Paristamil Navigation Paristamil advert login

நெக்லஸ் எங்கே...?

நெக்லஸ் எங்கே...?

20 கார்த்திகை 2021 சனி 07:28 | பார்வைகள் : 10197


காட்டுக்கோழி ஒன்று யோசித்துக்கொண்டே இருந்தது.மரத்தடியில் நின்று யோசித்தது,குளக்கரையில் நின்று யோசித்தது.என்ன செய்வேன்? பச்சைமலைக் காட்டிலே ஒரு விசேஷம் வரப்போகிறது. அடுத்தவாரம் அந்த விசேஷம் நடக்க போகிறது. அந்தக் காட்டிலேயே அழகானவள் மயில். அவளுக்குக் கல்யாணம். அந்த அழகு ராணியோட கல்யாணத்துக்குப் போகும்போது வெறும் கழுத்தோடவா போக முடியும்? நாளைக்கு கல்யாணம். கோழி தன் வாசலைப் பார்த்து உட்காந்திருந்தது.

 
பச்சைப் பட்டுடுத்தி, உதட்டில் சிவப்புச் சாயம் பூசி பச்சைக்கிளி நடந்து போய் கொண்டிருந்தது. புள்ளி வச்ச சட்டை போட்ட புள்ளி மான் துள்ளி துள்ளிப் போய் கொண்டிருந்தது. கோடு போட்ட சட்டையிலே அணில் மரத்துக்கு மரம் தாவித் தாவிப் போய் கொண்டிருந்தது. நான் என்ன பண்ணுவேன். எல்லாரும் நல்லா சிங்காரிச்சிக்கிட்டு போறாங்களே...
 
கோழி வருத்தத்தோட இருந்தது. அப்ப வீதிவழியா கருப்புக் கோட்டு போட்ட காகம் போனாரு. காகம் கோழியோட நெருங்கிய நண்பனாச்சே.. "ஏய் காக்கா நண்பா... "என்று கோழி கூப்பிட்டது.  "ஆமா நீ இன்னும் புறப்படலயா?என்று " காகம் கேட்டது. "எனக்கு போடறதுக்கே எதுவுமேயில்லை. எப்படி வெறுங்கழுத்தோட போறது. எனக்கு எப்படியாவது உதவி பண்ணேன்" என்று கோழி கேட்டது.
 
"கவலைப்படாதே... என்னோட வேறொரு நண்பன் கழுகுவிடம்  கேட்டுப் பாக்கறேன்... கொஞ்சம் பொறு... " அப்படீண்ணு சொல்லிபறந்து போனது காகம்.
கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்தது . அதோட வாயிலே பளபளண்ணு ஒரு நகை தொங்கியிட்டிருந்தது.
 
"இது பன்னிரெண்டு பவுன் நெக்லஸ்.. கல்யாணம் முடிஞ்சதும் திருப்பி கொடுக்கணும. மறந்திராதே என்றது.. சரி சரி நான் போறேன்... " அப்படீண்ணு சொல்லிட்டு காகம் பறந்து போனது. "ஆகா... பன்னிரெண்டு பவுன் நெக்லஸ்... டாலடிக்கற நெக்ளஸ்... " இவ்வளவு நல்ல நகையைப் போடுவதற்கு முன்னாடி நல்ல சுத்தமா குளிச்சிருவோம் அப்படீண்ணு நினைத்து சோப்பையும் எடுத்துக்கிட்டு குளத்துக்கு போனது.
 
குளத்துக்குள்ளே இறங்கிக் குளிக்கணும். முங்கி முங்கிக் குளிக்கணும் அப்படிக் குளிக்கும்போது நகையை யாராவது எடுத்துட்டுப் போனா என்ன பண்றது? குளத்துக்குப் பக்கத்திலே இருக்கிற வயலில் குழி தோண்டி மூடி வைத்திடலாம் என்று நினைத்து குழிபறித்து  நெக்லசை குழிக்குள்ளே போட்டு மூடி வைத்தது. குளத்துக்குள்ளே இறங்கியது. இரண்டு முங்கு முங்கியது அப்புறம் சோப்பு போட்டது. உடம்பு பூறா தேய் தேய்ணு தேய்த்தது. நல்லா குளித்தது. நகையைப் போட்டுட்டுப் போனா கல்யாணப் பெண்ணை பாக்காம எல்லாரும் தன்னையே பாப்பாங்க அப்படீண்ணு நினைத்துகொண்டே குளித்தது. ரொம்ப நேரம் குளித்தப்பிறகு அது வெளியே வந்தது. வெளியே வந்து பாத்தா ஒரு விவசாயி வயலை உழுதுகிட்டு இருந்தார்.
 
"ஐய்யய்யோ... என் நகையை இங்கே தானே பொதைத்து வச்சேன்" அப்படீண்ணு சொல்கிட்டே அந்த எடத்துக்குப்போய் தேடிப் பாரத்தது. ஆனா அங்க அந்த நகையைக் காணவில்லை. அங்கே இங்கே எல்லாம் கிளறி கிளறிப்பார்த்தது கிடைக்கவில்லை. அது கல்யாணத்துக்குப் போகவில்லை. அதுக்கு அழுகை அழுகையாக வந்தது. அந்த பன்னிரண்டு பவுன் நகை கிடைக்கவேயில்லை. இப்பவும் கிடைக்கவே இல்லை. அதனாலேதான் கோழி இப்பவும் குப்பை மேட்டை கௌறிகொண்டே இருக்கிறது. அந்த நகையைத் திருப்பிக் கொடுக்காததினாலேதான் காகமும் கழுகும் கோழிக்குஞ்சுகளைத் தூக்கிப் கொண்டு போகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்