பரிஸ் நகர மக்களுக்காக சாரதி இல்லா பேருந்து வசதியினை ஏற்படுத்த இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மின்சாரத்தில் இயக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள இப்பேருந்து, 12 பயணிகள் வரை அழைத்துச்செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறித்த தரிப்பிடத்தில் இருந்து, அடுத்த தரிப்பிடம் வரை சென்று, தானாகவே தானியங்கி கதவை திறந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜப்பான் சிங்கப்பூர் கலிபோர்னியா ஆகிய நகரங்களில் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு, தற்போது பரிஸ் நகரத்துக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான வெள்ளோட்டத்தை இன்று சனிக்கிழமை பரிசில் பரிசோதித்து பார்த்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த மின்சார தானியங்கி பேருந்தானது 30 நிமிடத்தில் 25 கி.மீ தூரம் வரை செல்லும். இன்று நடத்தப்பட்ட முதல்கட்ட சோதனை ஓட்டம் வெற்றியளித்ததை தொடர்ந்து, இரண்டாவது வெள்ளோட்டம் இவ்வருட இறுதிக்குள் செயற்படுத்தப்படும் என்றும், 2019 ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இப்பேருந்தை மிக சமீபத்தில் லியோன் நகரில் வெள்ளோட்டம் விடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.