Paristamil Navigation Paristamil advert login

தேர்தல் கால பணம் பறிமுதல் ரூ.9000 கோடி: தேர்தல் ஆணையம்

தேர்தல் கால பணம் பறிமுதல் ரூ.9000 கோடி: தேர்தல் ஆணையம்

18 வைகாசி 2024 சனி 15:37 | பார்வைகள் : 638


தேர்தல் கால நன்னடத்தை விதிகள் அமலில் இருந்த நிலையில் ரூ.9000 கோடி அளவிற்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார் நோடல் கூறியதாவது:

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக பொது தேர்தல் நடைபெற்று வருகிறது. நான்கு கட்ட தேர்தல்முடிந்த நிலையில் வரும் 20 ம் தேதி ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறுவதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்பட்டது. இதனையடுத்து தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்தது.

நான்காம் கட்ட வாக்குபதிவு முடிந்த நிலையில் இதுவரையில் மது வகைகள்,தங்கம் வெள்ளி , வாக்காளர்களுக்கு பணம் அளித்த வகை மற்றும் ரொக்கப்பணம் பறிமுதல் செய்த வகையில் ரூ.9000 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவற்றில் ரொக்கப்பணமாக ரூ.849.15 கோடி, 5.39 கோடி மதுபானங்களை பறிமுதல் செய்த வகையில் ரூ.814.85 கோடி, தங்கம் வெள்ளி உள்ளிட்ட உலோகங்களை பறிமுதல் செய்தவகையில் ரூ.1,260.33 கோடி , மற்றும் வாக்காளர்களுக்கு இலவசங்களை கொடுக்க முயற்சித்த வகையில் ரூ.2006.56 கோடி என்பன உள்ளிட்ட வகையில் ரூ.8889 கோடிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

போதை பொருட்களை பறிமுதல் செய்த வகையில் ரூ.1,187.80கோடி என்ற அளவில் குஜராத் முதலிடத்தையும், அதை தொடர்ந்து பஞ்சாப் (ரூ.657.67 கோடி) டில்லி (ரூ.358.42 கோடி) மற்றும் தமிழ்நாடு (ரூ.330.91 கோடி) என்ற இடத்தில் உள்ளது.

மேலும் தேர்தல் நன்னடத்தை வீதிகளை மீறியதாக இது வரையில் நாடு முழுவதும் 4.24 லட்சம் வழக்குகள் பதிவாகி உள்ளன. இவற்றில் 4,23,908 புகார்கள் தீர்க்கப்பட்டு விட்டன. மீதமுள்ள வழக்குகள் நடப்பில் உள்ளன. 89 சதவீத புகார்கள் 100 நிமிடத்திற்குள் தீர்க்கப்பட்டு விட்டன.

மே 15 வரையி்ல் c-vigil செயலிக்கு4,24,317 புகார்கள் வந்துள்ளது.

வாக்குபதிவுக்கு முன்னதான 48 மணி நேரத்தில் பிரசாரம் செய்ததாக 4,472 புகார்களும், மதவாத பேச்சுக்கள் பேசியதாக 2,883 புகார்களும் , துப்பாக்கிகளை காண்பித்து மிரட்டியதாக 2,430 புகார்களும் வந்துள்ளது. சொத்து சேதம் குறித்து c-vigil செயலிக்கு 14,022 புகார்கள் வந்துள்ளது. மதுபானம் மற்றும் இலவசங்கள் விநியோகிப்பதாக 7,022 புகார்கள் வந்துள்ளது. இவ்வாறு தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார். 

வர்த்தக‌ விளம்பரங்கள்