உபாதையால் அவதிப்பட்டு வந்த இந்தியக் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் கேதர் ஜாதவ், உடற் தகுதி பெற்று விட்டதாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
இதனால், 22ஆம் திகதி இங்கிலாந்து செல்லும் இந்திய அணியினருடன் கேதர் ஜாதவும் செல்ல உள்ளார்.
நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவந்த கேதர் ஜாதவ், பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில், பந்தை தடுக்க பாய்ந்து விழுந்த போது இடது தோள்பட்டையில் காயம் அடைந்தார்.
இதனையடுத்து, அவரது காயம் பெரிதாகி விட்டால் உலகக்கிண்ண தொடரில் பங்கேற்க முடியாது என்பதால், ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகினார்.
இதன்பிறகு கேதரின் உடல் நலனை கவனித்து வந்த இந்திய கிரிக்கெட் அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் பர்ஹர்ட், அவர் குணமடைய பயிற்சி அளித்து வந்தார்.
இந்தநிலையில், உடல்நிலை தேறி வந்த கேதர் ஜாதவ்வுக்கு, உடல் தகுதி சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் கேதர் குணமடைந்தார். இதனால் அவர் உலகக்கிண்ண தொடரில் விளையாடுவது உறுதியாகியுள்ளது.