விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

உக்ரைன் – ரசிய மற்றும் ஈழத்தமிழர் விவகாரம்- இரட்டைத் தன்மையைப் பின்பற்றும் இந்தியா

18 October, 2022, Tue 14:41   |  views: 3911

ரசிய – உக்ரெய்ன் போரில் இதுவரை நாளும் மௌனமாக இருந்த இந்தியா தற்போது  வாய்திறப்பது போன்று  பாசாங்கு செய்கிறது. உக்ரெய்னில் கைப்பற்றப்பட்ட நான்கு பிராந்தியங்களில் கடந்த மாதம் வாக்கெடுப்பு நடத்திய ரசியா, அந்தப் பகுதிகளை தனது நாட்டுடன் இணைக்கத் தீர்மானித்திருந்தது. இதன் பின்னரான சூழலிலேயே இந்தியாவுக்குப் பெரும் சோதனை ஏற்பட்டது.
 
ஐக்கிய நாடுகள் சபையில் உக்ரெய்ன் விவகாரம் தொடர்பாக ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற ரசியாவின் கோரிக்கையை இந்தியா நிராகரித்தது. இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற  செய்தியாளர் சந்திப்பில், ரசியா – உக்ரெய்ன் மோதலில் இந்தியாவின் நிலைப்பாட்டை வெளியிட மறுத்துவிட்டார்.
 
ஆனாலும் போர் என்ற கருத்தை இந்தியா ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்றும் ஜெய்சங்கர் வியாக்கியானம் செய்திருந்தார்.
 
இந்த நிலையில் உக்ரெய்னில் நான்கு பிராந்தியங்களை ரசியா இணைத்ததைக் கண்டிக்கும் வரைவுத் தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற ரசியாவின் கோரிக்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளது.
 
சென்ற திங்கட்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. உக்ரைய்னில் உள்ள டொனெட்ஸ்க், கெர்சன், லுஹான்ஸ்க் மற்றும் ஜபோரிஜியா ஆகிய பகுதிகளை சட்டவிரோதமாக இணைத்ததாகக் குற்றம் சுமத்தி ரசியாவைக் கண்டிக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற ஐ.நா  திட்டமிட்டிருந்தது.
 
ஐ.நா பொதுச் சபையில் ரசியா ரகசிய வாக்கெடுப்பை கோரியதற்கு இந்தியா உட்பட நூற்று ஏழு உறுப்பு நாடுகள்  ஒப்புக்கொள்ளவில்லை. ரசியாவின் கோரிக்கைக்கு ஆதரவாக பதின்மூன்று நாடுகள் மட்டுமே வாக்களித்தன, மீதமுள்ள முப்பத்து ஒன்பது நாடுகள் வாக்களிக்கவில்லை. ரசியாவும் சீனாவும் வாக்களிக்காத நாடுகள்.
 
ரசியாவின் ரகசிய வாக்கெடுப்புக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின்னர் இந்த முடிவை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று ரசியா கோரியது. ஆனால், ரசியாவின் இந்த கோரிக்கை மீள்பரிசீலனை செய்யப்படவில்லை. இந்தியா உட்பட நூறு நாடுகள் மீள்பரிசீலனைக்கு எதிராக வாக்களித்தன. பதினாறு நாடுகள் ஆதரவாக வாக்களித்தன, முப்பத்து நான்கு நாடுகள் வாக்களிக்கவில்லை.
 
இங்கு இந்தியா பகிரங்க வாக்களிப்பையே கோரியிருந்தது. இதன் காரணமாக நடத்தப்பட்ட பகிரங்க வாக்கெடுப்பில், ஆதரவாக நூற்று நாற்பத்து மூன்று வாக்குகளும் எதிராக ஐந்து வாக்குகளும் பெறப்பட்டன. முப்பத்து ஐந்து நாடுகள் வாக்கெடுப்பில் இருந்து விலகிக் கொண்டன. சீனா, இந்தியா, பாகிஸ்தான். இலங்கை போன்ற நாடுகளே வாக்களிப்பில் இருந்து விலகிக் கொண்டன.
 
அமெரிக்கா, பிரித்தானியா போன்ற மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.
 
ஆகவே ரசியாவின் ரகசிய வாக்கெடுப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்த இந்தியா, உக்ரெய்னின் நான்கு பிராந்தியங்கள் ரசியாவுடன் இணைக்கப்பட்டமை தவறானது என்ற தீர்மானத்துக்கு ஆதரவாகவோ எதிராகவோ வாக்களிக்காமல் விலகியது.
 
ஆனால் எதிரும் புதிருமான நாடுகளான இந்தியாவும் பாகிஸ்தானும் வாக்கெடுப்பில் இருந்து விலகியமைக்கான காரணங்கள் ஒரேமாதிரியானவை அல்ல.
 
சர்வதேச அங்கீகாரத்துடன் இணைக்கப்பட்டிருந்த இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம், 2019 ஆண்டு ஓகஸ்ட் மாதம் இந்திய மத்திய அரசினால் இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது, அதற்கு எதிராக பொதுச் சபையில் ஐ.நா. ஏன் வாக்கெடுப்பு நடத்தவில்லை என்ற கேள்வியையே பாக்கிஸ்தான் முன்வைத்தது.
 
இதன் காரணமாகவே உக்ரெய்னின் நான்கு பிராந்தியங்களை ரசியா தனது நாட்டுடன் இணைத்தமைக்கு எதிராக ஐ.நா நடத்திய வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்ற காரணங்களையும் பாக்கிஸ்தான் முன்வைத்தது.
 
ஆனால் சிக்கலான வாக்கெடுப்புகளில் நடுநிலை வகிப்பது அல்லது வாக்கெடுப்பில் கலந்துகொள்வதைத் தவிர்ப்பது என்பது இந்தியாவின் நிலைப்பாடு. ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை விவகாரத்திலும் அவ்வாறான ஒரு நிலைப்பாட்டையே இந்தியா கடைப்பிடித்தும் வருகின்றது.
 
அயல் நாடுகளான இந்தியா, பாக்கிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் ரசியச் சார்பு நிலையில் இருந்தாலும், உக்ரெய்ன் விவகாரத்தில் ரசியாவுக்கு ஆதரவாக வாக்களிக்காமல் தவிர்த்ததன் மூலம் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இரண்டு நாடுகளும் சேர்ந்து இயங்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
 
ஏனெனில் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் தவிர்த்தமைக்குப் பாக்கிஸ்தான் சொல்லும் காரணம் இந்தியாவுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமேயில்லை.
 
சீனா ரசியாவின் நட்பு நாடாக இருந்தாலும், மற்றொரு நாட்டின் இறைமை மீறப்படுகின்றது என்ற பொதுவான சர்வதேசக்  குற்றச்சாட்டுக்களை வெளியில் இருந்து நியாயப்படுத்துவது போன்ற ஒரு தோற்றப்பாட்டைக் காண்பிக்க முற்படுகின்றது.
 
இலங்கையைப் பொறுத்தவரை, சீன – இந்திய அரசுகளின் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு வாக்கெடுப்பில் இருந்து விலகியது என்பது வெளிப்படை.
 
இந்த நிலையில் பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டதால், ஐ.நா.பொதுச் சபையில் உறுப்பு நாடுகள் தங்கள் கருத்துக்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்தும் உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக ஐ.நாவுக்கான ரசியத் தூதுவர் வாசிலி நெபென்சியா குற்றம் சுமத்தியிருக்கிறார்.
 
இப் பின்னணியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரசியா தொடர்பான அவுஸ்திரேலியச் செய்தியாளர்களின் கேள்விக்கு, இந்தியத் தேசிய நலன்கள் என்ற தொனியில் பதில் வழங்கியிருக்கிறார்.
 
அதாவது உக்ரைய்னில் என்ன நடக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு இந்தியா ரசியாவுடனான உறவை மறுபரிசீலனை செய்கிறதா மற்றும் ரசிய ஆயுத அமைப்புகளை இந்தியா நம்புவதை குறைக்க வேண்டுமென நினைக்கிறீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ரசியாவுடனான உறவு இந்தியத் தேசிய நலன்கள் சார்ந்தது என்று விளக்கமளித்திருக்கிறார் ஜெய்சங்கர்.
 
அத்துடன் பல தசாப்தங்களாக, மேற்கத்திய நாடுகள் இந்தியாவிற்கு ஆயுதங்களை வழங்கவில்லை. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சர்வதேச சமூகத்தில் அதன் சொந்த நலன்களை அடிப்படையாகக் கொண்டது எனவும் கூறியிருக்கிறார்.
 
ரசியாவுடன் ஒத்துழைப்பைப் பேணும்போது, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளோடு நெருக்கமாக இருப்பதுடன், பரந்த சர்வதேச சூழலில் இந்தியா அதிகபட்ச நலன்களை நாடுவதாகவும் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டியிருந்தார்.
 
ஆனால் இந்தியாவுக்கு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பட்டம் உள்ளிட்ட பல பயன்பாடுகளை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகமும் ஐரோப்பிய நாடுகளும் வழங்கியுள்ளன. அமெரிக்கா, இந்தியாவிற்கு பாதுகாப்பு உதவியாக பல பில்லியன் டொலர்களை வழங்கியுமுள்ளது.
 
இந்தியாவுடன் இராணுவத் தகவல், தளபாடப் பரிமாற்றம், இணக்கத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய நான்கு பாதுகாப்பு ஒப்பந்தங்களில் அமெரிக்கா கையெழுத்திட்டுமுள்ளது.
 
இந்தியாவுடன் முக்கியமான செயற்கைக்கோள் உளவுத்துறையை பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தத்திலும் அமெரிக்கா கையெழுத்திட்டுள்ளது.
 
இந்தோ – பசுபிக் பிராந்தியத்தை மையப்படுத்திய குவாட் இராணுவ அமைப்பிலும் இந்தியாவுக்குத் தலைமைப் பொறுப்பை அமெரிக்கா வழங்கியுமுள்ளது. ஆகவே இப் பின்னணியில் உக்ரெய்னில் ரசியா மேற்கொள்ளும் நகர்வுகளுக்கு எதிரான அமெரிக்க வியூகத்திற்கு மாறாக இந்தியா செயற்படுகின்றது.
 
குறிப்பாக ரசியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை இந்தியா கனகச்திதமாகப் பேணி வருகின்றது.
 
ஆகவே இந்தியாவின் இந்த இரட்டைத் தன்மை (Duality) பற்றி மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் எவ்வாறு புரிந்துகொள்கின்றன என்பதிலும் கேள்விகள் இல்லாமலில்லை. ரசியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடை விவகாரத்தில் கூட இந்தியா மாத்திரமல்ல பிரிக்ஸ் நாடுகளும் ஒத்துழைக்க மறுத்திருக்கின்றன.
 
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அழைப்பில் பிரதமர் நரேந்திர மோடி 2022 ஜூன் 23-24 அன்று காணொலி மூலமாக நடைபெற்ற பதின் நான்காவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். அதாவது ரசியாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென அமெரிக்கா உள்ளிட்ட மேற்குநாடுகள் தீர்மானித்திருந்த நிலையில் இந்த மாநாட்டில் நரேந்திரமோடி பங்குபற்றியிருந்தார்.
 
சீனாவுடனான பொருளாதார ஒத்துழைப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்களில் பிரிக்ஸ் மாநாட்டில் இணக்கமும் ஏற்பட்டிருந்தது.
 
ஆகவே இதன் பின்னணியில் உக்ரெய்ன விவகாரத்தில் ரசியா கோரிய ரகசிய வாக்கெடுப்புக்கு மாத்திரம் எதிர்ப்புத் தெரிவித்துவிட்டுப் பின்னர் பகிரங்கமாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் வாக்களிக்காமல் தவிர்த்ததன் மூலம் இந்தியாவின் சர்வதேச இரட்டை அணுகுமுறை பட்டவர்த்தனமாகிறது.
 
இதேபோன்று ஈழத்தமிழர் விவகாரத்திலும் இந்தியாவின் இரட்டைத் தன்மை  அணுகுமுறை குழப்பங்களையே உருவாக்கி வருகின்றன.
 
ரசிய – உக்ரெயன் விவகாரம் பேரரசுகளுடன் சம்மந்தப்பட்டதுதான். ஆகவே புவிசார் அரசியல் – பொருளாதார பின்புலங்களை மையப்படுத்தியதாக இந்தியாவின் இரட்டைத் தன்மை அணுகுமுறை அமைந்தது என்று புதுடில்லி அதற்குக் காரணம் கற்பிக்கக்கூடும்.
 
ஆனால் ஈழத்தமிழர் என்பது சிறிய தேசிய இனமாக இருந்தாலும், அந்த இனத்தின் அரசியல் விடுதலை விவகாரத்தைக் கையாளும் முறையும், அந்த இனத்தை ஒடுக்குகின்ற சிங்கள ஆட்சியாளர்களுடனான உறவும் முன்னுக்கும் பின் முரணானது.
 
தனது அயல்நாடான மிகச் சிறிய இலங்கைத்தீவு விவகாரத்தில்கூட இந்தியா இரட்டைத் தன்மையைக் கொண்டிருக்கிறது என்றால், ஈழத்தமிழ் இனம் சார்ந்த தேவையற்ற கற்பனையான அச்சநிலை புதுடில்லிக்கு இருக்கின்றது என்பதே அதன் பொருள்.
 
தமிழர்கள் கோருகின்ற இன அழிப்பு விசாரணை அல்லது மிகக் குறைந்த பட்சமாகச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திடம் இலங்கையைப் பாரப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கைக்கு, விரும்பியோ விரும்பாமலோ அமெரிக்க உள்ளிட்ட மேற்குலகமும் ஐரேப்பிய நாடுகளும் ஒப்புக்கொண்டாலும், நிரந்தர அரசியல் தீர்வு என்று வரும்போது இந்தியாவிடம் கேட்க வேண்டும் என்ற தொனியையே இந்த நாடுகள் வெளிப்படுகின்றன.
 
ஆனால் இந்தியா ஒருபோதும் குறைந்த பட்சத் தகுதியுடைய சர்வதேச விசாரணைக்குக் கூட உடன்படாது என்பதை ஜெனிவாவில் 2012 ஆம் ஆண்டில் இருந்து காண முடிகின்றது. அரசியல் தீர்வு என்றாலும் 13 ஆவது திருத்தச் சட்டத்தையே இந்தியா வலியுறுத்தியும் வருகின்றது.
 
இம்முறை 13 ஆவது திருத்தச் சட்டத்தைக்கூட மேற்குலகமும் ஐரோப்பிய நாடுகளும் ஜெனீவா தீர்மானத்தின் பூச்சிய வரைபில் முன்வைக்கவில்லை. ஏனெனில் இந்தியாவுடன் ஏற்பட்ட சில இடைவெளிகளே அதற்குக் காரணம் என்பதும் கண்கூடு.
 
1987 இல் கைச்சாத்திடப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் இணைப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணத்தை, இலங்கை அரசாங்கம் 2006 இல் தன்னிச்சையாக உயர் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் இரண்டாகப் பிரித்தது.
 
இதனால் சர்வதேச ஒப்பந்தம் ஒன்றை ஒரு நாடு எவ்வாறு தன்னிச்சையாக மீற முடியும் என்ற கேள்விகள் எழு(ந்தன. ஆனால் இதுவரையும் அது பற்றி இந்தியா எந்தவொரு விளக்கத்தையும் இலங்கை அரசாங்கத்திடம் கேட்கவேயில்லை.
 
மாறாக அந்த ஒப்பந்த்தின் மூலம் உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டுமென இலங்கை அரசாங்கத்திடமும் தமிழ்த் தரப்பிடமும் தொடர்ச்சியாக இந்தியா கோரி வருகின்றது.
 
ஆகவே அமைச்சர் ஜெய்சங்கர் அவுஸ்திரேலியாவில் கூறியது போன்று இந்தியத் தேச நலன் என்பதை மையமாகக் கொண்ட சர்வதேச வெளியுறவுக் கொள்கையில் உள்ள இரட்டைத் தன்மை, ரசிய – உக்ரெய்ன் போர் விவகாரத்திலும் குறிப்பாக ரசியா குறித்த அணுகுமுறையிலும், ஈழத்தமிழர் மற்றும் இலங்கை விவகாரத்திலும் எவ்வளவு தூரம் சாதகமான விளைவைக் கொடுத்திருக்கின்றது என்பதைப் புதுடில்லி பகிரங்கப்படுத்துமா?
 
இலங்கை விவகாரத்தில் அதுவும் ஈழத்தமிழர்களின் நிரந்தர அரசியல் தீர்வு விடயத்தில் இந்திய நலன்சார்ந்து செயற்படும் அமெரிக்கா, எதிர்காலத்தில் ரசிய விவகாரத்தில் இரட்டைத் தன்மையுடைய இந்திய வெளியுறவுக் கொள்கையைத் தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ளுமா என்பதும் இங்கு கேள்வியே.
 
2009 இற்குப் பின்னரான இலங்கை விவகாரம் மற்றும் பிரிக்ஸ் நாடுகள் குறித்த அமெரிக்க அணுகுமுறைகளின் தவறுகளும் இந்தியாவின் இரட்டைத்தன்மைக்குச் சாதகமாக உள்ளன என்ற குற்றச்சாட்டுக்களை யாரும் முன்வைத்தால் அதனை மறுக்க முடியாது.
 
சீனாவும் இந்தியாவுடன் மேற்கொண்டு வரும் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகச் செயற்பாடுகளும் இந்திய இரட்டைத் தன்மைக்குச் சாதகமாகவேயுள்ளன.
 
இந்த இடத்திலேதான் எழுபது வருடங்கள் அரசியல் போராட்டம் நடத்திய தமிழ்த் தரப்பு இந்தியாவை மாத்திரமே நம்பிக் கொண்டிருக்கின்றது. கொழும்பில் உள்ள சீனத் தூதுவரைச் சந்திப்பதற்குக்கூட தமிழ்த்தேசியக் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் தயங்குகின்றன.
 
ஒன்றுக்கொன்று நலன் என்ற அடிப்படையில் எவ்வாறு அமெரிக்க – இந்திய அரசுகள் மற்றும் சீன – இந்திய அரசுகள் இயங்குகின்றதோ, அதேபோன்ற ஒரு அணுகுமுறையைப் பாதிக்கப்பட்ட தமிழ்த்தரப்பு பின்னபற்ற வேண்டும்.
 
கோரிக்கையை விட்டுக்கொடுக்காமலும், நியாயப்படுத்தியும் அழுத்தம் திருத்தமாக ஒருமித்த குரலில் உரத்துச் சொல்லும்போது, புவிசார் அரசியல் – பொருளாதாரப் பின்னணி கொண்ட வல்லரசுகள் நிச்சயமாகச் செவிசாய்க்க வேண்டிய கடப்பாடு தோற்றுவிக்கப்படும்.
 
நன்றி - அ.நிக்ஸன் 
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18