Paristamil Navigation Paristamil advert login

ஆதித்யா எல்-1 விண்கலத்துடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட்...!

ஆதித்யா எல்-1 விண்கலத்துடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட்...!

2 புரட்டாசி 2023 சனி 10:25 | பார்வைகள் : 2670


சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ உருவாக்கியுள்ள ஆதித்யா எல் - 1 விண்கலத்தை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

சந்திரயான் - 3 திட்டம் வெற்றிபெற்ற நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலத்தை வடிவமைத்தது. ஆதித்யா எல்-1 விண்கலத்தில் பெங்களூருவில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் வடிவமைத்த 7 ஆய்வு கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் விண்கலத்தை ஏவ திட்டமிடப்பட்டது. இதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று பகல் 11.50 மணிக்கு தொடங்கியது. இதையடுத்து விண்கலத்தை ஏவுவதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றன.

கவுண்ட்டவுன் நிறைவடைந்த நிலையில் சரியாக இன்று பகல் 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் ஆதித்யா எல்-1 விண்கலத்துடன் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. சூரியனை கண்காணித்து ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய முதல் விண்கலம் என்ற பெருமையை ஆதித்யா எல்-1 விண்கலம் பெற்றுள்ளது.

விண்ணில் ஏவப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் 'லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்' என்ற இடத்தில் சூரியனை நோக்கிய கோணத்தில் நிலை நிறுத்தப்படுகிறது. விண்கலத்துடன் இணைக்கப்பட்டுள்ள கருவிகள் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய உள்ளன.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்