Paristamil Navigation Paristamil advert login

மின்சார சபை பேச்சாளரின் குப்பி விளக்கு கதை…!

மின்சார சபை பேச்சாளரின் குப்பி விளக்கு கதை…!

5 பங்குனி 2024 செவ்வாய் 08:44 | பார்வைகள் : 621


அண்மைக்காலமாக எமது நாட்டின்  அரசியல்வாதிகளும், அரச அதிகாரிகளும்   வெளிப்படுத்தும் கருத்துகள், மத்தியதர மற்றும் வறுமை கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வரும் மக்களை எள்ளி நகையாடுவதாக உள்ளது. தம்மை மேட்டுக் குடி வர்க்கத்தினராக கருதிக்கொண்டு இவ்வாறு பொறுப்பில்லாமல் ஊடகங்களிலும் பாராளுமன்றத்திலும் இவர்கள் பேசி வருகின்றனர்.  

தொலைகாட்சி நேர்காணல் நிகழ்வொன்றின் போது, மலையக பெருந்தோட்ட சமூகத்தைப்பற்றி  இழிவாக  கருத்துரைத்த இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் நோயல் பிரியந்த கடந்த வாரம் ஊடகங்களில் மாத்திரமல்லாது பாராளுமன்றத்திலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தார். ஊடக பேச்சாளராக மாத்திரமல்லாது இலங்கை மின்சார சபையின் வணிகம் மற்றும் செயற்பாட்டு மூலோபாயப் பிரிவின் பிரதி பொது முகாமையாளரான இவர், ஒரு மின்பொறியியலாளராவார். 

மின்சாரத்தை நுகரும் இலங்கை மக்கள் பற்றிய அவரது கருத்துகள் மிகவும் அபாயகரமானவையாக இருந்தது மாத்திரமின்றி மூர்க்கத்தனமானதும் கூட என அவரது கருத்தை விமர்சித்திருந்த இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கமானது, மக்கள் மத்தியில் அவரது கருத்துகள் மின்சார சபையையும் அரசாங்கத்தையும் சேதப்படுத்துவதாகவே உள்ளது எனத் தெரிவித்துள்ளது.

தான் பணிபுரியும் நிறுவனத்தின் ஒரு தொழிற்சங்கமே தனக்கெதிராக இவ்வாறு கிளர்ந்தெழும் என அவர் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார். உரிய காலத்தில் மின்கட்டணங்களை செலுத்தாத காரணத்தினால் , கடந்த வருடம் மாத்திரம் இலங்கை மின்சார சபையானது சுமார் பத்து இலட்சம் மின் விநியோகங்களை துண்டித்திருந்தது. உயர்மட்ட அரசியல் பிரமுகர்களின் உத்தியோகபூர்வ குடியிருப்புகள்,  அவர்களுக்கு சார்பாக உள்ளன தொழிலதிபர்களின் வர்த்தக நிறுவனங்கள் மற்றும்  தொழிற்சாலைகள், என்பவற்றின் மின் கட்டண நிலுவைகள் கோடிக்கணக்கில் இருப்பது குறித்து கடந்த வருடம் பாராளுமன்றில் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தன.மின்சார கட்டண அதிகரிப்பு குறித்தும் கடந்த வருடம் கடும் சர்ச்சைகள் எழுந்திருந்தன. மக்கள் சார்பாக பேசிய பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்னாயக்க அரசாங்கத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இவ்வாறு பல சர்ச்சைகளை கடந்த வருடம்  சந்தித்த இலங்கை மின்சார சபையானது இவ்வருடம் அதன் ஊடகப்பேச்சாளரால் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. பொது மக்களின் குடியிருப்புகள் மின்துண்டிப்பை எதிர்நோக்கியமை குறித்தே மின்சார சபையின் ஊடகப்பேச்சாளரிடம் குறித்த தொலைகாட்சி நேர்காணலில் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. பதுளை பகுதியில் ஒரு ஏழை குடும்பத்தின் தந்தை மின்சாரம் துண்டிக்கப்பட்ட தனது குடியிருப்புக்கு பக்கத்து வீட்டிலிருந்து மின்சாரம் பெற முயற்சித்த போது மின்தாக்குதலில் மரணமடைந்தார். மின் கட்டணம் செலுத்தாதால் அவரது மின் விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்தது. தனது பிள்ளைகள் இரவில் கல்வி கற்பதற்காகவே அவர் இந்த முயற்சியை மேற்கொண்டிருந்தார் என விசாரணைகளின் போது தெரியவந்திருந்தது. எனினும் இந்த கேள்விகளுக்குப் பதில் கூறியிருந்த ஊடகப் பேச்சாளர் பிரியந்த அந்த குடும்பஸ்தர் மதுபோதையில் இருந்திருக்கலாம் என்றும் பெருந்தோட்டப்பகுதிகளில் மதியம் இரண்டு மணிக்கு மேல் அனைவருமே மதுபோதையிலேயே இருப்பார்கள் என்றும் புள்ளி விபரங்களை அடுக்கினார். அதே வேளை தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகள் மின்சார வெளிச்சத்தில் தான் கல்வி கற்க வேண்டும் என்றில்லை, அவர்கள் மண்ணெண்ணெய்  குப்பி விளங்கில்  படித்தால் தான் என்ன என்றும் கேள்வியெழுப்பியிருந்தார். இன்று ஐம்பது அறுபது வயதை கடந்த கல்விமான்கள், பேராசிரியர்களிடம் கேட்டுப்பார்த்தால் அவர்கள் குப்பி விளக்கிலேயே படித்து உயர்ந்திருப்பது தெரியும் என ஒரு மிக முக்கியமான வரலாற்று சம்பவத்தையும் உதாரணம் காட்டினார். 

அவரது இந்த கருத்துகள் சமூ கஊடகங்களில் கடும் எதிர்ப்பை உருவாக்கி விட்டிருந்தன. இந்த நாட்டில் வாழ்ந்து வரும் ஒரு சமூகத்தை மிகவும் இழிவாக பேசுவதற்கு இவருக்கு யார் அதிகாரத்தை கொடுத்தார்கள் என பலரும் அவரது கருத்துக்களை ஆட்சேபித்திருந்தார்கள். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மிகவும் உணர்ச்சி வசப்பட்டவராக பாராளுமன்றில் இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி மின்சார சபை ஊடகப் பேச்சாளரை கடிந்து கொண்டார். அவர் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். 

இது இவ்வாறிருக்க மலையக சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதிகளும் இதற்கு தமது கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தனர். எனினும் ஊடகப்பேச்சாளரோ தனது கருத்துக்கு மின்சார சபைத் தலைவரிடம் மன்னிப்புக் கேட்பது போன்று கடிதம் எழுதி கொடுத்து விட்டு தனது மேலதிக பொறுப்பான ஊடகப் பேச்சாளர் பதவியை இராஜிநாமா செய்து விட்டதாக கூறி தனது வழமையான மேலதிக பிரதி பொது முகாமையாளர் பதவியில் அமர்ந்து விட்டார். மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சனவும் இது அரசாங்கத்தினதோ மின்சார சபையினதோ கருத்துக்கள் இல்லையென ஊடகங்களை சமாளித்துள்ளார்.

நாட்டிற்கு வெளிச்சம் கொடுக்கும் மின்சார சபையில் இவ்வாறு காரிருள் மனம் கொண்ட அதிகாரிகள் இருப்பதை நாட்டு மக்கள் அறிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பமாக இது அமைந்தது. தான் கூறிய கருத்துக்களுக்கு மன்னிப்பு கோருவதாக தனது இராஜிநாமா கடிதத்தில் எங்கும் அவர் குறிப்பிட்டிருக்கவில்லை. அது குறித்து மின்சக்தி அமைச்சரோ அல்லது மின்சார சபைத் தலைவரோ எந்த விளக்கங்களும் கேட்கவில்லை. அதாவது தான் கூறிய கருத்துகளுக்கு எந்த விதத்திலும் பொறுப்பேற்கத் தேவையில்லை என்ற அலட்சியப்படுத்தலே அவரிடத்திலிருந்து வெளிப்பட்டிருந்தது. 

மலையக பெருந்தோட்ட சமூகம் தொடர்பில் இரண்டு வாரங்களுக்கு முன்பு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் ஒரு கதையை கூறிருந்தார்.   அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தனது இந்திய விஜயத்தின் போது, இலங்கையை இந்தியாவின் ஒரு பகுதி எனக் கூறியதாக சீற்றமுற்றார். எட்கா ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்திடக் கூடாது என்றும் இருநூறு வருடங்களுக்கு முன்பு பெருந்தோட்டத் தொழிலுக்கு வந்த தொழிலாளர்கள் இங்கேயே தங்கி விட்டதை சுட்டிக்காட்டிய அவர் மேற்படி ஒப்பந்தம் கைச்சாத்திடப்ப்டடால் இந்தியர்கள் வெற்றிலை கடை வைத்துக்கொண்டு இங்கேயே தங்கி விடுவர் என கிண்டலாக பேசியிருந்தார்.

இரண்டு சந்தர்ப்பங்களில் பாராளுமன்றில் இந்த விடயத்தை வலியுறுத்தியிருந்தார் விமல் வீரவன்ச. 

இதில் என்ன ஆச்சரியமான விடயமென்றால், மின்சார சபை அதிகாரி கூறிய கருத்துகளுக்கு அன்று பாராளுமன்றில் கோபவேசமாக பேசிய சஜித் உட்பட பலரும் வீரவன்சவின் உரைக்கு எந்த பிரதிபலிப்புகளையும் காட்டாதது தான். ஏனென்றால் எதிர்காலத்தில் விமல் வீரவன்சவின் கட்சியும் தமக்கு ஆட்சியமைக்க தேவைப்படலாம் என்ற முன் எச்சரிக்கை உள்ளுணர்வாக அது இருந்திருக்கலாம்.

மின்சார சபை அதிகாரியின் கருத்து பெருந்தோட்ட மக்களை மாத்திரம் பாதித்த ஒரு கூற்று என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் பல சிங்கள கிராமப்புறங்களில் வறுமை கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வரும் ஏழை குடும்பங்கள் இன்றும் மின்சார வசதியின்றி குப்பி விளக்கின் உதவியுடனேயே வாழ்ந்து வருகின்றனர். அதைப்பற்றி  கூறுவதற்கு சிங்கள அரசியல்வாதிகளுக்கு வெட்கம்.   மறுபக்கம் மலையக பெருந்தோட்ட சமூகத்தை இழிவுபடுத்தி விட்டார் என பகிரங்கமாக பேசுவதற்கு மலையக அரசியல்வாதிகளுக்கும் பிரச்சினை.

ஏனென்றால் அந்த சமூகத்தினரின் இன்னும் ஆயிரக்கணக்கானோர் குப்பி  விளக்கு வெளிச்சத்திலேயே வாழ்க்கை நடத்துகின்றனர் என்பது உண்மை. அவர்கள் வாழ்ந்து வரும் பிரதேசங்களில் மதுபானசாலைகளை  அனுமதிப்பதுவும் இவர்களேயன்றி வேறு யார்? 

அரசாங்கத்து முட்டுக்கொடுக்கும் வகையில் மக்களை கசக்கி பிழியும் திட்டங்கள் என்றாலும் அரசாங்கத்தின்  சார்பாக அரசியல்வாதிகளே பேசி வந்தனர். இப்போது இப்படியலில் அரசாங்க அதிகாரிகளும் இதில் இணைந்து கொண்டு அரசியல் பேசி வருகின்றனர். மின்குமிழ் வெளிச்சத்திலேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கு குப்பி விளக்கின் அருமை தெரியாது தான். 

நன்றி வீரகேசரி

வர்த்தக‌ விளம்பரங்கள்