Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

தாய்மையின் சக்தி

தாய்மையின் சக்தி

10 ஆடி 2023 திங்கள் 11:10| பார்வைகள் : 4674


ஒரு மலைப் பிரதேசத்தில் மலை உச்சியில் ஒர் இனத்தாரும், அடிவாரத்தில் இன்னொரு இனத்தாரும் வாழ்ந்து வந்தார்கள். இரு இனத்தாருக்கும் எப்போதும் பகை. 
 
ஒரு முறை உயரத்தில் இருந்தவர்கள் அடிவாரத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையைக் கடத்தி விட்டார்கள்.
 
சமூகத்திலிருந்த சில பெரியவர்கள், மலைமேல் இருந்த சமூகத்தினரிடம் சமாதானமாகப் போய் பேசினால் குழந்தையை மீட்டு வந்து விட சாத்தியம் இருப்பதாக ஊரில் உள்ள இளைஞர்களிடம் அறிவுரை கூறினர்.
 
இளைஞர்கள் சிலர் உடனே முன்வந்தார்கள். அவர்கள் கடினமான வேலைகள் செய்து பழகியவர்கள். எந்தச் செயலை எடுத்தாலும் அதை விடாமுயற்சியுடன் முடிக்கும் மனப்போக்கைக் கொண்டவர்கள். 
 
ஊர் பெரியவர்களும், இந்தச் செயலை முடிக்க இவர்கள்தான் சிறந்தவர்கள் என்று அவர்களை வாழ்த்தி அனுப்பி வைத்தார்கள்.
 
இளைஞர்களும் ஆர்வத்துடன் கிளம்பினார்கள். அந்த மலையின் சில பகுதிகள் மிகவும் செங்குத்தானவை. அந்த இளைஞர்களால் அப்படி ஒரு பகுதியை ஏறிக் கடக்க முடியவில்லை. 
 
விடாமுயற்சியுடன் அப்பகுதியைக் கடக்க பலமணி நேரமாக பல வழிகளில் முயன்று கொண்டிருந்தனர். களைத்துப் போனால் ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் முயற்சித்தனர்.
 
அப்போது தம் ஊரைச் சேர்ந்த ஒரு பெண் மேலேயிருந்து கடத்தப்பட்ட குழந்தையைத் தூக்கிக் கொண்டு கீழே இறங்கி வருவதைப் பார்த்தார்கள். அவள் அருகில் வந்தவுடன் "நாங்கள் ஏற சிரமப்பட்ட மலையை நீ ஏறிச் சென்றுவிட்டாயே! எப்படி?" என்று வியப்புடன் கேட்டார்கள்.
 
அவள் இடுப்பிலிருந்த குழந்தையைக் காட்டி "இது உங்கள் குழந்தை இல்லை. என் குழந்தை. அதுதான் வித்தியாசம்" என்று பதில் சொன்னாள்.