Paristamil Navigation Paristamil advert login

ரூ.1,494 கோடி தேர்தல் செலவு பட்டியலில் பா.ஜ., முதலிடம்

ரூ.1,494 கோடி தேர்தல் செலவு பட்டியலில் பா.ஜ., முதலிடம்

23 ஆனி 2025 திங்கள் 10:44 | பார்வைகள் : 1218


கடந்த ஆண்டு நடந்த லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில், அதிக செலவு செய்த கட்சிகள் பட்டியலில், 1,494 கோடி ரூபாயுடன் பா.ஜ., முதலிடத்தில் உள்ளது. காங்கிரஸ் 620 கோடி ரூபாயுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா, அருணாச்சல், ஒடிஷா, சிக்கிம் ஆகிய மாநில சட்டசபை தேர்தலும் கடந்த ஆண்டு மார்ச் 16 முதல் ஜூன் 6 வரை நடந்தன.

இந்த தேர்தலில், அனைத்து கட்சிகளும் 3,352 கோடி ரூபாயை செலவிட்டுள்ளதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

லோக்சபா தேர்தல் நடந்து 90 நாட்களுக்குள்ளும், சட்டசபை தேர்தல் நடந்து 75 நாட்களுக்குள்ளும் கட்சிகள் தேர்தல் கமிஷனிடம், செலவு தொடர்பான தகவல்களை தாக்கல் செய்ய வேண்டும்.

இதன்படி தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளை ஆய்வு செய்து, இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கை:

கடந்த ஆண்டு நடந்த லோக்சபா மற்றும் நான்கு மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் 2,204 கோடி ரூபாயை செலவழித்துஉள்ளன.

இது கட்சிகள் செலவழித்த தொகையில் 65.75 சதவீதம். இதில் ஆளும் பா.ஜ., 1,494 கோடி ரூபாயுடன் முதலிடத்தில் உள்ளது. இது மொத்த செலவுத்தொகையில் 44.56 சதவீதம். காங்கிரஸ், 620 கோடி ரூபாயை செலவிட்டுஉள்ளது.

தேர்தலுக்காக பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள், தேசிய கட்சிகளுக்கு 6,930 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்துஉள்ளன. மாநில கட்சிகளுக்கு, 515 கோடி ரூபாய் கிடைத்துள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்