சித்தராமையா மீதான வழக்கு: ரூ.300 கோடி மதிப்பு சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை

18 தை 2025 சனி 02:59 | பார்வைகள் : 4160
கர்நாடகா முதல்வர் சித்தராமையா மீதான வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக சிலரின் அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இதன் மதிப்பு ரூ.300 கோடி ஆகும்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையாவின் சொந்த ஊர், மைசூரு தாலுகா, வருணா அருகே சித்தராமயனஹுண்டி கிராமம். 'மூடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் இருந்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகளை வாங்கி கொடுத்ததாக, சித்தராமையா மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்ய கவர்னர் அனுமதி அளித்தார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, சித்தராமையா மீது அமலாக்கத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில், நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக ரூ.300 கோடி மதிப்புள்ள 140 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. முடக்கப்பட்ட சொத்துகள் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் மற்றும் ஏஜென்ட்கள் உள்ளிட்ட பலரின் பெயர்களில் உள்ளது என அமலாக்கத்துறை கூறியுள்ளது.