எழுத்துரு விளம்பரம் - Text Pub

சர்வதேச உறவுகள் மீதான வெசாக்கின் தாக்கம்

10 May, 2023, Wed 12:13   |  views: 3384

வெசாக் பண்டிகையானது சாக்யமுனி புத்தர் என்றும் அழைக்கப்படும் புத்தரான சித்தார்த்த கௌதமரின் பிறப்பு, ஞானம் (பரிநிர்வாணம்) மற்றும் மறைவு (முக்தி) ஆகியவற்றைக் கொண்டாடுகின்றது. 
 
இது கிறிஸ்தவர்களுக்கான கிறிஸ்மஸ், தியோபனி மற்றும் ஈஸ்டரின் அல்லது முஸ்லிம்களுக்கான நபிகளின் பிறந்த நாள், ஹஜ் மற்றும் ரமழான் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பண்டிகையுடன் ஒப்பிடலாம். புத்தர் தினம், புத்த ஜெயந்தி, புத்த பூர்ணிமா, ஃபாட் டன், சாகா தாவா, வைஷாக பூரணை, வெசாகா, விசாகத் திருநாள் மற்றும் விக்சகா பூக்சா என்றும் அழைக்கப்படும் இதனை உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான பௌத்தர்கள் கடைப்பிடிக்கின்றனர்.
 
சித்தார்த்த கௌதமரின் வாழ்க்கையின் உண்மையான திகதிகளை விவாதம் சூழ்ந்துள்ளதுடன், மகாவம்ச பாரம்பரியம் அதனை கி.மு 624-544 இல் வைக்கின்ற அதே சமயம் மகாயான மரபுகள் பரந்த அளவிலான திகதிகளைக் கொண்டுள்ளன. 
 
குவாங்சோவில் இருந்து ஒரு ஆரம்பகால பௌத்த ஆவணம், பல துறவிகளின் குறிப்பிடப்பட்ட பதிவு, புத்தரின் பரிநிர்வாணத்தை கி.மு 486 இல் குறிப்பிடுகிறது. அறிஞர் வில்ஹெல்ம் கெய்கர், பேரரசர் அசோகரின் பிரதிஷ்டையின் ஹெலனிஸ்டிக் காலக்கணிப்பின் பார்வையில் மகாவம்ச காலவரிசையை ஆராய்ந்ததுடன் ஆண்டினை கி.மு 483 என்று மதிப்பிட்டார்.
 
இருப்பினும், 1988 இல், கோட்டிங்கனில் ஓரியண்டலிஸ்டுகளின் ஒரு மாநாடு, "பண்டைய இந்தியர்களின் காலவரிசை பற்றிய அக்கறையின்மை" காரணமாக, கி.மு நான்காம் நூற்றாண்டில் சித்தார்த்தர் வாழ்ந்தார் என்று முடிவு செய்தது. 
 
ஜப்பான், நேபாளம் மற்றும் இஸ்ரேல் தவிர இந்தியா அல்லது இலங்கை, அல்லது எந்தவொரு ஆசிய நாடுகளிலிருந்தும் பங்கேற்பாளர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது இவ்வாறு இருந்தபோதிலும், தேரவாத நாடுகள் மகாவம்ச காலவரிசையை தொடர்ந்து பயன்படுத்துவதுடன், புத்தர் ஜெயந்தி கொண்டாட்டம் அல்லது புத்தரின் பரிநிர்வாணத்திற்கு 2,500 ஆண்டுகளுக்குப் பின்னரான நிழ்வு 1956-57 இல் நடைபெற்றது.
 
புத்தர் மற்றும் அசோகர்
 
பழங்கால சாக்கிய குடியரசில் பிறந்த, பணக்கார கௌதம (அல்லது கோதம) குடும்பத்தின் வாரிசு, சித்தார்த்தர் எதற்கும் ஆசைப்படாமல் வளர்ந்ததுடன், தன்னை திறமையானவராகவும் கற்றவராகவும் நிரூபித்தார். இருப்பினும், வளர்ந்து வரும் அதிருப்தியுடன், உலக இருப்பின் உண்மையான அர்த்தத்தைக் கண்டறிய அவர் புறப்பட்டார். பின்னர் துணைக் கண்ட தத்துவ சொற்பொழிவின் மையமாக இருந்த, மதத்திற்கு அவர் பயணம் செய்தார்.
 
கீழ் கங்கைப் பள்ளத்தாக்கு புரட்சியின் நடுவே இருந்தது: பிராமணர் அல்லாத வகுப்பினர் முக்கியத்துவம் அதிகரிக்கத் தொடங்கி, பிராமணர்களின் மேலாதிக்கத்திற்கு சவால் விட்டமையால், சமுதாயத்தில் செழிப்பு ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது. வெவ்வேறு நம்பிக்கைகளை கொண்ட ஏறத்தாழ 60 துறவிகள் மத மற்றும் சமூக மரபுவழியில் போட்டியிட்டனர்.
 
சித்தார்த்தர் ஆலர கலாமா மற்றும் உத்தக ராமபுத்தா ஆகிய இரண்டு தத்துவவாதிகளின் கீழ் தத்துவவியலில் மூழ்கினார். அவர்களின் போதனைகள் போதுமானதாக இல்லை என்று கண்டறிந்த அவர், தர்க்கம் மற்றும் தியானத்தின் மூலம் உண்மையை வெளிக்கொணர முயன்றார், நிரந்தர பசியையும் கூட தாங்கினார். சுய இன்பம் மற்றும் சுய மறுப்பு ஆகியவற்றுக்கு இடையே ஒரு "நடுத்தரமான பாதையில்" செல்ல வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, அவர் ஞானத்தை அடைந்ததுடன் துன்பத்தின் இருப்பு, துன்பத்திற்கான காரணம் ஆசை, ஆசையை அகற்ற வேண்டிய அவசியம் மற்றும் அதை அகற்றுவதற்கான பாதை என்னும் நான்கு உன்னத உண்மைகளை வகுத்தார். இந்த உண்மைகள் பௌத்தத்தின் மையத்தை உருவாக்குவதுடன், பரந்த அளவிலான நூல்கள் இந்த நோக்கத்திற்காக சேவை செய்கின்றன.
 
பல ஆண்டுகால போதனைக்குப் பிறகு, புத்தர் காலமானார், கற்றறிந்த துறவிகளின் குழுவை தர்மத்தைப் பரப்புவதைத் தொடர்வதற்காக விட்டுள்ளார். பௌத்தம் பரவியதும், அது ஒரு தத்துவவியல் மற்றும் பிரபல்யமான நிலையில் வளர்ந்ததுடன், பிந்தையது அரச மரம் மற்றும் தாதுகோபம் போன்ற சடங்குகள் மற்றும் சின்னங்களை உள்ளடக்கியது.
 
புத்தரின் படங்கள் பல நூற்றாண்டுகளாக வெளிவரவில்லை என்றாலும், அவை இறுதியில் கி.பி 2 ஆம் நூற்றாண்டில் ஹெலனிஸ்டிக் ராஜ்யங்களில் தோன்றியதுடன் பண்டைய எகிப்திய நகரமான பெரெனிகேவில் புத்தர் சிலையின் சமீபத்திய கண்டறிவு அதன் பரந்த பரவலுக்கு சாட்சியமளிக்கிறது. போற்றுதலை நாடாத ஆசிரியரைக் கொண்டாடுவது வெசாக்கின் எதிரான விடயமாகும். இறுதிச் சடங்குகளைப் பற்றி கவலைப்படுவதை விட ஞானம் பெற முயற்சி செய்வதில் கவனம் செலுத்துமாறு புத்தர் தனது சீடர் ஆனந்தருக்கு அறிவுறுத்தினார். புத்தரின் பரிநிர்வாணத்திற்கான பாதையைப் பின்பற்றுவதன் மூலம் ஒருவர் அவருக்கு சிறந்த அஞ்சலி செலுத்த முடியும்.
 
பரிநிர்வாணத்திற்கு இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, பேரரசர் அசோகர் அவரது போதனைகளைத் தழுவி ஒரு புரட்சியை ஆரம்பித்ததுடன், அனைத்து உயிரினங்களுக்கும் நீதி என்ற கொள்கையுடன் ஆட்சி செய்தார், மனிதாபிமான சட்டம் மற்றும் விலங்கு உரிமைகளுக்கு அடித்தளம் அமைத்தார். புத்தரின் போதனைகளின்படி, அனைத்து நம்பிக்கை முறைமைகளுக்கும் சுதந்திரம் வழங்குவதன் மூலம் அசோகர் சகிப்புத்தன்மையை ஊக்குவித்தார். இன்றுவரை, அவர் இலட்சிய பௌத்த ஆட்சியாளரை உருவகித்துக்காட்டியதுடன் அவரது ஆட்சி சிறந்த பௌத்த அரசாகும்.
 
சர்வதேச உறவுகளில் பௌத்தம்
 
மௌரியப் பேரரசின் செல்வாக்கைப் பரப்புவதற்கு அரச ஆதரவு பெற்ற பௌத்த மிஷனரி நடவடிக்கைகளைப் பயன்படுத்தி, பொது “மென்வலுவை” இராஜதந்திரத்தில் பயன்படுத்திய முதல் ஆட்சியாளர் அசோகராக இருக்கலாம். இதற்கு உன்னதமான உதாரணம் ஸ்ரீலங்காவாகும், அவர் மரியாதை மற்றும் ஒன்றுக்கொன்று சார்ந்திருப்பதன் அடிப்படையில் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்தினார், ஆனால் அவர் தனது மேற்கில் உள்ள ஹெலனிஸ்டிக் அரசுகள் உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் நட்புடன் தொடர்பு கொண்டிருந்தார்.
 
பௌத்தத்தின் இந்த அம்சம் அது தாராளவாதத்திலிருந்து வேறுபடும் விதத்தை நிரூபிப்பதுடன், சுதந்திரமான, நிரந்தரமான மற்றும் சுயநலனுடைய தரப்பினரின் அனுமானங்களை நிராகரிக்கிறது. இது மக்களை முதன்மையாக தன்னலமற்றவர்களாகவும் அமைதியானவர்களாகவும், உண்மையை அறியாமையால் மட்டுமே சுயநலவாதிகளாகவும் பார்க்கின்றது. இந்த தவறான புரிதலில் இருந்து முரண்பாடு எழுகிறது.
 
பௌத்தம் அரசுகளின் சுயாதீன தன்மை தொடர்பான மேற்கத்திய கருத்தை நிராகரிப்பதுடன் எல்லாவற்றினுடைய ஒன்றையொன்று சார்ந்திருப்பதையும் நிலையற்ற தன்மையையும் வலியுறுத்துகிறது. இந்த புரிதலானது சர்வதேச உறவுகளுக்கு மிகவும் கூட்டான அணுகுமுறைக்கு வழிவகுக்கும்.
 
 ஒன்றையொன்று சார்ந்திருப்பதன் யதார்த்தத்தை மறுப்பது, பனிப்போர் சகாப்தத்தால் நிரூபிக்கப்பட்டதன்படி, எதிர்விளைவாகும். தாராளவாதம் போலல்லாமல், பௌத்தம் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் முழுமையான ஒன்றையொன்று சார்ந்திருப்பதை வாதிடுகின்றது.
 
இராஜதந்திரி, அதிகாரத்துவம், அரசியல்வாதி, எழுத்தாளர் மற்றும் பொது அறிவுஜீவியான சசி தரூர் Asia Quarterly சஞ்சிகையில் "ஒரு மென்மைவலுவாக இந்தியா" என்ற தனது 2008 ஆம் ஆண்டு ஆக்கத்தில்... “அதிகரித்த வகையில், நாடுகள் கலாச்சார பொருட்களின் ஏற்றுமதி, வெளிநாட்டு பொதுமக்களின் அந்நியசெலவாணி வருமானம் அல்லது சர்வதேச பிரச்சாரம் ஊடாக முன்வைக்கும் மென் வலுவின் கூறுகளால் மதிப்பிடப்படுகின்றன” என்றார்.
 
பல்முனைவு உலக ஒழுங்கின் வளர்ந்து வரும் ராட்சதர்களான சீனா மற்றும் இந்தியா ஆகிய இரண்டும் தங்களின் மென்வலு கவர்ச்சியை அதிகரிப்பதற்காக பௌத்தத்தை வலுவாக வலியுறுத்துகின்றன. இருதரப்பு உறவில் பௌத்தம் இரு நாடுகளையும் ஒன்றாக இணைத்துள்ள நிலையில், சீனாவும் இந்தியாவும் பௌத்த நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளிடையே செல்வாக்கிற்காக போட்டியிடுகின்றன.
 
ஆயினும்கூட, இந்து பக்தி வழிபாட்டு முறைகள் மற்றும் இஸ்லாத்தின் தாக்கத்தின் கீழ் பௌத்தம் அடித்துச் செல்லப்பட்டதை இந்தியா கண்டது. இன்று, இந்திய அரசு பௌத்தத்தை இந்து மீள்விளக்கத்தின் பின்னணியில் அங்கீகரிப்பதுடன், பிரதானமாக தலித் பின்பற்றுபவர்களின் கோரிக்கைகளை புறக்கணிக்கிறது. புரட்சிக்குப் பிந்தைய சீனாவில், பௌத்தம் ஒரு ஏற்றஇறக்கமான சவாரியைக் கொண்டிருந்தது, இருப்பினும் இது பௌத்தத்தின் குறுகிய கால, நேரடியான தந்திரோபாய பயன்பாட்டிலிருந்து சர்வதேச சமூகமயமாக்கல் காட்சிகளுக்குள் நீண்ட கால முறைப்படுத்தலுக்கு மாறுவதாகத் தோன்றுகிறது.
 
இந்தியா மற்றும் சீனாவைப் போலல்லாமல், ஜப்பான் ஆறாம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, பௌத்தமதத்தை அதன் கலாச்சார மற்றும் மத நிலப்பரப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக ஏற்றுக்கொண்டது, பௌத்த மென் வலுவின் மிகவும் உண்மையான முன்கணிப்பை பெற்றிருக்கலாம், இது நவீன காலத்தில் இராஜதந்திர நோக்கங்களுக்காக பௌத்தத்தைப் பயன்படுத்தும் மற்றும் பௌத்த சுற்றுலாவை மேம்படுத்தும் முதல் நாடாக இருக்கலாமென்பதுடன் ஜப்பானியர்களால் அனுசரணை வழங்கப்படும் விகாரைகள் மற்றும் தேவாலயங்கள் உலகம் முழுவதும் உள்ளன.
 
1880 களில், கேணல் ஹென்றி ஸ்டீல் ஒல்காட் மற்றும் அநகாரிக தர்மபால ஆகியோர் ஜப்பானுக்கு விஜயம் செய்து, ஜப்பானிய வெசாக் விளக்குகளை மீண்டும் கொண்டு வந்தனர், இது தற்போது இலங்கை வெசாக் கொண்டாட்டங்களின் பிரிக்க முடியாத பகுதியாகும்.
 
வெசாக்
 
1883 ஈஸ்டர் கொண்டாட்டத்தின் போது, கொழும்பின் கொட்டாஞ்சேனை புறநகர் பகுதியில் பௌத்த ஊர்வலம் மீது ரோமன் கத்தோலிக்கர்கள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக, பௌத்த பிரம்மஞான சங்க உறுப்பினர்கள், வெசாக் பண்டிகையை விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என்றும், ‘இதுவரை ஒருவர் உள்ளூர் தலைமைச் சேவையில் சேர கிறிஸ்தவராக இருக்க வேண்டும் என்பதால்’ மத நடுநிலையான மற்றும் பாராபட்சம் இல்லாத கொள்கையை அரசாங்கம் பின்பற்ற வேண்டும் என்றும் கோருவதற்காக பௌத்த பாதுகாப்புக் குழுவை உருவாக்கினர். 
 
பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதுடன், 27 மார்ச் 1885 அன்று ஆளுநர் சர் ஆர்தர் ஹாமில்டன் கார்டன் கிறிஸ்தவர் அல்லாதவர்களின் குறைபாடுகளை நீக்கி வெசாக் போயாவை பொது விடுமுறையாக அறிவித்தார். இதற்கு இலங்கை அரசின் மதச்சார்பற்ற தன்மை அதன் இருப்புக்கு கடன்பட்டுள்ளது. இந்த நிகழ்வு வெசாக் ஒரு மத விடுமுறையாக மட்டுமல்லாமல், மத சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாகவும் விளக்குகின்றது.
 
பௌத்தம் அனைத்து உயிர்களிடத்தும் இரக்கம், அனுதாபம் மற்றும் தீங்கு செய்யாததன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. சமாதானம் மற்றும் அகிம்சை பற்றிய இந்தச் செய்தி இன்றைய உலகில், நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் மோதல்கள் மற்றும் பதட்டங்களுடன் மிகவும் பொருத்தமானது. வெசாக் இந்த விழுமியங்களைப் பற்றி சிந்திக்கவும், தங்கள் சொந்த வாழ்க்கையிலும் உலகிலும் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
 
காலநிலை மாற்றம் மற்றும் மாசுபாடு அதிகளவில் அவசரமாகி வருகின்ற குறிப்பாக இன்றைய உலகில், சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை வலியுறுத்துவதன் மூலம் வெசாக் சர்வதேச விவகாரங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பௌத்த மற்றும் பௌத்தம் அல்லாத நாடுகளுக்கு இடையிலான உறவுகளிலும் வெசாக் செல்வாக்கு செலுத்துகின்றது.
 
உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் அதிகமான பௌத்த மக்கள் உள்ளதுடன், வெசாக் கொண்டாட்டம் கலாச்சாரங்கள் மற்றும் மதங்களுக்கு இடையே ஒரு பாலமாக செயற்பட முடியும். பௌத்தம் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளில், வெசாக் தேசிய ஒற்றுமை மற்றும் பெருமையை வளர்க்க உதவும். சிறிய பௌத்த சனத்தொகை கொண்ட நாடுகளில், வெசாக் கலாச்சார பரிமாற்றத்திற்கான வாய்ப்பாக அமைவதுடன், இது அனைத்து கலாச்சாரங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு ஒரு பிரதான பண்டிகையாக அமைகிறது.
 
பாரிய தேரவாத பௌத்த சக்தியான தாய்லாந்து, ஆண்டுதோறும் வெசாக் மாநாட்டை நடாத்துகின்றது. இது தாய் மென்வலு திட்டத்தின் ஒரு பகுதியாகும் – தாய்லாந்து பௌத்த ஆலயம் உலகெங்கிலும் உள்ள தேரவாத பௌத்தர்களுக்கு மத இணைப்புக்களை வழங்குகிறது. 1885 ஆம் ஆண்டு வெசாக் தினத்தன்று சர்வதேச பௌத்த கொடியை முதன்முதலில் ஏற்றிய இடமான கொட்டாஞ்சேனையில் உள்ள தீபத்துத்தாராமய விகாரை கூட தாய்லாந்து அரச குடும்பத்திடமிருந்து தாராளமான நன்கொடைகளைப் பெறுகிறது.
 
1950 இல், இலங்கையில் நடைபெற்ற முதலாவது உலக பௌத்தர்களின் மாநாடு, வெசாக்கை சர்வதேச பௌத்த விழாவாக அங்கீகரித்தது. 2000 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை வெசாக் தினத்திற்கு சர்வதேச அங்கீகாரம் வழங்கியது.
 
2020 ஆம் ஆண்டில், COVID-19 இன் அழிவுகள் உலகை பெரும் அழுத்தத்திற்கு உள்ளாக்கிய நிலையில், ஐ.நா வெசாக் அனுசரிப்பை ஜூலைக்கு ஒத்திவைத்தது. அந்தச் சந்தர்ப்பத்தில், ஐ.நா பொதுச் சபையின் தலைவர் திஜ்ஜானி முஹம்மது பாண்டே கூறுகையில்: 
 
“இந்த நினைவு தினம் பௌத்த போதனைகளில் பொதிந்துள்ள சகிப்புத்தன்மை, பரஸ்பர மரியாதை மற்றும் புரிதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நமக்கு நினைவூட்டும் ஒரு சந்தர்ப்பமாக அமையட்டும்.” உலகம் அதிகரித்த முறையில் ஒன்றோடொன்று இணைந்திருப்பதை இது சுட்டிக்காட்டுகிறது, வெசாக் கொண்டாட்டம் நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் தொடர்ந்து பிரதான வகிபாகத்தை கொண்டிருக்கும்” என்றார்.
 
வினோத் மூனசிங்க வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் இயந்திர பொறியியலை கற்றதுடன், இலங்கையில் தேயிலை இயந்திரங்கள் மற்றும் மோட்டார் உதிரிபாகங்கள் மற்றும் ரயில்வே துறைகளில் பணியாற்றினார். பின்னர் அவர் பத்திரிகை துறை மற்றும் வரலாறுகளை எழுதுவதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இலங்கை ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனத்தின் ஆளுனர் குழுவின் தலைவராகப் பணியாற்றினார்.
 
Factum என்பது ஆசிய – பசுபிக்கை மையமாக கொண்ட சர்வதேச உறவுகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய தொடர்புகள் பற்றிய சிந்தனைக் குழுவாகும், அதனை www.factum.lk மூலமாக அணுகலாம்.
 
இங்கே வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் ஆசிரியரின் சொந்தக் கருத்துக்கள் என்பதுடன் நிறுவனத்தின் பிரதிபலிப்புக்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
 
நன்றி வீரகேசரி
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Ilayaraja 80
Ilayaraja concert 2023 Paris
Tel. : 09 84 39 93 51
AMMAN BUREAUTIQUE
Bureautique et informatique
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18