Paristamil Navigation Paristamil advert login

2025ம் ஆண்டு பட்ஜெட்; ஆதரவும்...! எதிர்ப்பும்; தலைவர்கள் கருத்து !

2025ம் ஆண்டு பட்ஜெட்; ஆதரவும்...! எதிர்ப்பும்; தலைவர்கள் கருத்து !

2 மாசி 2025 ஞாயிறு 04:37 | பார்வைகள் : 2760


இந்தாண்டுக்கான பட்ஜெட் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதன் விபரம் பின்வருமாறு:

மத்திய அமைச்சர் அமித்ஷா

பிரதமர் மோடியின் இதயத்தில் எப்போதும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இடம் உள்ளது. ரூ.12 லட்சம் வருமானம் வரை வருமான வரி இல்லை. வரி விலக்கு நடுத்தர வர்க்கத்தினரின் பொருளாதாரத்தை உயர்த்த பங்கு வகிக்கும்.

லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்

துப்பாக்கி குண்டுகாயத்திற்கு பிளாஸ்டர் போடுவது போல இருக்கிறது. உலகளவில் நிலையற்ற தன்மை நிலவும் போது, நமது பொருளாதார சிக்கல்களை தீர்க்க ஒரு முன்மாதிரியான நடவடிக்கை தேவைப்படுகிறது. ஆனால், இந்த அரசின் யோசனைகள் திவாலாகிப் போனதாக இருக்கிறது, எனக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் எல்.முருகன்

ஆண்டிற்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் கொண்டவர்களுக்கு, வருமான வரி விலக்கு. நாடு முழுவதும் இருக்கின்ற நடுத்தர வர்க்க மக்கள் மிகவும் எதிர்பார்த்து வந்த அம்சங்களில் ஒன்றான வருமான வரி குறித்த கவலை நீங்கும் விதமாக, ஆண்டிற்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் கொண்டவர்களுக்கு, வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நடுத்தர வர்க்க மக்களின் நிலையை கருத்தில் கொண்டு இத்தகைய அறிவிப்பு வழங்கியுள்ள பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி

நடுத்தர மக்களுக்கு கிடைத்த மாபெரும் பரிசு. பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையுடன், நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில் ரூ.12 லட்சம் வரை வரி விலக்கு அளிக்க ஒரு முக்கியமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்

வருமான வரி நிவாரணத்திலிருந்து நீங்கள் பயனடைய, உங்களுக்கு உண்மையில் வேலைகள் தேவை. வேலையின்மை பற்றி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிடவில்லை.

மத்திய அமைச்சர், கிரண் ரிஜிஜூ

உலக அளவில் பல பிரச்னைகள் இருந்த போதும், இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த பட்ஜெட்டில் ஏழை, எளிய மக்கள் பயன் அடையும் வகையில் பல்வேறு திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை

புற்றுநோய், அரிய நோய்கள் மற்றும் பிற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மலிவு விலையில் உயிர்காக்கும் மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்யும் . நமது விவசாயிகளுக்கு பயனளிக்கும். விவசாயத் துறையை வலுப்படுத்தும்.

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழகத்திற்கு திட்டங்கள் இல்லை.

இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன்

தமிழகத்திற்கான எந்த அறிவிப்பும் இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பேரிடர் நிதி, கல்வி, மெட்ரோ திட்டம் என தமிழகத்திற்கு அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. பீஹாரில் சட்டசபை தேர்தல் வருவதால் நிதிஷ் குமாரை சந்தோஷப்படுத்த பட்ஜெட் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தி.மு.க., எம்.பி., டி.ஆர்.பாலு

தேர்தல் நடைபெறும் மாநிலத்தை கருத்தில் கொண்டு பட்ஜெட் அறிவிக்கப்பட்டு உள்ளது. பீஹாருக்கு வாரி வழங்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை

மத்திய பட்ஜெட் தேசத்துக்கானது அல்ல. ஓரிரு மாநிலங்களுக்காக பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.

140 கோடி நாட்டு மக்களின் பட்ஜெட்


மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அறிக்கை: வேலை சார்ந்த துறைகளான தோல், கழிப்பறை, ஜவுளி மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த பட்ஜெட்டில் உள்ள ஏற்பாடுகள் மக்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை வழங்கும், மேலும் புதிய வசதிகள் வழங்கப்படும். வருமான அளவுகள் அதிகரிக்கும்.

ஒரு வகையில், அது தொழில்நுட்பம், உற்பத்தி, விவசாயம் அல்லது சுற்றுலாத் துறையாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் சில நன்மைகளையும் வசதிகளையும் வழங்குவதன் மூலம், மிகவும் அறிவார்ந்த சிந்தனையுடன், நன்கு சிந்திக்கப்பட்ட உத்தியின் கீழ், உள்ளடக்கிய ஒரு சமச்சீர் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது, இந்த பட்ஜெட் 140 கோடி நாட்டு மக்களின் பட்ஜெட்.

தமிழ்நாட்டிற்கு ஏமாற்றம்: இ.பி.எஸ்.,


இ.பி.எஸ்., அறிக்கை: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரயில்வே திட்டங்கள் மற்றும் கோவை, மதுரை ஆகிய நகரங்களின் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு எவ்வித அறிவிப்பும் நிதி நிலை அறிக்கையில் இல்லாதது தமிழ்நாட்டிற்கு ஏமாற்றம் அளிக்கிறது

வருமான வரி விலக்கு கணிசமாக உயர்த்தப்பட்டது வரவேற்கத்தக்க அம்சமாகும். உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்த அடிப்படை சுங்கவரிகளில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதும் வரவேற்கத்தக்கது.

பீகார் மாநிலத்திற்கு விரைவில் தேர்தல் வருவதை கருத்தில் கொண்டு அம்மாநிலத்திற்கு மட்டும் பல வளர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளதால், மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை என கூறுவதை விட, பீகார் மாநில வரவு - செலவு நிதிநிலை அறிக்கை என கருதும்படி அமைந்துள்ளது. தமிழ்நாடு போன்ற மாநிலத்திற்கு எந்தவிதமான சிறப்பு திட்டங்களும் இல்லை.

சரியான அணுகுமுறை கிடையாது

த.வெ.க., தலைவர் விஜய் அறிக்கை:

ஒவ்வோர் ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போதும், சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களைக் கருத்தில் கொண்டு, அந்த மாநிலத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து அதிக நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவது மற்ற மாநிலங்களையும் அந்த மாநில மக்களையும் அவமதிப்பதாக உள்ளது. இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானதாகும்.

வழக்கம் போல் இந்த ஆண்டும் ஒன்றிய அரசானது தமிழகத்திற்குப் புதிய திட்டங்களை அறிவிக்காமலும் போதிய அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலும் புறக்கணித்துள்ளது.

அனைத்து மாநிலங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டே ஒன்றிய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். மாறாக, பாரபட்சத்தோடு நடந்துகொள்வது சரியான அணுகுமுறை இல்லை.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்