Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

இந்தியாவா, பாரதமா? : பெயர் மாற்ற சர்ச்சையின் அரசியல், வரலாற்று தாற்பரியங்கள்

இந்தியாவா, பாரதமா? : பெயர் மாற்ற சர்ச்சையின் அரசியல், வரலாற்று தாற்பரியங்கள்

11 புரட்டாசி 2023 திங்கள் 11:07| பார்வைகள் : 737


'சிலோனுக்கு என்ன கேடு, ஏன் ஸ்ரீலங்கா என்று மாற்ற வேண்டும்' என்று அப்போது கேட்டார்கள்.

'அடக்கியாள வந்த வெள்ளைக்காரன் சிலோன் என்று பெயரிட்டான். அதையே தொடர வேண்டுமா? நாங்கள் தன்மான முள்ள சனக்கூட்டம் அல்லவா? நமது பெருமையைச் சொல்ல நமக்கென்று கௌரவமான பெயர் வேண்டாமா' என்றார்கள், ஸ்ரீலங்கா என்று பெயர் சூட்டியவர்கள்.

இன்று தோல்வியடைந்ததாக வர்ணிக்கப்படும் தேசம். எந்தக் கூட்டம் 'ஸ்ரீலங்கா' என்று பெயர் சூட்டியதோ, அதே கூட்டம் இப்படிச் சொல்கிறது:

'எப்போது ஸ்ரீலங்கா என்று பெயர் சூட்டினோமோ, அன்று பிடித்தது கேடுகாலம். அது மிகவும் துரதிருஷ்டமான பெயர்.'

பெயரில் என்ன இருக்கிறது என்று கேட்பீர்கள். பெயரில் தான் எல்லாம் இருக்கிறது என்று பதில் அளிப்பார்கள்.

ஆண்டாண்டு கால காலனித்துவ ஆட்சி. அதில் சுதந்திரம் பெற பல இனக்குழு மங்கள் கைகோர்த்து ஒன்றாக சுதந்திரப் போராட்டம் நடத்திய தேசம்.

சுதந்திரம் பெற்றதும் மொழியை அடிப்படையாகக் கொண்ட தேசியவாதம்.

ஸ்ரீலங்கா என்று சிங்கள மொழியில் அழைத்தால் தான், எமது தேசத்­தற்கு கௌரவம் என்று சிந்திப்பதும் வாதிடுவதும் எவ்வளவு பெரிய அடாவடித்தனம்?

இதே தான் இன்று இந்தியாவிலும் நடக்கிறது.

இந்தியாவா?, பாரதமா?, ஹிந்துஸ்தானா?

இந்தியா வேண்டாம் என்கின்றது, நரேந்திர மோதியின் பாரதிய ஜனதா கட்சி.

எப்படி? ஜி20 உச்சிமாநாட்டின் விருந்தொன்றிற்கு உலகத் தலைவர்களுக்கு அனுப்பிய அழைப்பிதழ், அதில் இந்திய ஜனாதிபதி என்பதற்கு பதிலாக பாரத குடியரசுத் தலைவர் என்று எழுதுவதன் மூலம் கூடைக்குள் இருந்த பூனைக்குட்டியை வெளியே விட்டிருக்கிறது, பா.ஜ.க. அரசு.

பெயர் மாற்றம் என்பது நீண்டநாள் திட்டம். இதனை பா.ஜ.கவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர் மோகன் பக்வத்தும் பேசினார். பா.ஜ.கவின் சமகால பிரதிநிதிகளும் பேசுகிறார்கள்.

இந்தியா என்ற ஆங்கில வார்த்தையை நாம் ஏன் சொல்ல வேண்டும், நிறுத்துங்கள் என்று மோகன் பகவத் உத்தரவிடுகையில், 'மடையர்கள் தான் இந்தியா என்பார்கள்' என்று பா.ஜ.க. லோக்சபா அங்கத்தவர் ஒருவர் திட்டுகிறார்.

இந்த பெயர் மாற்றம் பா.ஜ.கவுக்கு புதிது அல்ல. அஹமதாபாத்தை கர்ணாவதி என்றார்கள். அலஹாபாத்திற்கு பிரயக்ராஜ் என்ற பெயர் சூட்டப்பட்டது.

இதற்கு காரணம், அலஹாபாத் என்ற பெயர் இந்தியாவை ஆக்கிரமித்த மொகலாய மன்னர்கள் சூட்டியதாம்.

இந்தியாவுக்கு பாரதம் என்று பெயர் சூட்ட வேண்டிய காரணம் என்ன?

பாரதம்

இந்தியாவா, பாரதமா என்பது சுதந்திரம் பெறுவதற்கு முன்பே இருந்த பிரச்சினை.

சுதந்திர இந்தியாவின் முதல் அரசியல் யாப்பை டாக்டர் பீம்சிங் அம்பேத்கார் வரைந்து மக்களவையில் சமர்ப்பித்த போது, இந்தப் பிரச்சினை ஏற்பட்டது. அம்பேத்காரே சலிப்படையக் கூடிய அளவுக்கு கடும் விவாதங்கள்.

ஈற்றில், 'பாரதமாக இருக்கும் இந்தியா மாநிலங்களின் ஒன்றியம்' (India, that is Bharat, shall be a Union of States) என்ற வசனத்தை முதல் ஷரத்தாக சேர்ப்பதென சமரசம் காணப்பட்டது.

பாரதம் என்ற பெயர் எங்கிருந்து வந்தது? புராணங்களில் இருந்து தான் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதற்கும் ஆயிரமாயிரம் கதைகள் கூறப்படுகின்றன.

இராமாயணத்திலும், மகாபாரதத்திலும், மனுநீதியிலும் பாரதம் என்று இருப்பதால், பாரதம் தான் பொருத்தம் என்ற வாதம்.

பாரதம் என்ற சொல் எப்படி உருவாகியது என்று கேட்டு வேர்ச்சொல் அறிய முயன்றால், அதற்கு தெளிவான பதில் கிடையாது.

பரதமுனியின் பெயரால் பாரதம் வந்ததா, துஷ்யந்தனின் மகன் பரதனின் பெயரில் இருந்து வந்ததா, மனு ஆட்சி செய்த பிரதேசத்தின் பெயரால் பாரதம் என்று வந்ததா என்ற ஆராய்ச்சிக்கு இன்னமும் முடிவில்லை.

இன்றைய இந்தியாவாகிய நிலப்பரப்பிற்கு ஜம்புதுவீபம் என்றழைக்கப்பட்டதாக புராணமொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஜம்புதுவீபம் ஒன்பது பாகங்களாக பிரிக்கப்பட்டு, அதிலொரு பகுதி பாரதவர்ஷா என்று அழைக்கப்பட்டதாகவும் கதையொன்று உண்டு.

ஆனால் ஜம்பு-துவீபம் அல்லது பாரத வர்ஷா என்று குறிப்பிடப்பட்ட நிலப்பரப்பின் பூகோள எல்லைகள் எவை என்பது தெளிவாக இல்லை.

பாரதம் என்ற சொல் சமஸ்கிருதத்தில் உருவானது என்ற அடிப்படையில், சமஸ்கிருதத்திற்கு வழங்கப்படும் கௌரவத்திற்காக சகல மொழிகளும் பாரதம் என்ற சொல்லை வரித்துக் கொண்டன எனலாம்.

பாரதம் என்ற சொல் பூகோளத்தை சுட்டுகிறதா, மொழி அடையாளத்தை சுட்டுகிறதா? கலாசார அடையாளத்தை சுட்டுகிறதா என்பதில் தெளிவில்லை.

பா.ஜ.க. தலைமையிலான அரசாங்கம் இதனை வரலாற்று அடையாளமாக நோக்கி, சனாதன தர்மம் கோலோச்சிய காலத்துடன் தொடர்புபடுத்த முனைகிறது என்று கருத முடியும்.

அதேகாலத்தை மீண்டும் கொண்டு வந்து, இந்து சமயமும், இந்து கலாசாரமும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய தேசமாக மாற்ற வேண்டும் என்பது தானே, பா.ஜ.க. பின்பற்றும் ஹிந்துத்வா கொள்கையின் சாரம்?

ஹிந்துஸ்தான்

அடுத்து ஹிந்துஸ்தான். இந்தப் பெயரின் வேர்ச்சொல் பற்றி ஆராய்ச்சியும் முழுமை அடையவில்லை.

ஹிந்துஸ்தான் உள்ளுர் உச்சரிப்பாகத் தோன்றிலும், இதுவும் வெளிநாட்டவர்கள் சூட்டிய பெயராக இருக்கலாம் என்று மொழியியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இதன் வேர்ச்சொல்லாக இருப்பது இந்து அல்லது சிந்து என்பதாகும். சிந்து நதிப் பிரதேசத்தில் வாழும் மக்களை அப்போதைய பாரசீகர்கள் ஹிந்த் என்று அழைத்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.

இடைக்காலப் பகுதியில், இந்துஸ்தான் என்ற பெயர் மிகவும் பிரபலமாக இருந்தது.

இருந்தபோதிலும், இந்த இந்துஸ்தான் என்பது முழு நிலப்பரப்பையும் அல்லாமல், தற்போது ஹிந்தி பேசும் மக்கள் செறிந்து வாழ்கின்ற பகுதிகளைக் குறித்தது.

இங்கு தான் கிழக்கிந்தியப் படைகள் முதலில் கால்பதித்து, பிரிட்டனின் காலனித்துவ ஆட்சிக்கு வழிகோலியிருந்தன. இங்கு ஹிந்துஸ்தான் என்ற வார்த்தை பிரபலமாக இருந்ததால், பிரித்தானிய ஆட்சியாளர்கள் இந்த வார்த்தையை 'கப்பென' பிடித்துக் கொண்டார்கள். பின்னாட்களில் இந்தியாவைக் குறிக்க இதனையே பயன்படுத்தினார்கள்.

ஹிந்துஸ்தான் என்பது ஹிந்தி, உருது ஆகிய மொழிகளில் இயல்பாக புழங்கக்கூடிய வார்த்தையாக இருந்தது. இதன் காரணமாகவே, பொலிவூட் திரையுலகில் பாரத் என்பதை விட ஹிந்துஸ்தான் என்பது பரவலாக உபயோகிக்கப்படுகிறது.

இந்துத்துவ கோட்பாட்டைப் பொறுத்தவரையில், இது மிகவும் சாதகமான சொல்லாகும். இதனை ஒரே மாதிரியாக ஒலிக்கக்கூடிய ஹிந்து, - ஹிந்தி ஆகியவற்றுடன் இலகுவாக பொருந்தச் செய்யலாம். இதற்குள் மதம், மொழி, பிராந்தியம் என்ற மூன்றும் வருகிறது என இந்து தேசியவாதி விநாயக் சாவர்க்கர் கூறுவார்.

இந்த இந்துத்துவ தேசியவாதிகளின் நோக்கம், இந்தியாவுக்குள் இந்தியையும், இந்து மதத்தையும் மேலோங்கச் செய்வது என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

இந்தியா

அடுத்து இந்தியா என்பதற்கு வருவோம். இது பிரித்தானிய ஆட்சியாளர்கள் சூட்டிய பெயர். இது பெரும்பாலும் புவியியல் எல்லைகளைக் குறிக்கக்கூடிய பெயராக, சட்டபூர்வமான பெயராக இருந்தது.

இந்தப் பெயர் பாகிஸ்தானுக்கு பிரச்சினையானது ஏன்?

பாகிஸ்தானின் ஸ்தாபகத் தலைவரான மொஹம்மது அலி ஜின்னா, இந்தியா என்ற பெயரை விரும்பினார். இது இந்திய துணைக்கண்டம் பிளவுபடுவதற்கு முன்பிருந்த நிலப்பரப்பைக் குறிக்கும் பெயர் என்று ஜின்னா கருதினார்.

எனவே, ஹிந்துஸ்தானும், பாகிஸ்தானும் சேர்ந்த நிலப்பரப்பை இந்தியா என்று கூற வேண்டும். இதனை ஹிந்துஸ்தானைச் சேர்ந்தவர்கள் தமதாக்கிக் கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என இந்தியாவின் கவர்னர் ஜெனரலுக்கு அவர் கடிதமும் எழுதியிருந்தார்.

பா.ஜ.க. அரசாங்கம் எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் இந்தியாவின் பெயரைக் கைவிட்டு, பாரதம் என்று மாற்றுமாயின், இந்தியா என்ற பெயரை நாம் எடுத்துக் கொள்வோம் என்று பாகிஸ்தான் அரசியல்வாதிகள் இப்போது கூறுவதன் தாற்பர்யம் இது தான்.

பாரதம் என்ற பெயருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் சக்திகள் பெரும்பாலும் மதம் (இந்து) அல்லது மொழி (ஹிந்தி) அடிப்படையிலான தேசியவாதிகளாகவே இருக்கிறார்கள். சுருக்கமாக சொன்னால் இந்து தேசியவாதம் அல்லது ஹிந்தி தேசியவாதம். இலங்கையில் சிங்கள தேசியவாதத்தைப் போல.

இங்கு அரசியல் சந்தர்ப்பவாதம் பற்றி குற்றச்சாட்டையும் குறிப்பிட்டாக வேண்டியிருக்கிறது.

இந்தியாவை பாரதம் என்று மாற்றும் முயற்சிக்குப் பின்னால் ஆயிரம் காரணங்களைக் கூறினாலும், இது தேர்தல் பயத்தின் வெளிப்பாடென எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன.

காங்கிரஸ் கட்சி தலைமையிலான எதிரணி, Indian National Developmental Inclusive Alliance என்ற பெயரில் கூட்டு சேர்ந்துள்ளது. இதன் முதலெழுத்துக்களை சேர்த்தால் I.N.D.I.A என்று வரும். இதற்குப் பயந்தே பா.ஜ.க. இந்தியா என்ற பெயரை ஒழித்துக் கட்ட முனைகிறது என்று எதிரணி குற்றம் சுமத்துகிறது.

இந்தியாவின் பெயரை மாற்றுவதற்கு மேற்கொள்ளும் முயற்சியில் அரசியல் சந்தர்ப்பவாதம், இந்து அல்லது ஹிந்தி தேசியவாதம் என்று எதுவும் இருந்து விட்டு போகட்டும்.

இந்தியா என்பது 200 வருடகாலமாக ஒரு தேசத்தின் உத்தியோகபூர்வ பெயராக இருக்கிறது. இது வெளிநாட்டவர்கள் திணித்த பெயர் என்பது சராசரி இந்தியனுக்கு சொன்னால் தவிர தெரியப் போவதில்லை. தவிரவும், இந்தியா என்பது புதிய தலைமுறைக்கு இனம், மதம், மொழி, சாதி, வர்க்கம் தாண்டிய உணர்வு.

இதனை சட்டம் சூசகமான தந்திரங்கள் மூலம் சுயநலத்திற்காக மாற்றி விட்டாலும், ஒரு குடிமகனின் உள்ளத்தில் இருந்து இலகுவில் அழித்து விட முடியுமா என்ன?

நன்றி வீரகேசரி