ஓராண்டுக்கு தங்கம் வாங்காதீங்க; நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
11 வைகாசி 2026 திங்கள் 09:37 | பார்வைகள் : 1670
ஓராண்டு காலத்துக்கு தங்கம் வாங்க வேண்டாம், வெளிநாட்டு சுற்றுலாவையும் தவிர்க்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, 9,400 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ஹைதராபாத் - பணஜி பொருளாதார வழித்தடத்தில் அமைந்துள்ள குடேபெல்லூர் முதல் மஹபூப்நகர் வரையிலான தேசிய நெடுஞ்சாலையை, நான்கு வழிச்சாலையாக விரிவுப்படுத்தும் திட்டம், சங்காரெட்டி மாவட்டத்தில் அமைய உள்ள ஜஹீராபாத் தொழிற்பேட்டை திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
அப்போது அவர் பேசியதாவது:மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் சூழலை கருத்தில்கொண்டு, இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலியப் பொருட்களை தேவைக்கேற்ப மட்டுமே நாம் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதன் வாயிலாக, அன்னிய செலாவணியை சேமிப்பது மட்டுமின்றி, போரினால் ஏற்படும் பாதகமான விளைவுகளையும் குறைக்க முடியும்.
கடந்த சில ஆண்டுகளில், சூரிய ஆற்றல் துறையில் உலகின் முன்னணி நாடுகளின் வரிசையில் இந்தியா இடம்பிடித்துள்ளது. பெட்ரோல் எத்தனால் கலப்பு திட்டத்தில் பல்வேறு முன்னோடி பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
மத்திய அரசு, முதற்கட்டமாக 100 சதவீத வீடுகளுக்கு சமையல் காஸ் சிலிண்டர் இணைப்பு வழங்குவதில் அரசு கவனம் செலுத்தியது. தற்போது, குழாய் வழி எரிவாயுவை சிக்கனமான முறையில் வினியோகிப்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. மேலும், சி.என்.ஜி., எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு அமைப்புகளையும் அரசு ஊக்குவித்து வருகிறது. இந்த தொடர் முயற்சி காரணமாக, உலக அளவில் நிலவும் பெரும் எரிசக்தி நெருக்கடியை இந்தியா திறம்பட சமாளித்து வருகிறது.
சீர்திருத்தங்களின் விரைவுப் பாதையில் பயணித்து வரும் இந்தியா, அதே வேளையில் நவீன உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி வருகிறது. ஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம். ஓராண்டுக்கு வெளிநாட்டு சுற்றுலா வேண்டாம். பெட்ரோல் டீசல் பயன்பாட்டை குறையுங்கள். பொது போக்குவரத்தை பயன்படுத்துங்கள் இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், காசிபேட் - விஜயவாடா ரயில் தட திட்டத்தின் பல்வேறு பிரிவுகளையும், ஹைதராபாத்தில் உள்ள க்ரீன்பீல்டு பெட்ரோலியம் மற்றும் எண்ணெய் முனையத்தையும், காசிபேட் ரயில் மேம்பாலத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். வாரங்கலில் உள்ள பிரதமர் மித்ரா பூங்காவும் தொடக்கி வைக்கப்பட்டது. தெலுங்கானா கவர்னர் சிவ பிரதாப் சுக்லா, காங்கிரசைச் சேர்ந்த முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire