விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

உலகினால் பாராட்டப்பட்ட நியூசிலாந்து பிரதமர் பதவி துறக்கிறார்!

23 January, 2023, Mon 12:11   |  views: 974

குழந்தை பெற்றெடுத்த ஆறு வாரங்களில் 2018 இல் பிரதமராக பணிக்குத் திரும்பி, உலகின் கவனத்தை ஈர்த்த நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் (Jacinda Ardern) தற்போது அப்பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
 
“நான் ஒன்றும் 'சுப்பர் வுமன்’ அல்ல, என் கணவர் வீட்டில் இருந்து குழந்தையை பார்த்துக் கொள்வதால் மட்டுமே என்னால் பணியைப் பார்க்க முடிகிறது. நானும் சாதாரண பெண்தான். எனக்கு ‘சுப்பர் வுமன்’ போன்ற தோற்றம் தேவையில்லை. பெண்கள் எல்லாம் அப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கக் கூடாது" என்று 2018ஆம் ஆண்டு த ஃபினான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்த ஜெசிந்தா தெரிவித்திருந்தார்.
 
ஜெசிந்தா ஆர்டெர்ன் பிரதமராக இருக்கும்போது குழந்தை பெற்றுக் கொண்டதும், உடனடியாக பணிக்கு வந்ததும் உலகத்தை அவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது.
 
அது மாத்திரமன்றி 2019ஆம் ஆண்டு கிரைஸ்ட்சர்ச் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை அவர் அணுகிய விதம், ஜெசிந்தாவை வலிமையான, அதேநேரத்தில் இரக்கமுள்ள தலைவராக உலக அரங்கில் பதிவு செய்தது.
 
1980ஆம் ஆண்டு ஹேமில்டனில் பிறந்த ஜெசிந்தா, தன்னுடைய குழந்தைப் பருவத்தை சிறு கிராமப்புறப் பகுதிகளில் கழித்தார். அவருடைய தந்தை காவல்துறை அதிகாரியாக இருந்தார். அவரது தாய் பாடசாலைகளில் சமையலர் பணி செய்து வந்தார்.
 
சிறு கிராமங்களில் அவர் பார்த்து வளர்ந்த வறுமை, அவரது அரசியல் சிந்தாந்தத்தை வடிவமைத்தது. தனது 17 வயதில் தொழிலாளர் கட்சியின் ஆதரவாளரானார் ஜெசிந்தா.
 
நியூசிலாந்தின் மூன்றாவது பெண் பிரதமரான ஜெசிந்தா ஆர்டெர்ன், அரசியல் மற்றும் பொது தொடர்புத் துறையில் பட்டம் பெற்றவர். முன்னாள் நியூசிலாந்து பிரதமர் ஹெலன் கிளர்க்கிடம் பணிபுரியத் தொடங்கினார்.
 
பின்னர்2008ஆம் ஆண்டு நியூசிலாந்து திரும்பிய அவர், நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது குழந்தை வறுமை ஒழிப்பு, ஒருபாலினத்தவர்களின் உரிமைகள் தொடர்பான சட்ட மசோதாக்களை ஆதரித்தார்.
 
2017ஆம் ஆண்டு நியூசிலாந்து தேர்தல் நடக்கவிருந்த ஏழு வாரங்களுக்கு முன்புதான் ஜெசிந்தா தொழிலாளர் கட்சியின் தலைவரானார். அப்போது அவர் வெற்றிபெற வாய்ப்பு குறைவு என்றே கூறப்பட்டது.
 
அவருக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், அந்நாட்டின் தேசியவாத கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்து சாதனை படைத்தார் ஜெசிந்தா.
 
அதன்பின் 2020 இல் மீண்டும் ஜெசிந்தா ஆர்டெர்ன் தலைமையிலான தொழிலாளர் கட்சி அந்த நாட்டில் நடந்த பொதுத் தேர்தலில் 120 இடங்களில் 60 இற்கும் மேலான இடங்களைப் பெற்று பெரும்பான்மை வெற்றியைப் பெற்றது.
 
நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் ஜெசிந்தாவின் தொழிலாளர் கட்சி 49 சதவீத வாக்குகளைப் பெற்றதன் மூலம், நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையுடன் இவர் மீண்டும் ஆட்சியமைத்தார்.
 
தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் நியூசிலாந்து பிரதமராகிய ஜெசிந்தாவை நோக்கி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது முதல் குழந்தையைப் பெற்றெடுத்த உங்களால் தாயாக இருந்துகொண்டு, பொதுவாழ்விலும் வென்று காட்ட முடியுமா என்று 2020இல் கேட்கப்பட்டது.
 
ஆயினும் இளம்தாயாக, நாட்டின் இளம்தலைவராக விளங்கி, கிரைஸ்ட் சர்ச் தீவிரவாத தாக்குதல், எரிமலைச் சீற்றம், கொரோனா தொற்று என அனைத்திலும் நியூசிலாந்து நாட்டை வழிநடத்தி சென்ற ஜெசிந்தா ஆர்டெர்ன், அந்நாட்டின் பிரதமராக கடந்த ஆறு ஆண்டுகளாக பணியாற்றினார்.
 
உலகக் உலுக்கிய கிரைஸ்ட் சர்ச் தீவிரவாத தாக்குதல் கொலையாளியின் பெயரைக்கூட வெளிப்படையாகக் கூற மறுத்த ஜெசிந்தா, அவர் நியூசிலாந்து மக்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும், அவரை அந்நாடு ஏற்காது என்றும் தெரிவித்தார். அடுத்த ஒரு சில நாட்களில் அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவரது உறவினர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். அதோடு, அந்நாட்டின் துப்பாக்கி வைத்திருத்தல் தொடர்பான சட்டங்களை மாற்றி அமைத்தார். இதனால், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் துப்பாக்கிச் சட்டங்களை மாற்ற வேண்டும் என்ற குரல் எழுந்தது.
 
பின்னர் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், அந்நாட்டில் எரிமலைச் சீற்றம் சம்பவம் நிகழ, அதில் அவுஸ்திரேலியா, அமெரிக்க நாட்டினர் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். அப்போதும் ஜெசிந்தா தனது பொறுப்பை சரியாக செய்தார் என்று சர்வதேச ரீதியில் பாரட்டப்பட்டார்.
 
அதற்கு அடுத்து வந்த கொரோனா பெருந்தொற்றை நியூசிலாந்து கையாண்ட விதத்திற்கு உலகளவில் ஜெசிந்தாவுக்கு பாராட்டுகள் குவிந்தன. சர்வதேச பெண் அரசியல் தலைவர்களுள் தனக்கென தனிஇடத்தை பெற்றுக்கொண்ட ஜெசிந்தா ஆர்டெர்ன், ‘மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்’ என அறிவித்து தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
 
பதவி விலகல் குறித்து அவர் கூறுகையில், “இந்த பதவி குறித்து நன்கு அறிவேன், இனி இதைத் தொடர என்னிடம் போதுமான ஆற்றல் இல்லை என்பதை உணர்கிறேன்”எனத் தெரிவித்துள்ளார்.
 
2017 இல் முதன் முறையாக தனது 37 ஆவது வயதில் ஜெசிந்தா ஆர்டெர்ன் நியூசிலாந்தின் பிரதமரானார். அதன்பிறகு 3 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த தேர்தலில் அவரது தலைமையிலான கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. இரண்டாம் முறையாக ஜெசிந்தா ஆர்டெர்ன் தொடர்ந்து பிரதமராக செயல்பட்டு வந்தார்.
 
கொரோனா பரவல், பொருளாதார இழப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை இவர் தலைமையிலான அரசு சமாளித்து வந்தது. மேலும் வெளிநாடுகளுடன் நல்ல உறவை பேணிக்காத்து வந்தார். இந்த ஆண்டு நியூசிலாந்தில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில்தான் விரைவில் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்யலாம் என்ற தகவல்கள் வெளியாகி வந்தன.
 
இந்நிலையில்தான் பிரமதர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜெசிந்தா ஆர்டெர்ன் திடீரென அறிவித்துள்ளார். கடந்த ஐந்தரை ஆண்டுகளாக பிரதமர் பதவி வகித்து வந்த இவர் இந்த அறிவிப்பை வெளியிட்டது கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 
“பதவி விலகலுக்கான நல்ல நேரம் இதுவென நினைக்கிறேன். நான் பதவியில் இருந்து வெளியேறாவிட்டால் அடுத்த தேர்தலில் நம்மால் வெற்றி பெற முடியாது என நம்புகிறேன். இனி வரும் தேர்தலில் நான் போட்டியிடப் போவது இல்லை'' என்றார்.
 
ஜனவரி 22 இல் லேபர் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இதையடுத்து இடைக்கால பிரதமர் தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்கிடையே தான் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததன் பின்னணியில் முக்கிய காரணம் ஒன்று உள்ளது.
 
நியூசிலாந்தில் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பொதுத்தேர்தல் நடைபெறும். கடந்த 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு 2020 இல் தேர்தல் நடந்தது. மீண்டும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக சமீபத்தில் கருத்துக் கணிப்புகள் எடுக்கப்பட்டன. அப்போது கட்சியின் புகழ் என்பது மக்கள் மத்தியில் குறைந்து வருவதாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. மேலும் இது கட்சிக்கு வரும் தேர்தலில் பாதகத்தை ஏற்படுத்தலாம் என கூறப்பட்டது. இந்நிலையில்தான் ஜெசிந்தா ஆர்டெர்ன் பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
ஆயினும் கொரோனா பரவல் காலத்திலும், பொருளாதார இழப்பு உள்ளிட்ட ி இவர் தலைமையிலான அரசு சமாளித்து வந்த விதமும், மேலும் வெளிநாடுகளுடன் நல்ல உறவை பேணிக்காத்து வந்த ஜெசிந்தா ஆர்டெர்ன் ஆளுமை மிகுந்த பெண் பிரதமராக கணிப்பிடப்படுகிறார்.
 
ஐங்கரன் விக்கினேஸ்வரா...

அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18