கவர்னர் தேநீர் விருந்தில் பா.ஜ.,- அ.தி.மு.க., பங்கேற்பு

26 தை 2025 ஞாயிறு 13:08 | பார்வைகள் : 2523
குடியரசு தினத்தை முன்னிட்டு, கவர்னர் ரவி அளித்த தேநீர் விருந்தில் அ.தி.மு.க.,- பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன.
குடியரசு தினத்தை முன்னிட்டு, கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். இந்தாண்டு, நடக்கும் விருந்தை புறக்கணிக்கப் போவதாக தமிழக அரசு, தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்கள், த.வெ.க., உள்ளிட்ட கட்சிகள் அறிவித்தன.
இந்நிலையில், கவர்னர் மாளிகையில் இன்று மாலை நடந்த தேநீர் விருந்தில் ஐகோர்ட் நீதிபதிகள் மற்றும் பா.ஜ., அ.தி.மு.க.,- த.மா.கா., உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன. அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாலகங்காவும், பா.ஜ., சார்பில் அண்ணாமலை, எச்.ராஜா, சரத்குமார், த.மா.கா., தலைவர் வாசன், தே.மு.தி.க., துணைச்செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சிக்கு வந்த ஜெயக்குமார், பா.ஜ.,வின் எச்.ராஜா, சரத்குமார் ஆகியோருடன் கைகுலுக்கி சிரித்து பேசினார்.பிறகு அங்கு வந்த அண்ணாமலை, ஜெயக்குமாருடன் கைகுலுக்கினார். பிறகு ஜெயக்குமார், எச்.ராஜா குறித்து நகைச்சுவையாக கூறினார். அதற்கு அண்ணாமலை பதிலளித்தார். இதை கேட்டு அண்ணாமலை, ராஜா, ஜெயக்குமார் உள்ளிட்டோர் சிரித்தபடி இருந்தனர்.