அவதானம் பிரான்ஸ் எல்லைப் பகுதியில் கண்காணிப்பும், கைதுகளும் தீவிரம்.

1 பங்குனி 2025 சனி 07:56 | பார்வைகள் : 2835
சட்டவிரோத குடியேறிகள், போதைப் பொருள் கடத்துவோர், மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டுபிடித்துத் தடுப்பதற்காக பிரான்ஸ் எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை எல்லைப் பாதுகாப்புப் காவல்துறையினர், ஜொந்தாம் படையினர் மற்றும் சுங்கப் பிரிவினர் ஆரம்பித்துள்ளனர். உள்துறை அமைச்சர் Bruno Retailleau அவர்களின் பணிப்பின் பெயரில் நாடுமுழுவதும் இந்த தீவிர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்து.
முதல் கட்டமாக ஸ்பெயின், மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் இருந்து பிரான்சுக்குள் நுழையும் தொடரூந்துகள், வாகனங்கள் அனைத்தும் பரிசோதிக்கப்பட்ட நிலையில் அடையாள அட்டைப் பரிசோதனைகளில் மட்டும் சரியான அடையாள ஆவணங்கள் இல்லாத குடியேற்றவாசிகள் முப்பது பேரும், தேடப்பட்டு வந்த இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாட்களில் தொடரூந்துகளில் பயணித்த மொத்தம் 2 ஆயிரத்து 680 பேரிடம் அடையாள அட்டை பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என தெரியவருகிறது. பிரான்சின் எல்லை நாடுகளுடன் எல்லைகள் முடப்படாது, ஆனால் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேலும் தொடரும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.