட்டை மாற்ற சிந்தித்து வருகின்றன. Novo Nordisk, Pfizer, Sanofi போன்ற 32 மருந்து நிறுவனங்கள் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளன.
ஐரோப்பாவில் 16.5 பில்லியன் யூரோ மதிப்பிலான முதலீடு மூன்று மாதங்களில் அமெரிக்காவுக்கு மாற்றப்படும் அபாயம் உள்ளதாக கடிதம் மூலம் எச்சரிக்கப்பட்டுள்ளது. மருந்து விலைகள், ஒழுங்குமுறை சட்டங்கள் மற்றும் புதுமைகளை ஊக்குவிக்க தேவையான மாற்றங்கள் அமல்படுத்தப்பட வேண்டும் என அந்த நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளன.
மேலும், சுத்திகரிப்பு விதிகள் மற்றும் மருத்துவ பரிசோதனை நடைமுறைகள் தொடர்பான கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக ஐரோப்பா போட்டியிட முடியாத நிலைக்குள் தள்ளப்படக்கூடும் எனவும், இந்த சூழ்நிலையை சமாளிக்க உடனடி நடவடிக்கைகள் தேவை எனவும் மருத்துவ நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.