தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம்
9 கார்த்திகை 2024 சனி 03:10 | பார்வைகள் : 674
தமிழக தேர்தல் கமிஷனராக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டு உள்ளார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்ய பிரதா சாஹூ கடந்த 2018 ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். சமீபத்தில் தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட போது இவருக்கு, கூடுதல் பொறுப்பாக தமிழக கால்நடைத்துறை செயலர் பொறுப்பு வழங்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பதவியில் இருந்து அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். புதிய தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டு உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி என்ற பெயர் இவருக்கு கிடைத்து உள்ளது.
தற்போது இவர் தமிழக அரசின் சிறு, குறு தொழில்துறை செயலாளராக உள்ளார். தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டதன் மூலம், வரும் 2026ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலை முன்நின்று நடத்தும் வாய்ப்பு இவருக்கு உருவாகியுள்ளது.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அர்ச்சனா பட்நாயக், 2002ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்.,பணியில் சேர்ந்தார். கோவை, நீலகிரி மாவட்ட கலெக்டராகவும் பணியாற்றி உள்ளார். கோவையின் முதல் பெண் கலெக்டர் என்ற பெருமை இவருக்கு உள்ளது, குறிப்பிடத்தக்கது.