இலங்கையின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற முத்தரப்பு T-20 போட்டியில் இலங்கை அணி சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய குசல் ஜனித் பெரேரா மற்றும் குசல் மென்டிஸ் ஆகியோர் ஐ.சி.சி.யின் T-20 துடுப்பாட்ட தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
இந்நிலையில் குசல் ஜனித் பெரேரா இருபது இடங்கள் முன்னேறி 20 வது இடத்தை பிடித்துள்ளார். குசல் மென்டிஸ் 27 இடங்கள் முன்னேறி 48வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான சுதந்திரக் கிண்ண கோப்பையினை தட்டிச்சென்ற இந்தியா சிறந்த பந்துவீச்சு திறமைகளை வௌிப்படுத்தி இருந்தது.
அதன்படி வொஷிங்டன் சுந்தர் மற்றும் யுஸ்வேந்திர சஹால் T-20க்கான பந்து வீச்சாளர் தரப்படுத்தலில் பாரிய முன்னேற்றத்தை கண்டுள்ளனர். சஹால் 12 இடங்கள் முன்னேறி 2ம் இடத்தை கைப்பற்றியுள்ளார். வொஷிங்டன் சுந்தர் 151 இடங்கள் முன்னேறி 31 வது இடத்தைப் பிடித்துள்ளார்.
மேலும் இப்போட்டியில் தனது திறமையை வௌிப்படுத்திய இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சய இந்த தரப்படுத்தலில் 35வது இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.