காலை எழுந்ததும் பப்பாளி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றித் தெரியுமா?
2 புரட்டாசி 2024 திங்கள் 15:03 | பார்வைகள் : 1357
இனிப்பான சுவை மற்றும் புத்துணர்ச்சி ஊட்டும் தன்மைக்காக பப்பாளி பழம் பலராலும் விரும்பி சாப்பிடப்படுகிறது. பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பப்பாளி பழம் ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாகவும் அமைகிறது. மிக முக்கியமாக புரதங்களை உடைப்பதற்கு உதவும் செரிமான நொதிகள் பப்பாளி பழத்தில் காணப்படுவதால் இது செரிமானத்தை சிறந்த முறையில் ஊக்குவிக்கிறது.
அன்றாடம் நாம் சந்திக்கக்கூடிய பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு பப்பாளி பழம் ஒரு தீர்வாக அமைகிறது. காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் பப்பாளி பழம் சாப்பிடுவதால் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அவை என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: வைட்டமின் C தவிர பப்பாளி பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பிற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. வெறும் வயிற்றில் பப்பாளி பழம் சாப்பிடும்போது இந்த ஊட்டச்சத்துக்கள் சிறந்த முறையில் உறிஞ்சப்பட்டு நமக்கு இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. நம் உடலை தாக்கும் நோய் தொற்றுகளை எதிர்த்துப் போராடுவதற்கு உடலுக்கு உதவுவதன் மூலம் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படுகிறது.
உடல் எடை மேலாண்மை: பப்பாளி பழத்தில் அதிக நார்ச்சத்து இருப்பதால் இதனை சாப்பிட்ட உடன் நமக்கு வயிறு நிரம்பிய உணர்வு ஏற்பட்டு பசி கட்டுப்படுத்தப்படுகிறது. பப்பாளி பழத்தை நாம் வெறும் வயிற்றில் சாப்பிடும்போது அதில் உள்ள நார்ச்சத்து செரிமான குழாயில் விரிவடைந்து நாள் முழுவதும் குறைவான கலோரி உட்கொள்ளப்படுவதை உறுதி செய்கிறது. இதனால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பப்பாளி பழம் ஒரு அற்புதமான சாய்ஸ்.
Fஆரோக்கியமான சருமத்தை ஊக்குவிக்கிறது: பப்பாளி பழத்தில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஆன்டி ஆக்சிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் இருப்பதால் நமது சருமத்தை பொலிவாகவும், இளமையாகவும் காட்சியளிக்க செய்கிறது. காலை எழுந்தவுடன் பப்பாளி பழம் சாப்பிடும்போது, உங்களுடைய சருமத்தின் அமைப்பு மேம்படுத்தப்பட்டு உங்களுக்கு இயற்கையான பொலிவு கிடைக்கிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: பப்பாளி பழத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் பொட்டாசியம் சத்து இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். பப்பாளி பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது, உடலின் இயற்கையான நச்சு நீக்க செயல்முறை தூண்டப்பட்டு, இதய நோய்களுக்கு காரணமான உடலில் உள்ள நச்சுகள் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்கள் அனைத்தும் வெளியேற்றப்படுகின்றன. அதுமட்டுமின்றி பப்பாளி பழத்தில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக்கி பக்கவாதம் மற்றும் பிற இதய சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கிறது.
கண்களின் ஆரோக்கியத்திற்கு பலன் அளிக்கிறது: பப்பாளி பழத்தில் எக்கச்சக்கமான வைட்டமின் C, E மற்றும் பீட்டா கரோட்டின் இருப்பதால், கண்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்த பழமாக அமைகிறது. வழக்கமான முறையில் நீங்கள் பப்பாளி பழத்தை சாப்பிட்டு வர உங்களுடைய கண் பார்வை மேம்படுத்தப்பட்டு, கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவது குறைகிறது.