54 ஆண்டுகளாக குகையில் வாழும் சீனத் தம்பதி! வீடியோ இணைப்பு
27 September, 2016, Tue 14:30 GMT+1 | views: 623
சீனாவின் நான்சோங் நகருக்கு அருகில் உள்ள மலைக்குகைக்குள் 54 ஆண்டுகளாக இருவர் வசித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
லியாங் ஜிஃபு (81) லி சுயிங்க் (77) என்ற தம்பதியரே இவ்வாறு வாழ்ந்து வருகின்றனர்.
திருமணமான மூன்றாவது ஆண்டில் இந்தக் குகைக்கு வந்து சேர்ந்தனர். “வறுமை, எங்களுக்கு வீடு இல்லை, வாடகை கொடுக்கவும் வழியில்லாமல் இந்தக் குகைக்கு வந்து சேர்ந்தோம். அப்போது ஏற்கெனவே மூன்று குடும்பத்தினர் இங்கே வசித்து வந்தனர். நாங்களும் ஒரு பகுதியில் எங்கள் வாழ்க்கையை ஆரம்பித்தோம். 4 குழந்தைகள் பிறந்தனர். சில ஆண்டுகளில் மற்ற குடும்பத்தினர் நகருக்குள் குடிபெயர்ந்துவிட்டனர்.
மொத்த குகையிலும் நாங்கள் மட்டுமே வசித்தோம். நானும் மனைவியும் கடுமையாக உழைப்போம். குகைக்கு மேலே எங்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், தானியங்களை விளைவித்துக் கொண்டோம். குழந்தைகள் வளர்ந்தனர். நகருக்குள் சென்றுவிடுவோம் என்றனர். பல ஆண்டுகளாக வசித்து வந்த குகையை விட்டு, நகருக்குள் செல்ல எங்களுக்கு விருப்பமில்லை. குழந்தைகள் திருமணம் செய்துகொண்டு நகருக்குச் சென்றுவிட்டனர். ஆனாலும் யாராவது அடிக்கடி வந்து எங்களைப் பார்த்துச் செல்வார்கள்.
இன்று தூய்மையான தண்ணீர், மின்வசதி போன்றவையும் எங்கள் குகை வீட்டில் இருக்கின்றன. மகன்களோ, பேரன், பேத்திகளோ இல்லாத நேரங்களில்தான் நாங்கள் தனிமையை உணர்கிறோம். மனிதர்களுக்காக ஏங்குகிறோம். மற்றபடி எந்தக் குறையும் இல்லை.
மூன்று படுக்கை அறைகள், சமையலறை, நடுக்கூடம் என்று வசதியாக இருக்கிறது குகை. கோடைகாலத்தில் குளிர்ச்சியாக இருக்கும். குளிர்காலத்தில் இதமாக, வெதுவெதுப்பாக இருக்கும். நாள் முழுவதும் வேலை, ஆரோக்கியமான உணவு என்று வாழ்க்கை நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. பெரும்பாலான வாழ்க்கை இந்தக் குகையிலேயே கழிந்துவிட்டது. இனி எங்கும் செல்ல வேண்டியதில்லை” என்கிறார் லியாங் ஜிஃபு.
இவர்களைப் பற்றிய செய்தி சீன ஊடகங்களில் வலம் வருகிறது.
* 1941-ம் ஆண்டு இங்கிலாந்தில் முதல்முதலாக ஜெட் விமானம் பறக்கவிடப்பட்டது.
•
உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு:இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.