இத்தாலி சிசிலி படகு விபத்து - ஐவரின் சடலம் மீட்பு

22 ஆவணி 2024 வியாழன் 06:56 | பார்வைகள் : 4839
இத்தாலியின் சிசிலியில் கடலில் மூழ்கிய ஆடம்பர படகின் சிதைவுகளில் இருந்து ஐந்து உடல்களை சுழியோடிகள் மீட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இத்தாலியின் சிசிலியில் கடலில் புயல் காரணமாக பிரிதானிய கொடியுடன் சென்ற படகு விபத்துக்குள்ளானது.
படகின் சிதைவுகளை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சுழியோடிகள் காணாமல்போன ஆறுபேரில் ஐவரின் உடல்களை மீட்டு கரைக்கு கொண்டுவந்துள்ளனர்.
பெயேசியனின் சிதைவுகளில் இருந்து மீட்கப்பட்ட உடல்களை இத்தாலிய கடற்படையினர் இன்னமும் அடையாளம் காணவில்லை. படகு கவிழ்ந்ததை தொடர்ந்து பிரிட்டனை சேர்ந்த நால்வரையும் அமெரிக்காவை சேர்ந்த இருவரையும் சுழியோடிகள் தேடிவருகின்றனர்.
காணாமல்போனவர்களில் பிரிட்டனின் செல்வந்தரும் அவரது மகளும் பயணித்ததாகவும், விபத்துக்குள்ளான படகு அவரது மனைவிக்கு சொந்தமானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
படகு விபத்துக்குள்ளனதை அடுத்து இரண்டு உடல்கள் போர்ட்டிசெலோ துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் பின்னர் இரண்டு உடல்கள் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.