Paristamil Navigation Paristamil advert login

எனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம்: அண்ணாலை

எனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம்: அண்ணாலை

9 ஆனி 2026 செவ்வாய் 08:23 | பார்வைகள் : 155


அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம், அண்ணாமலை மக்கள் இயக்கம் என, எனது பெயரைப் பயன்படுத்தும் பல்வேறு அமைப்புகள், உடனடியாக எனது பெயரையோ, புகைப்படங்களையோ பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என  அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழக முன்னாள் மாநில பா.ஜ.,தலைவர் அண்ணாமலை, அக்கட்சியை விட்டு விலகி, கடந்த 5ம் தேதி புதிதாக 'இது நம்ம இயக்கம்' துவக்கினார். இயக்கம் துவங்குவதாக அறிவித்ததைத் தொடர்ந்து அந்த இயக்கத்தில் ஏராளமானோர் இணைந்து வருகின்றனர். மாநில அளவில் பா.ஜ.,வில் பொறுப்பு வகித்த பலர், அக்கட்சியிலிருந்து விலகி அண்ணாமலை துவங்கியுள்ள இயக்கத்தில் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தி We the Leaders  இயக்கம் தொடங்கப்பட்ட மூன்று நாட்களில், 17 லட்சம் உறுப்பினர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

தற்போதைய சூழலில், நான் உட்பட, அனைவருமே இந்தப் பேரியக்கத்தின் ஒரு அங்கம் மட்டுமே தவிர, யாருக்கும் எந்தப் பொறுப்புகளோ, பதவியோ வழங்கப்படவில்லை. தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பொறுப்புகள் விரைவில் வழங்கப்படும். நான் முன்பே கூறியிருந்ததைப் போல, நிரந்தரப் பதவி என்பது நமது இயக்கத்தில் இருக்காது. இந்த ஒரு மாத காலம் என்பது உறுப்பினர் சேர்க்கையில் மட்டுமே We the Leaders இயக்கம் ஈடுபடும்.

இந்தச் சூழலில், சில தன்னார்வலர்கள் இணைந்து, எனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி, சில இயக்கங்கள் தொடங்கியிருப்பதாகத் தெரிய வருகிறது. மேலும், மாவட்ட வாரியான பொறுப்புகளும் அந்த இயக்கங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது. இது முறையான செயல் அல்ல., அந்த இயக்கங்களுக்கும், நமது We the Leaders இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஒரு நல்ல நோக்கத்துக்காக தொடங்கப்பட்டுள்ள நமது முயற்சி, ஒரு சிலரின் இது போன்ற செயல்பாடுகளால், நீர்த்துப் போய்விடும்.

ஏற்கனவே, எனது பெயரைப் பயன்படுத்தி அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம் போன்ற  பெயர்களில் தொடங்கப்பட்ட அமைப்புகளுக்கு, இனி எனது பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என சில மாதங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தோம். ஆனால், தொடர்ந்து இது போன்ற செயல்பாடுகளில் அந்த அமைப்புகள் ஈடுபடுவது வருத்தத்திற்குரியது.

எனவே, அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம், அண்ணாமலை மக்கள் இயக்கம் என, எனது பெயரைப் பயன்படுத்தும் பல்வேறு அமைப்புகள், உடனடியாக எனது பெயரையோ, புகைப்படங்களையோ பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நமது இயக்கத்தில் இணைய விரும்பும் சகோதர சகோதரிகள் http://wetheleader.org  என்ற இணையதளம் மூலமாக தங்களை இணைத்துக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை  கூறியுள்ளார்.