Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

ஜி - 20 உச்சிமாநாடு புது டெல்லியில்  ஆரம்பம்! 

ஜி - 20 உச்சிமாநாடு புது டெல்லியில்  ஆரம்பம்! 

9 புரட்டாசி 2023 சனி 10:05| பார்வைகள் : 1363


ஜி20 அமைப்பின் உச்சிமாநாடு இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் நாளை சனிக்கிழமை (9) ஆரம்பமாகவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (10) வரை நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உட்பட உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் தலைவர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.  இலங்கை உட்பட பல நாடுகளின் கடன் விவகாரங்களும் ஜி20 உச்சிமாநாட்டில் ஆராயப்படவுள்ளன.

புது டெல்லியின் இந்தியா கேட் நினைவுச்சின்னத்துக்கு அருகிலுள்ள பிரகதி மைதானத்தில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 'பாரத் மண்டபம்' எனும் கண்காட்சி அரங்கில் ஜி20 உச்சிமாநாடு நடைபெறவுள்ளது..

20களின் குழு எனும் (குரூப் ஒவ் 20) என்பதன் சுருக்கமே ஜி20 ஆகும். உலகில் பொருளாதாரத்தில் முன்னிலையிலுள்ள 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன இதில் அங்கம் வகிக்கின்றன. 

அமெரிக்கா, சீனா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, ஆர்ஜென்டினா, பிரேஸில், அவுஸ்திரேலியா, ஜப்பான், ரஷ்யா, தென் ஆபிரிக்கா, துருக்கி, தென்கொரியா, இத்தாலி, மெக்ஸிகோ, சவூதி அரேபியா, இந்தோனேஷியா  ஆகியனவே மேற்படி 19 நாடுகளாகும்.

உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 80 சதவீதத்தையும், சர்வதேச வர்த்தகத்தில் 77 சதவீதத்தையும், உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கையும், உலக நிலப்பரப்பில் 60 சதவீதத்தையும் ஜி20 அமைப்பில் அங்கம் விகிக்கும் நாடுகள் கொண்டுள்ளன.  

வர்த்தகம், சுகாதாரம் உட்பட பல விடயங்கள் குறித்த உலகளாவிய ரீதியான கொள்கைகள் ஜி20 மாநாடுகளில் ஆராயப்படுவது வழக்கம்.

ஜி20 வரலாறு


உலகில் பொருளாதாரத்தில் முன்னிலை வகிக்கும் 7 ஜனநாயக நாடுகளைக் கொண்ட ஜி7 அமைப்பு 1973ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. 1999ஆம் ஆண்டின் ஆசிய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் 1999 ஜூன் மாதம் ஜேர்மனியில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில்தான் ஜி20 அமைப்பு ஸ்தாபிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

1999 செப்டெம்பரில் ஜி7 நிதியமைச்சர்களின் மாநாட்டின்போது ஜி20 அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது. 1999 டிசெம்பரில் ஜேர்மனியின் பேர்லின் நகரில் ஜி20 நாடுகளின் முதலாவது நிதியமைச்சர்களின் மாநாடு நடைபெற்றது. கனடாவின் அப்போதைய நிதியமைச்சர் போல் மார்ட்டின் முதலாவது தலைவராக தெரிவுசெய்யப்பட்டார்.

சில வருடங்களின் பின்னர், நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் உச்சிமாநாடாக இதை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

2008ஆம் ஆண்டு அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி நகரில் முதலாவது ஜி20 உச்சிமாநாடு நடைபெற்றது. 2010ஆம் ஆண்டு வரை 2 வருடங்களுக்கு ஒரு தடவை இம்மாநாடு நடத்தப்பட்டது.  2011ஆம் ஆண்டிலிருந்து வருடாந்தம் இது நடைபெறுகிறது.

இம்முறை 18 ஆவது தடவையாக ஜி20 உச்சிமாநாடு நடைபெறுகிறது. இந்தியாவில் இந்த உச்சிமாடு நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும்.

ஜி20 அமைப்புக்கு தலைமையகம் எதுவும் இல்லை. அதன் தலைமைத்துவம் சுழற்சி முறையில் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. 2022 ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் பின், புதிய தலைமைத்துவத்தை இந்தியா பெற்றது.

இந்தியாவுக்கு அடுத்து. எதிர்வரும் டிசெம்பர் 1 முதல் பிரேஸில் தலைமை தாங்கவுள்ளது.

2023 உச்சிமாநாடு

2023 ஜ20 உச்சிமாநாட்டுக்கான தொனிப்பொருள் 'ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு ஒரு எதிர்காலம்' என்பதாகும்.

ஜி20 அமைப்பில் அங்கம் வகிக்கும் 20 நாடுகளுடன் விசேட விருந்தினர்களாக பங்களாதேஷ், எகிப்து, மொரிஷியஸ், நெதர்லாந்து, நைஜீரியா, ஓமான், சிங்கப்பூர், ஸ்பெயின், ஐக்கிய அரபு இராச்சியம், ஐ.நா. சர்வதேச நாணய நிதியம், உலக சுகாதார ஸ்தாபனம், உலக வர்த்தக நிறுவனம், உலக தொழிலாளர் ஸ்தாபனம், உலக வங்கி, ஆபிரிக்க ஒன்றியம், உலக பொருளாதார மற்றும் அபிவிருத்திக்கான ஸ்தாபனம், ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட பல ஸ்தாபனங்களுக்கும்  இம்மாநாட்டில் பங்குபற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் திரளும் உலகத் தலைவர்கள்

ஜி20 உச்சிமாநாட்டுக்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று வெள்ளிக்கிழமை இந்தியா சென்றடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனாக், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோன், ஜேர்மன் சான்;ஸ்லர் ஒலாவ் ஷோல்ஸ், துருக்கிய ஜனாதிபதி தையீப் அர்துவான், அவுஸ்திரேலிய பிரதமர் அந்தனி அல்பானிஸ், ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிதா, சவூதி அரேபிய முடிக்குரிய இளவரசர் சல்மான்,  இத்தாலியப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல், தென் ஆபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா, ஆர்ஜென்டீன ஜனாதிபதி அல்பேர்ட்டோ பெர்னாண்டஸ், நைஜீரிய ஜனாதிபதி போலா டினுபு, இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ. பிரேஸில் ஜனாதிபதி லூலா டா சில்வா, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.

ஐநா  செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரெஸும் இம்மாநாட்டில் அவதானிப்பாளராக கலந்துகொள்வார்.

புட்டின், ஜின்பிங் இல்லை

இந்த உச்சிமாநாமட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் பட்டின், பிரதமர் மோடிக்கு அறிவித்துள்ளார்.  ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்கெய் லவ்ரோவ் இந்த உச்சிமாநாட்டில் பங்குபற்றவுள்ளார்.

சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கும்  இம்மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. அவருக்குப் பதிலாக சீனப் பிரதமர் லீ கியாங் கலந்துகொள்கிறார். சீன ஜனாதிபதி ஒருவர் ஜி20 உச்சிமாநாட்டில் பங்குபற்றாதமை இதுவே முதல் தடவையாகும்.

சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் பங்குபற்றாதிருப்பது, ஜி20 அமைப்பை உலக பொருளாதார ஒத்துழைப்புக்கான பிரதான அரங்காகப் பேணுவதற்கும், அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு நிதிகளை அளிப்பதற்கான முயற்சிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் இந்த உச்சிமாநாட்டில் பங்குபற்றாதாமை குறித்து தான் ஏமாற்றமடைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 

மெக்ஸிக்கோ ஜனாதிபதி அன்ட்ரெஸ்  மனுவெல் லோபஸ் ஒப்ரதோரும் இதில் பங்குபற்றமாட்டார் என செய்தி வெளியாகியுள்ளது.

பசுமை எரிசக்தி பரிமாற்றம், பருவநிலை மாற்றம், பெண்கள் தலைமையிலான அபிவிருத்தி, உக்ரைன் யுத்தம் காரணமான பொருளாதார, சமூக தாக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு  விடயங்கள் குறித்து இம்மாநாட்டில் தலைவர்கள் விவாதிக்கவுள்ளனர்.

ஜி20 உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும் தலைர்கள், இரு தரப்பு கலந்துரையாடல்களிலும் ஈடுபடுவர்.

ஜி21 ஆக மாறுகிறது

55 நாடுகள் அங்கம் வகிக்கும் ஆபிரிக்க ஒன்றியத்துக்கும் ஜி20 குழுவில் அங்கத்துவம் வழங்கும் முயற்சிக்கு இந்த உச்சிமாநாட்டில் நரேந்திர மோடி உந்துதல் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி ஜோ பைடனும் இம்முயற்சிக்கு ஆதரவு அளிக்கிறார். இம்முயற்சி வெற்றியடைந்தால் ஜி20 ஆனது விரைவில் ஜி21 ஆக மாறிவிடும்.

நிகழ்ச்சிநிரல் முன்னுரிமை

2023 ஜி20 உச்சி மாநாட்டில் முன்னுரிமைகளின் பட்டியலை இந்தியா தயாரித்துள்ளது.

காலநிலை நிதி மற்றும் பசுமை மேம்பாடு, அனைத்து நாடுகளுக்கும் பயனளிக்கும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, உலகளாவிய வர்த்தகத்தில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஆதரித்தல், நிலையான அபிவிருத்தி இலக்குகளில் முன்னேற்றத்தை துரிதப்படுத்துதல், தொழில்நுட்ப மாற்றம் மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு தொழில்நுட்பத்தை துரிதப்படுத்துதல்,

21ஆம் நூற்றாண்டுக்கான திறன் கொண்ட மிகவும் பொறுப்பான, உள்ளடக்கிய மற்றும் பிரதிநிதித்துவ சர்வதேச அமைப்பை உருவாக்குதல்,

பெண்கள் தலைமையிலான வளர்ச்சி பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துதல் முதலியவற்றுக்கு இம்முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

ஜி20 உச்சிமாநாட்டில் இலங்கையின் கடன் விவகாரம்

இலங்கை உட்பட பல நாடுகளின் கடன் விவகாரங்களும் ஜி20 உச்சிமாநாட்டில் ஆராயப்படவுள்ள முக்கிய விடயங்களாக உள்ளன.

ஜி20 கட்டமைப்பானது, இலங்கையின் முக்கிய இருதரப்புக் கடன்வழங்குனர்களான சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகியவற்றுடன், பல்தரப்புக் கடன்வழங்கல் கட்டமைப்புக்களில் அங்கம் வகிக்கும் ஆதிக்கம் மிகுந்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய  நாடுகளையும் உள்ளடக்கியுள்ளது.

'சீனா, இந்தியா முதலான இலங்கையின் பிரதான கடன் வழங்குனர்கள் பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கு முன்னர், உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு செயற்பாடுகள் பூர்த்தியடைவதற்கு காத்திருக்கின்றன' என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்திருந்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்தர மோடி இது தொடர்பாக அண்மையில் அளித்த செவ்வியொன்றில், “கடன் நெருக்கடியில்ல் சிக்கியுள்ள குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு உதவுவதற்கான உறுதியான கட்டமைப்பை உருவாக்குவதில் இந்தியா முன்னின்று செயல்படும்.  ஜி 20  உச்சிமாநாட்டில் இதற்கான ஒருமித்த கருத்தை உருவாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான், எகிப்து, எல்சல்வடோர்,கென்யா, உக்ரேன், ஸாம்பியா, கானா முதலான நாடுகளின் கடன்விவகாரங்களும் இம்மாநாட்டில் முக்கியத்துவம் பெறவுள்ளன.

புதுடெல்லி புதுப்பொலிவு

ஜி20 உச்சமாநாட்டுக்காக கடந்த ஜனவரி முதல் நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் வீதியோரங்களிலுள்ள சிறிய கடைகள் ஆகியன அகற்றப்பட்டன என செய்தி வெளியாகியள்ளது.

சுமார் 3 கோடி மக்கள் வசிக்கும் டெல்லி பெருநகரப் பகுதியில் தற்போது, வீதிகள் கட்டிடங்கள், மதில்கள், புதுப்பிக்கப்பட்டு, அழகுபடுத்தப்பட்டுள்ளன. கட்டடங்களில் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

வீதிகளில் வசித்த சுமார் 4,000 பேர் வேறு தங்கும் இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

28 அடி உயரமான நடராஜர் சிலை உட்பட பல சிலைகள் ஜி20 அரங்கின் நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ளன.

புதுடெல்லியன் முக்கிய பகுதிகளில் சுமார் 70,000 மலர்ச்செடிகள்  வைக்கப்பட்டுள்ளன.  கட்டடங்களில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

பாதுகாப்புக்கு 1.3 இலட்சம் படையினர்

இந்த உச்சிமாநாட்டையொட்டி, புதுடெல்லி முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் பாடசாலைகள், நீதிமன்றங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களும் மூடப்பட்டுள்ளன.

டெல்லியில் ரயில் விமான போக்குவரத்துகளில் பெரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.. 3 தினங்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் 70 இற்கு மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டு உள்ளன. டெல்லி முழுவதும் ட்ரோன் பறக்கத் தடை, ஒன்லைன் பொருட்கள் விநியோக தடை, ரயில்வே பொதிகள் சேவை நிறுத்தம் ஆகியனவும் இவற்றில் அடங்கும்.

டெல்லி பொலிஸார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள், கொமாண்டோக்கள் உட்பட 130,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள சில பகுதிகளில் இந்திய விமானப்படையின் ஏவுகணை தடுப்பு கருவிகள், ட்ரோன் எதிர்ப்பு தளவாடங்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

தலைவர்களை அழைத்து செல்வதற்காக 18 கோடி இந்திய ரூபா செலவில் குண்டு துளைக்காத 20 கார்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் பாதுகாப்புக்காக 20 இற்கும் அதிகமான போர் விமானங்களையும், வீரர்களையும் அமெரிக்கா அனுப்பிவைத்துள்ளது.

குரங்குகளின் கட்அவுட்

ஜி20 உச்சிமாநாடு நடைபெறவுள்ள பகுதிகளிலும் சிறிய குரங்குகளின் நடமாட்டம் காணப்படுகிறது. இந்நிலையில், குரங்குகளால் எவ்வித பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க விழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் நகரின் வனத்துறை இணைந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்

சிறிய குரங்குகளுக்கு அச்சம் ஏற்படுத்தும் லங்கூர் இனக் குரங்குகளின் பதாகைகளை (கட்அவுட்) நகரின் பல பகுதிகளிலும் அதிகாரிகள் வைத்துள்ளனர். அத்துடன், லங்கூர் குரங்குகளை போல சத்தமிடக்கூடிய சுமார் 40 நபர்களை முக்கிய இடங்களில் நிறுத்தப்படவுள்ளனர்.

வட இந்தியாவில் பாரிய போர்ப் பயிற்சி

புது டெல்லியில் ஜி20 உச்சிமாநாடு நடைபெறும் நிலையில், இந்தியாவின் வட பகுதியில் இந்திய விமானப்படையும் இராணுவுமும் பாரிய வருடாந்த போர்ப் பயிற்சியை கடந்த திங்கட்கிழமை (4) ஆரம்பித்தன. சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் நடைபெறும் இப்பயிற்சிகள் எதிர்வரும் 14ஆம் திகதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 'திரிசூல்' என இப்பயிற்சிக்கு பெயரிடப்பட்டுள்ளது.

லடாக், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு – காஷ்மீர், பஞ்சாப், அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம் பிராந்தியங்களில் இப்பயிற்சிகள் நடைபெறுகின்றன.

ரபேல், மிராஜ் 2000, மிக்29, சுகோய்30 எம்.கே.ஐ., சி130, சி17 உட்பட பல வகை போர் விமானங்கள் இப்பயிற்சியில் பங்குபற்றுவதாக செய்தி வெளியாகியுள்ளது.

நன்றி வீரகேசரி