குற்றவியல் காவல்துறையினரின் தேடுதல் வேட்டை ஒன்றின் போது, வீடு ஒன்றில் இருந்து குரங்கு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை மாலை Evian-les-Bains ( Haute-Savoie) இல் குற்றவியல் காவல்துறையினர் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அதன் போது, காவல்துறையினரால் நன்கு அறியப்பட்ட நபர் ஒருவர், தடுத்து நிறுத்தப்பட்டார். ஆனால் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். குறித்த நபரை காவல்துறையினர் நன்கு அறிவார்கள் என்பதால், அவரின் வீட்டுக்குச் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதன்போது, அவரது வீட்டில் கஞ்சா மற்றும் கொக்கைன் போதைப்பொருள், €15,000 ரொக்கப்பணம் ஆகியவற்றை அங்கிருந்து கைப்பற்றினர். தவிர, அவரது வீட்டில் விலையுயர்ந்த ஆடம்பர குரங்கு ஒன்று மறைத்துவைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. தவிர, குறித்த 25 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார்.
கடந்த மே மாதத்தில் Var மாவட்டத்தில் புலி குட்டி ஒன்றும், வெள்ளை புலி ஒன்றும் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், காவல்துறையினரால் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.