Paristamil Navigation Paristamil advert login

விறுவிறுப்பும் பரபரப்பும் கலந்த WPL ஆரம்பப் போட்டியில் கடைசிப் பந்தில் வென்றது மும்பை

விறுவிறுப்பும் பரபரப்பும் கலந்த WPL ஆரம்பப் போட்டியில் கடைசிப் பந்தில் வென்றது மும்பை

24 மாசி 2024 சனி 09:45 | பார்வைகள் : 657


பெங்களூரில் நேற்று வெள்ளிக்கிழமை 23 ஆம் திகதி இரவு நடைபெற்ற மிகவும் விறுவிறுப்பும்  பரபரப்பும் கலந்த 2024 மகளிர் பிறீமியர் லீக் (WPL) கிரிக்கெட் ஆரம்பப் போட்டியில் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்தாடிய நடப்பு சம்பியன் மும்பை இண்டியன்ஸ் கடைசிப் பந்தில் 4 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

கணிசமான மொத்த எண்ணிக்கைகளைக் கொண்ட இந்தப் போட்டியில் தனது முதல் பந்தையும் போட்டியில் கடைசிப் பந்தையும் எதிர்கொண்ட அறிமுக வீராங்கனை சஜீவன் சஜானா வெற்றிக்கு தேவைப்பட்ட 5 ஓட்டங்களை சிக்ஸ் மூலம் பெற்று மும்பை இண்டியன்ஸின் வெற்றியை உறுதி செய்தார்.

இரண்டு அணிகளினதும் விளையாட்டு கிட்டத்தட்ட ஒரே மாதரியாகவே இருந்தது. அந்த அணிகளின் ஆரம்பங்கள் சிறப்பாக அமையாததுடன் தலா 3 வீராங்கனைகளின் சிறப்பான துடுப்பாட்டங்களே மொத்த எண்ணிக்கைகளுக்கு வலு சேர்த்தன.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 171 ஓட்டங்களைக் குவித்தது.

ஆரம்ப வீராங்கனை ஷபாலி வர்மா ஒரு ஓட்டத்துடன் ஆட்டம் இழந்தார்.

ஆனால், அணித் தலைவி மெக் லெனிங்குடன் 2ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களையும் ஜெமிமா ரொட்றிக்ஸுடன் 3ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களையும் அலிஸ் கெப்சி பகிர்ந்து அணிக்கு பலம் சேர்த்தார்.

கெப்சி 53 பந்துகளில் 8 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 75 ஓட்டங்களையும் ஜெமிமா ரொட்றிக்ஸ் 24 பந்துகளில் 5 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 42 ஓட்டங்களையும் லெனிங் 31 ஓட்டங்களையும் குவித்தனர். அவர்களைவிட மாரிஸ்ஆன் கெப் 16 ஓட்டங்களைப் பெற்றார்.

மும்பை பந்துவீச்சில் நெட் சிவர் ப்றன்ட் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அமேலியா கேர் 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

172 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஹெய்லி மெத்யூஸ் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்ததால் மும்பையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

எனினும் நெட் சிவர் ப்றன்ட், யஸ்டிக்கா பாட்டியா ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆரம்ப வீழ்ச்சியை சீர் செய்தனர்.

நேட் சிவர் ப்றன்ட் 19 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோருடன் 3ஆவது விக்கெட்டில் மேலும் 56 ஓட்டங்களை பாட்டியா பகிர்ந்தார்.

பாட்டியா 8 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 57 ஓட்டங்களை விளாசினார்.

தொடர்ந்து ஹாமன்ப்ரீத் கோர், அமேலியா கேர் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 44 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது கேர் 24 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து பூஜா வஸ்த்ராக்கர் ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார். (160 - 5 விக்.)

ஆனால், மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஹாமன்ப்ரீத் கோர் வெற்றிக்கு 5 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது கடைசிப் பந்துக்கு முந்திய பந்தில் 55 ஓட்டங்களுடன்    ஆட்டம் இழந்தார்.

இந் நிலையில் கடைசிப் பந்தை எதிர்கொண்ட சஜீவன் சஜானா எல்லா சக்தியையும் பிரயோகித்து கெப்சியின் பந்தை சுழற்றி அடித்து சிக்ஸாக்கி மும்பைக்கு அபார வெற்றியை ஈட்டடிக்கொடுத்தார்.

பந்துவீச்சில் அலிஸ் கெப்சி 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அருந்ததி ரெட்டி 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்