Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

உள்நாட்டு விசாரணையா, சர்வதேச விசாரணையா?

உள்நாட்டு விசாரணையா, சர்வதேச விசாரணையா?

21 புரட்டாசி 2023 வியாழன் 06:57| பார்வைகள் : 1179


உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களுக்குப் பின்னால், அரச உளவுத்துறையினர் இயங்கியதாக, பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி, விவரணப் படமொன்றின் மூலம் அண்மையில் தெரிவித்த கருத்தை ஆராய, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ. இமாமின் தலைமையில் விசாரணைக் குழுவொன்றை நியமித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்‌ஷவை பதவிக்கு கொண்டு வர, நாட்டில் பாதுகாப்பற்ற நிலைமையை உருவாக்கவே, முஸ்லிம் பயங்கரவாத குழுவொன்றைப் பாவித்து, அரச உளவுத்துறையின் தற்போதைய பணிப்பாளராக இருக்கும் சுரேஷ் சலே, 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறுக்கிழமையன்று மூன்று உல்லாசப் பிரயாண ஹோட்டல்களையும் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களையும் தாக்கி, 269 பேரை கொன்றார் என்ற கருத்துப்பட சனல் 4 தொலைக்காட்சியில் தோன்றிய அசாத் மௌலானா என்பவர், சூசகமாகக் கருத்துத் தெரிவித்து இருந்தார்.

மௌலானா ஒரு காலத்தில், தற்போது இராஜாங்க அமைச்சராக இருக்கும் ‘பிள்ளையான்’ எனப்படும் சிவனேசதுரை  சந்திரகாந்தனின் அந்தரங்க செயலாளராக இருந்தவராவார். இப்போது அவர் சுவிடசர்லாந்துக்குச் சென்று, அங்கு அரசியல் புகலிடம் கோரியிருக்கும் நிலையிலேயே, சனல் 4 தொலைக்காட்சியின் நேர்காணலில் தோன்றி இருக்கிறார்.   

அத்தோடு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எவரும் கேட்காத நிலையில், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலோடு சம்பந்தப்பட்ட மற்றொரு விடயத்தைப் பற்றி விசாரணை செய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்றை நியமிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

முன்னாள் சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா அப்பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு சில நாள்களுக்கு முன்னர், 2019 ஆம் ஆண்டு மே மாதம் தொலைக்ககாட்சி நேர்காணல் ஒன்றின் போது, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னால் பாரிய சதித்திட்டமொன்று இருந்துள்ளதாக கூறியிருந்தார். அவரது அக்கருத்தைப் பற்றி விசாரணை செய்யவே, இந்தத் தெரிவுக்குழு நியமிக்கப்படவிருக்கிறது.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் பதவியில் இருக்கும் போதே, முஸ்லிம் தீவிரவாதக் குழுவொன்று இந்தப் பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டது. அந்த அரசாங்கம், அது தொடர்பாக நடத்திய விசாரணைகளைப் பற்றி, கத்தோலிக்க திருச்சபை திருப்தியடையவில்லை. அந்த அரசாங்கம் நியமித்த விசாரணை ஆணைக்குழு, கோட்டாபய ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் காலத்திலும் விசாரணைகளை மேற்கொண்டு அதன் அறிக்கையை ஜனாதிபதி கோட்டாபயவிடம் கையளித்தது.

கோட்டாபயவின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைப் பற்றியும் திருப்தியை தெரிவிக்காத பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை,  சனல் 4 தெரிவித்த கருத்துகளைப் பற்றி ஆராய, சர்வதேச விசாரணையொன்று வேண்டும் என்றார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் அக்கருத்தை வரவேற்றார். ஆனால், ஜனாதிபதி தற்போது ஜனாதிபதி விசாரணைக் குழவொன்றை நியமித்துள்ளமை, சர்வதேச விசாரணை எதுவும் நடைபெறாது என்பதையே சுட்டிக் காட்டுகிறது.

ஐ.நா  மனித உரிமை பேரவையும் பாரதூரமாகக் கவனத்தில் கொண்டுள்ள நிலையில் இத்தாக்குதலைப் பற்றி சர்வதேச விசாரணையொன்று நடைபெறுவதை அரசாங்கம் விரும்பாதது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பலாம். வடக்கு, கிழக்கு போர் தொடர்பாக, சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கம் விரும்பாதமைக்கு காரணம் பாரியளவிலான மனித உரிமை மீறல்களுக்கு அரச படைகள் குற்றவாளிகளாவர் என்ற பயத்தினாலேயே ஆகும். இத்தாக்குதலைப் பற்றிய சர்வதேச விசாரணையை எதிர்ப்பதற்கும் அதுவேதான் காரணமா என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியாது.

இந்த விடயத்துக்காக, ஏற்கெனவே ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு அவற்றின் அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அரச உளவுத்துறையினர் இத்தாக்குதலுக்குப் பின்னால் இயங்கினர் என்ற கருத்தும் புதியதல்ல. அந்த நிலையில், சர்வதேச விசாரணைக்குப் பதிலாக மேலும் உள்நாட்டு விசாரணைக்குழுக்களும் தெரிவுக்குழுக்களும் எதற்காக?

அரசாங்கமும் ஜனாதிபதியும் முன்னைய விசாரணைக் குழுவினதும் தெரிவுக் குழுவினதும் முடிவுகளை ஏற்க தயாரில்லையா? அவ்வறிக்கைகளை நிராகரித்தாலும் புதிதாக ஒன்றுக்குப் பதிலாக இரண்டு விசாரணைகள் எதற்காக?

சனல் 4 வின் விவரணப் படத்தில் கூறப்பட்ட உளவுத்துறையினரின் சதித் திட்டத்தைப் பற்றி ஆராய்வதாக இருந்தாலும், உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலின் பின்னால் பாரிய சதித் திட்டமொன்று இருந்துள்ளது என்ற முன்னாள் சட்டமா அதிபரின் கூற்றைப் பற்றி விசாரணை செய்வதாக இருந்தாலும், அதற்காக ஒரே நபர்களைத்தான் சாட்சிகளாக அழைக்க வேண்டி வரும்.

அரச உளவுத்துறையினரோ அல்லது வேறு ஏதாவது சக்தியோ இத்தாக்குதலில் சம்பந்தப்படாவிட்டாலும், சஹ்ரான் ஹாஷிம் தலைமையில் இயங்கிய தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பினரே இத்தாக்குதலை மேற்கொண்டனர் என்பதில் எவருக்கும் சநதேகம் இல்லை. அவ்வமைப்பினர் வருடக் கணக்கில் அல்லது மாதக் கணக்கில் இரகசியமாக சில இளைஞர்களின் மனதை மாற்றி, பணம் திரட்டி, வெடிப்பொருட்களை கொள்வனவு  செய்து, பயிற்சி பெற்றுத்தான் அத்தாக்குதலை நடத்தினர் என்பதிலும் சந்தேகம் இல்லை.

இவ்வனைத்தும் இரகசியமாக நடந்தன என்றால், அது சதித் திட்டம் அல்லவா? அவ்வாறாயின் இத்தாக்குதலுக்குப் பின்னால் பெரும் சதித் தட்டம் ஒன்று இருந்துள்ளது என்ற முன்னாள் சட்ட மாஅதிபரின் கருத்தில் என்ன புதுமை இருக்கிறது?

அவர் அரசியல் சதித் திட்டமொன்றைப் பற்றி எங்கும் குறிப்பிடவில்லை. சதிகாரர்கள் பிறிதொரு மட்டத்தில் இருந்துள்ளனர், சஹ்ரான் போன்றவர்களும் அதில் கலந்துகொண்டு இருக்கலாம் என்று அவர் கூறியிருந்தார். தேசிய தௌஹீத் ஜமாஅத்தில் சஹ்ரானுக்கு மேலான ஓர் இடத்தில் தான் உண்மையான சதிகாரர்கள் இருந்துள்ளனர் என்பதையே அவர் கூறியிருக்கிறார் என்றும் வாதிடலாம்.

ஏற்கெனவே அரச உளவுத்துறையினரிடம் இருக்கும் தகவல்களை ஆராயும் போது, இந்தச் சதித்திட்டம் தெளிவாகிறது என்றும் தப்புல டி லிவேரா கூறியிருந்தார். அவ்வாறாயின் அரச உளவுத்துறையினரிடம் இருக்கும் தகவல்களை ஆராய்ந்த அத்துறையின் ஏனைய அதிகாரிகளுக்கும் அவர் குறிப்பிடும் சதித்திட்டத்தின் சுபாவம் விளங்கியிருக்க வேண்டும். சதித் திட்டம் பற்றிய விசாரணை இன்னமும் முடிவடையவில்லை என்றும் அவர் கூறுகிறார். அதாவது சதித் திட்டம் பற்றிய கருத்து திட்டவட்டமானதல்ல.

பாராளுமன்ற தெரிவுக்குழுக்கள் மூலம் இது போன்ற குற்றச் செயல்களைப் பற்றி விசாரணை நடத்தி, ஏதாவது பயன் உண்டா என்பதும் சிந்திக்க வேண்டிய விடயமாகும். தெரிவுக்குழுக்களில் பெரும்பாலும் ஆளும் கட்சியினரே பெரும்பான்மையாக நியமிக்கப்படுவர். அதாவது, தற்போதைய நிலையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களே பெரும்பான்மையாக இருப்பர். அவ்வாறானதொரு தெரிவுக் குழுவால், கோட்டாபயவின் தேர்தல் வெற்றிக்காக, அரச உளவுத்துறையினர் பயங்கரவாத தாக்குதலொன்றை நடத்தினர் என்ற கருத்து உள்ளிட்ட சதித் திட்டம் ஒன்றைப் பற்றிய குற்றச்சாட்டு தொடர்பாக, நடுநிலையான விசாரணையை நடத்தலாமா?

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் இடம்பெற்று சில மாதங்களிலும் அப்போதைய சபாநாயகர் கரு ஜயசூரிய அத்தாக்குதலைப் பற்றி விசாரிக்க பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்றை நியமித்தார். அக்குழு குற்றச்செயலைப் பார்க்கிலும் காத்தான்குடியில் வீதிகளில் நடப்பட்டு இருக்கும் பேரீச்சப் பழ மரங்கள், அரபு பெயர்ப் பலகைகள், சுமார் நூறு வருடங்கள் பழைமையான மத்ரஸாக்கள்,  காதி நீதிமன்றங்கள், அண்மைக்காலமாக பரவிய புர்க்கா மற்றும் நிக்காப் போன்ற முகமூடிகள் ஆகியவற்றைப் பற்றி விசாரித்து காலத்தை கடத்தியது.

அவை பயங்கரவாத கருத்துகளை பரப்புகின்றன என்ற அடிப்படையிலேயே அவ்வாறு அவற்றைப் பற்றி விசாரித்தனர். அவை அனைத்தும் இன்னமும் நாட்டில் இருக்கின்றன. இப்போது எவரும் அவற்றைப் பற்றி அலட்டிக் கொள்வதில்லை.

ஞானசார தேரர் போன்றவர்கள் பரப்பிய கருத்துகள் காரணமாகவே அவை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன. அதைத் தவிர அவற்றுக்கும் குண்டுத் தாக்குதல்களுக்கும் இடையில் தொடர்பு இருக்கிறது என்று சந்தேகிக்க தெரிவுக்குழுவுக்கோ அல்லது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கோ எவ்வித ஆதாரமும் இருக்கவில்லை.

இனவாதிகள் பரப்பிய கருத்துகள் பொலிஸார் நடத்திய விசாரணைகளிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. எவ்வித ஆதாரமுமின்றி இனவாத பிரசாரங்கள் காரணமாகவே சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் சிலர் போதிய ஆதாரங்களின்றி விடுதலை செய்யப்பட்டதன் பின்னர், மீண்டும் இனவாதிகள் குழப்பவே, மீண்டும் கைது செய்யப்பட்டு, பின்னர் மீண்டும் விடுதலை செய்யப்பட்டனர்.

இவ்வாறானதொரு நிலைமை நாட்டில் இருப்பதாலும் நாட்டின் தலைவர்கள் இது போன்ற குற்றச் செயல்களையும் அரசியல் கண்கொண்டு அணுகுவதன் காரணமாகவும் உள்நாட்டு விசாரணைகள் மூலம் தீர்வு காண்பது என்பது மிகவும் கடினமான விடயமாகும்.

நன்றி தமிழ் Mirror

எழுத்துரு விளம்பரங்கள்