Paristamil Navigation Paristamil advert login

மழை, வெயில் பார்க்க மாட்டோம் நக்சல்களுக்கு அமித் ஷா எச்சரிக்கை

மழை, வெயில் பார்க்க மாட்டோம் நக்சல்களுக்கு அமித் ஷா எச்சரிக்கை

23 ஆனி 2025 திங்கள் 08:44 | பார்வைகள் : 1261


நக்சல்களை முழுமையாக ஒழிக்க, மழைக்காலத்திலும் பாதுகாப்பு படைகளின் நடவடிக்கைகள் தீவிரமாக தொடரும், என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கரின் நவ ராய்ப்பூர் அடல் நகரில், தேசிய தடய அறிவியல் பல்கலை வளாகம் மற்றும் மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தின் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது:

ஒவ்வொரு முறையும் மழைக்காலங்களில் நக்சல்கள் ஓய்வெடுப்பது வழக்கம். கனமழையால், ஆறுகள், நீர்நிலைகளில் தண்ணீர் அதிகமாக ஓடுவதால், அவர்களின் நடமாட்டம் பெரும்பாலும் முடங்கிவிடும்.

அவ்வாறு, நக்சல்கள் ஓய்வெடுப்பதை இனி ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அவர்களுடன் பேச்சு நடத்தும் எண்ணம் இல்லை. அடுத்த ஆண்டு, மார்ச் 31க்குள் நக்சல்களை ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு முன்னேறி வருகிறது.

நக்சல்கள் அனைவரும் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு வளர்ச்சிப் பாதையில் இணைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அவ்வாறு வருபவர்களை வரவேற்கிறோம்.

சத்தீஸ்கர் அரசும், மத்திய அரசும் நக்சல்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தயாராக இருக்கிறோம். நக்சல்களுக்கு மேலும், மேலும் உதவ எப்போதும் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்