இந்தோனேசியாவின் எரிமலையில் இருந்து அபாயகரமான சாம்பல்...
13 கார்த்திகை 2024 புதன் 11:16 | பார்வைகள் : 775
இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு அருகில் உள்ள எரிமலையில் இருந்து அபாயகரமான சாம்பல் வெளியேறியுள்ளது.
அதனால் பல விமான நிறுவனங்கள் தங்கள் சேவைகளை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக அவுஸ்திரேலியா மற்றும் பாலி இடையேயான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குவாண்டாஸ், ஜெட்ஸ்டார் மற்றும் விர்ஜின் அவுஸ்திரேலியா ஆகிய நிறுவனங்கள் ஏற்பட்டுள்ள இடையூறுகள் குறித்து புதன்கிழமை பயணிகளுக்கு அறிவுறுத்தின.
லெவோடோபி லக்கி-லாகி மலையில் இருந்து எழும் சாம்பல் விமானங்கள் பறப்பதை பாதுகாப்பற்றதாக மாற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். குறித்த எரிமலையானது வார இறுதியில் சுமார் 9 கிமீ உயரத்திற்கு சாம்பலை வானத்தில் உமிழ்ந்தது.
எரிமலை வெடித்து 10 பேர்கள் கொல்லப்பட்டதன் ஒரு வாரத்திற்கு பிறகு, அபாயகரமான சாம்பலால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, எரிமலை சாம்பலானது நாட்டின் வடக்குப் பகுதிகளுக்கு நகரக்கூடும் என்று அவுஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், விர்ஜின் அவுஸ்திரேலியா புதன்கிழமை பாலி நோக்கி செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்தது. இதேப்போன்று ஜெட்ஸ்டார் நிறுவனமும் சேவைகளை ரத்து செய்துள்ளது.
ஆனால், மிக விரைவில் பாலி மற்றும் அவுஸ்திரேலியா இடையே பெரிய போயிங் 787 விமானத்தைப் பயன்படுத்தி அதிக பயணிகளை நகர்த்த இருப்பதாக ஜெட்ஸ்டார் அறிவித்துள்ளது.
எரிமலை சாம்பலால் இந்தோனேஷியாவின் இயல்பு வாழ்க்கையும் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கியிலிருந்து 600 கிமீ தொலைவில் உள்ள லாபுவான் பாஜோ நகரில் முன்னெடுக்கப்படவிருந்த ஜாஸ் திருவிழா பாதுகாப்புக் காரணங்களால் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது.