ராசாராமன் என்னும் வியாபாரி கிளியூர் என்னும் ஊரில் வாழ்ந்து வந்தான். கிளியூர் சிறு ஊர், அங்குள்ள மக்கள் அப்பாவிகள். ஆனால் ராசாராமன் வியாபாரம் செய்வதில் படு புத்திசாலி. எப்பேர்பட்ட சரக்கையும் விற்று பணமாக்கி விடுவான்.
அந்த ஊரில் அவன் கடை மட்டுமே இருப்பதால் அந்த ஊரில் உள்ளவர்களும் வேறு வழியில்லாமல் அவனிடமே பொருளை வாங்குவர். இதனால் எப்படியும் நம்மிடம்தானே வாங்க வருவார்கள் என்ற நம்பிக்கையில், கடையில் பலசரக்குகளில் கலப்படம் செய்து வியாபாரம் செய்வான். இதனால் பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்ட்தும் உண்டு.. என்ன செய்வது? அவனை தவிர அந்த ஊரில் பணம் போட்டு கடை நடத்த முடியாதே?
ஒரு நாள் மதியம் மூன்று மணி இருக்கலாம் கடையில் கூட்டமும் இல்லை. ஒரு கார் வந்து கடை ஓரத்தில் வந்து நின்றது. காரில் இருந்து நவ நாகரிகாமான ஒருவர் இறங்கி கடையை நோக்கி வந்தார்.
ராசாராமன் வருபவர் பெறும் பணக்காரராய் இருக்கவேண்டும் என்று முடிவு செய்தான். வந்தவரின் நடை உடை பாவனைகள் அப்படி இருந்தன. இங்க ராசாராமன்னு? அவனிடமே கேட்டார்.
நான்தான் ராசாராமன், நீங்க யாரு? உங்களுக்கு என்ன வேணும்?
நான் பக்கத்து டவுனுக்குள்ள “ஹோல் சேல்ஸ் கடை” வச்சிருக்கேன். எங்க கடையில மொத்த சரக்கை உங்களை மாதிரி ஊருக்குள்ள இருக்கற சின்ன கடையில நாங்களே கொண்டு வந்து சப்ளை பண்ணிடுவோம். அதுக்கான விலையும், உங்களுக்கு வியாபாரம் ஆன தொகையை வாரமோ இல்லை பத்து நாளைக்கு ஒருக்கவோ எங்க ஆளுங்க வந்து வசூல் பண்ணிக்குவாங்க. பக்கத்து ஊர்ல இதை பத்தி பேசும்போது உங்களை பத்தி சொன்னாங்க, அதுதான் உங்களை பாக்க வந்துருக்கேன். நீங்க உங்க பணம் எதுவும் முதல்ல கடையில போட வேண்டாம். எங்க சரக்கை போட்டு வியாபாரம் பண்ணுங்க, உங்களுக்கு வித்ததுல இருபது சதவிகிதம் எடுத்துக்குங்க, பாக்கிய நாங்க வாங்கிக்கறோம்.
இது நல்ல “டீலிங்காகத்தான்” தெரிந்தது ராசாராமனுக்கு, தான் இனிமேல் சொந்த காசு போட்டு கொள் முதல் செய்ய வேண்டியதில்லை. சரக்கு அவர்கள் கொண்டு வந்து போட்டு விடுவார்கள். நான் அதனை விற்று லாபம் பார்த்து விடலாம், அவர்கள் போட்ட சரக்குக்கு எண்பது சதவிகிதம் கொடுத்தால் போதும், அது போக அவர்கள் கொடுக்கும் சரக்கில் நம் சரக்கையும் கலப்படம் செய்து விட்டால் இன்னும் கொஞ்சம் பணம் அதிகமாக கிடைக்கும். மனக்கணக்கு போட்டு பார்த்தான்.
வந்தவர் தன் மீசையை மெல்ல வருடியபடி நீங்க நல்லா யோசனை பண்ணி எனக்கு போன் பண்ணுங்க. நீங்க போன் பண்ணுன பின்னாடி எங்க ஆளுங்க உங்க கடைக்கு சரக்கை கொண்டு வந்து இறக்கிடுவாங்க. தனது தொலை பேசி எண்ணை எழுதி கொடுத்து விட்டு நான் வரட்டுமா? கிளம்பினார்.
ராசாராமன் ஐயா, இருங்க காப்பி சாப்பிட்டுட்டு போகலாம், இவனே எதிரில் உள்ள டீ கடைக்கு அவரை கூட்டி சென்றான். நீங்க என் கூட வந்துட்டா கடையை யார் பாத்துக்குவாங்க? வந்தவர் கேட்டதற்கு இந்த ஊர் மக்கள் ரொம்ப நியாயமானவங்க, நான் வர்ற வரைக்கும் காத்திருந்து சாமான் வாங்கிட்டு போவாங்களே தவிர எந்த பொருளையும் தொடக்கூட மாட்டாங்க, பெருமையுடன் சொன்னான்.(அப்படிப்பட்ட மக்களுக்காகவாவது இவன் நியாயமாய் நடக்கணும் இல்லையா குட்டீஸ்)
ஒரு வாரத்தில் இவன் தன்னுடைய சரக்கை எல்லாம் விற்று பணமாக்கிவிட்டான். அந்த பணத்தை ஒரு இடத்தில் பத்திரப்படுத்தியும் விட்டான். அதன் பின் அவர் சொன்ன தொலைபேசி எண்ணுக்கு போன் செய்தான்.
தான் அவர் கடையில் சரக்கு எடுத்துக்கொள்வதாகவும், அதற்கான பட்டியலை சொல்வதாகவும் தெரிவித்தான். அவர்களும் இவன் கேட்ட அனைத்தையும் எழுதிக்கொண்டு, சரக்கை அனுப்பி வைப்பதாக சொன்னார்கள்.
சொன்னது போலவே மறு நாள் காலையில் ஒரு மாட்டு வண்டியில் இவர்கள் கேட்ட அனைத்து சர்க்குகளும், இறக்கப்பட்டன. இறக்கிய பொருட்களுக்கான தொகையும் ஒரு சீட்டில் எழுதப்பட்டு அவரிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டனர். அடுத்த வாரம் வந்து விற்ற அளவுக்கு பணத்தை பெற்றுக்கொள்வதாக சொல்லி சென்றனர்.
இப்படி மூன்று மாதங்களுக்கு வரவு செலவுகள் நடந்து கொண்டிருந்தன. .
ஒரு நாள் அன்று வந்தவர் ராசாராமனை பார்க்க வந்தார். ஐயா வாங்க அவரை வரவேற்று உபசரித்தான். அவர் மெதுவாக அவனிடம் வந்து ஐயா உங்க கிட்ட ஒரு இரகசியம் சொல்லணும், இங்க யாரும் இல்லையே என்று கேட்டார்..
ராசாராமன் குனிந்து எதுன்னாலும் சொல்லுங்க ஐயா? இந்த ஊர் ஆளுங்க ரொம்ப நல்லவங்கன்னு சொல்லியிருக்கனே. யாரும் வரமாட்டாங்க,
ஒண்ணுமில்லை எங்கிட்ட கொஞ்சம் பணம் இருக்கு, அதை இங்க வச்சுட்டு போனா பத்திரமா இருக்குமா? இரகசியமாய் கேட்டார்.
பணம் என்றவுடன் ராசாராமனின் கண்கள் விரிந்தன. சுற்று முற்றும் பார்த்தான் யாரும் இல்லை, எடுத்துட்டு வாங்கய்யா? அவசரமாய் சொன்னான்.
அவர் கார் டிக்கியிலிருந்து ஒரு சூட்கேசை எடுத்து வந்தார். கடையை தாண்டி இருந்த அவன் வீட்டுக்குள் அவரை அழைத்து சென்றவன், கதவை சாத்திக்கொண்டு எவ்வளவு இருக்குங்கய்யா?
அவர் பெட்டியை திறந்து காட்டினார். இவனுக்கு மூச்சே அடைத்தது போல் இருந்தது. அவ்வளவு பணம் கரன்சியாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
எடுத்து எண்ணி பாருங்க, அவர் புன்னகையுடன் சொன்னார். இவனுக்கு அவ்வளவு பணத்தை பார்த்த்தில்லை என்றாலும் அதை தொட்டு பார்க்க ஆசை. ஆசைக்காக ஒரு கட்டை எடுத்து பட பட வென விரித்து பார்த்தான். அதனுடைய மொடமொடப்பு அவனுக்கு ரொம்ப மகிழ்ச்சியாய் இருந்தது.
சரி இது பத்திரமா உங்க கிட்டே இருக்கட்டும், நான் ஆறு மாசம் கழிச்சு வந்து வாங்கிக்கறேன், அதுக்குள்ள உங்களுக்கு முக்கியமான செலவு எதுனா ஏற்பட்டுச்சுன்னா தைரியமா இதுல இருந்து எடுத்து செலவு பண்ணுங்க, ஆனா பார்த்துக்குங்க, உங்க கிட்ட நிறைய பணம் இருக்குதுன்னு தெரிஞ்சா திருடனுங்க புகுந்துடுவானுங்க..அவர் சொல்லவும், தன்னை எடுத்து செலவு செய்ய சொல்லி விட்டாரே என்கிற சந்தோசத்தில் தலை கால் புரியாமல் நீங்க கவலைப்படாதீங்க, நான் பாத்துக்கறேன்.
அவருக்கு விடை கொடுத்தான். அவர் கார் ஏற போனவர் ஏதோ ஞாபகம் வந்தவர் போல் அது இருக்கட்டும், எனக்கு இப்ப் கொஞ்சம் பணம் தேவைப்படும், இந்த கரன்சியை எடுத்தா வீணா பிரச்சினைதான் வரும். உங்க கிட்ட பணம் ஏதாவது இருந்தா கொடுங்க.
ராசாராமன் சந்தோசத்தின் உச்சியில் இருந்தான், என்ன இப்படி கேட்டுட்டீங்க, இவ்வளவு பணம் கொடுத்துட்டு உங்களை சும்மா அனுப்ப முடியுமா? இருங்க வர்றேன். வீட்டுக்குள்ளே சென்றவன், தான் கடைச்சரக்கை விற்று வைத்திருந்த பணம் மொத்த்த்தையும் எடுத்து வந்தான். ஐயா இதுல ஒரு லட்சம் பக்கம் இருக்கு. என்னோட மொத்த பணம், குலைந்து கொண்டே சொன்னான்.
அவர் ராசாராமின் தோளை தட்டி கொடுத்து, உங்க உதவியை மறக்க மாட்டேன், நீங்க எவ்வளவு வேணுமின்னாலும் எடுத்து செலவு பண்ணுங்க, ஆனா பத்திரம், சொன்னவர் அவனிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு காரில் ஏறி சென்றார்.
ஆறு மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது, அவர் வரவே இல்லை. போன் செய்தாலும் எடுக்கவில்லை. மறுபடியும் சரக்கு எடுக்கவும் வழியில்லை. தான் சரியாக கடை விவரங்களை கேட்டு கொள்ளாததால் சரக்கு எங்கு போய் வாங்குவது என்று திகைத்தான்.
சரி வழக்கம்போல பழைய கடையிலேயே டவுனுக்கு போய் சரக்கு வாங்கி வியாபாரம் செய்யலாம் என்று நினைத்தவன், அந்த சூட்கேசை திறந்து இரண்டு கட்டு பணத்தை எடுத்துக்கொண்டு பக்கத்து ஊருக்கு சென்றான்.
கடைக்கு சரக்கு வாங்கிய பின், சரக்குக்கு உண்டான தொகையாக இவன் எடுத்து வந்த பணக்கட்டை அவர்களிடம் கொடுத்தான். அவர்கள் அதை மேலும் கீழும் பார்த்து விட்டு, அவனிடம் இந்த பணத்தை எங்க வாங்கனீங்க என்று கேட்டனர்.
இவனுக்கு கொஞ்சம் பயம் வந்த்து, இருந்தாலும், சமாளித்துக்கொண்டு, ஒரு பார்ட்டி கொடுத்துச்சு என்றான்.
அவர்கள் சிரி சிரி என்று சிரித்து நல்லா ஏமாந்திட்டீங்களா? சிரித்தனர. இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. நல்லா பாருங்க காண்பித்தனர்.அப்பொழுதுதான் கவனித்தான். பணம் ஒரு கட்டு அறுபது ரூபாயாகவும், மற்றொரு கட்டு எழுபது ரூபாயாகவும் இருந்தது..
தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதை உணர்ந்தவன், வேகம் வேகமாக ஊருக்கு வந்து சூட்கேசை திறந்து அதில் உள்ள பணத்தை கொட்டி பார்த்தான்.அது எல்லாமே அறுபதாகவும், எழுபதாகவுமே இருந்தது. தலையில் கை வைத்து உட்கார்ந்து கொண்டவன், தான் வீட்டில் வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் அளவுக்கு பணத்தை அவனிடம் கொடுத்தனுப்பியது ஞாபகத்துக்கு வந்தது.