Paristamil Navigation Paristamil advert login

ஓமன் கடல் பரப்பில் இந்திய எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்!

ஓமன் கடல் பரப்பில் இந்திய எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்!

9 ஆனி 2026 செவ்வாய் 06:07 | பார்வைகள் : 171


ஓமன் கடற்பரப்பில் இந்தியாவின் எம்.டி.மாரிவேக்ஸ் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் கப்பலில் இருந்த மாலுமிகள் 24 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஓமனுக்கு அருகே ஹார்முஸ் ஜலசந்தியின் தெற்கே, இந்திய மாலுமிகளை ஏற்றிச் சென்ற எம்டி மரிவெக்ஸ் என்ற எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கப்படை தாக்குதல் நடத்தியது. இதில் கப்பலில் தீ பற்றியது. அப்போது கப்பலில் இருந்து மாலுமிகள் 24 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்பதை கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் உறுதிப்படுத்தியது.

இந்த சம்பவம் பிற்பகல் 1:30 மணியளவில் நடந்தது என தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நடந்த நேரத்தில் அந்தக் கப்பல் எந்தச் சரக்கையும் ஏற்றி செல்லவில்லை, இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. நிலைமையைக் கண்காணிப்பதற்கும், மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ஓமனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளது.

மேற்கு ஆசியாவில் அதிகரித்துள்ள பாதுகாப்பு குறித்த கவலைகளுக்கு மத்தியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு நிலவும் பிராந்திய பதட்டங்கள், கடல்சார் பாதுகாப்பு மற்றும் வர்த்தகக் கப்பல் வழித்தடங்கள் குறித்த அச்சங்களை அதிகப்படுத்தியுள்ளன.

இந்தச் சம்பவம் நடந்தபோதிலும், நாடு முழுவதும் துறைமுகச் செயல்பாடுகள் இயல்பாக இருப்பதாகவும், கடல்வழிப் போக்குவரத்தில் எந்த இடையூறும் ஏற்படவில்லை என்றும் இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இந்திய மாலுமிகளுக்குத் தொடர்ந்து உதவி வருவதாகவும், அவர்களை தாயகம் அழைத்து வரவும் அனைத்து அவசர கால நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.