இணையத்தில் கொட்டிக்கிடக்கும் கோடிக்கடிக்கணக்கான தகவல்களில் பெரும்பாலானவைக்கு எந்தவித ஆதாரங்களோ அல்லது சாட்சிகளோ இல்லை. சமூக வலைதளங்களில் கூட திடீர் திடீரென நம்ப இயலாத பல தகவல்களும், செய்திகளும் உலா வருகின்றன. ஆன்மீகம் தொடர்பாக இருக்கட்டும், தேசிய பிரச்சனையாக இருக்கட்டும் உண்மைத்தகவல்களுடன் பல பொய் தககவல்களும், ஆதாரங்களற்ற தகவல்களும் வந்துகொண்டுதான் இருக்கிறது.
குறிப்பாக, ஏலியன்கள் குறித்த தகவல்கள், ஏலியன்கள் பூமியில் வசிப்பது போன்றவையும் அடிக்கடி சமூக வலைதளங்களில் விவாதங்களை கிளப்புகின்றன. அந்த வகையில், ட்விட்டரில் இதுபோன்ற ஒரு வீடியோ தற்போது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது, தான் வருங்காலத்தில் இருந்து காலப்பயணம் செய்து தற்காலத்திற்கு வந்துள்ளதாக கூறி ஒருவர் வெளியிட்ட அந்த டிக்டாக் வீடியோதான் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
எனோ அலரிக் என்ற பயனாளரின் ட்விட்டர் கணக்கில் வெளியான அந்த டிக்டாக் வீடியோவுடன்,"அனைவரின் கவனத்திற்கு! ஆம், நான் 2671ஆம் ஆண்டில் இருந்து காலப்பயணம் செய்த உண்மையான டைம்-ட்ராவலர். இந்த 5 நாள்களை குறித்துவைத்துக்கொள்ளுங்கள்" எனக் குறிப்பிட்டு பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் பேசும் நபர், "இன்னும் சில நாள்களில் பூமியில், வேற்று கிரகவாசிகளின் நடமாட்டம் இருப்பது உறுதியாகும். இந்தாண்டு டிசம்பர் 8ஆம் தேதி அன்று ஒரு பெரிய விண்கல் மூலம் இந்த பூமியில் வேற்று கிரகவாசிகள் வர இருக்கிறார்கள்" என்றார்.
விரைவில் உலகத்தின் தலையெழுத்தே மாற்றப்போகிறது என்று குறிப்பிடும் அந்த நபர், டிசம்பர் 8ஆம் தேதியை போன்று இன்னும் நான்கு தினங்களை மனிதர்களால் மறக்கவே முடியாது என்றும் தெரிவிக்கிறார். அதாவது, அந்த டிசம்பர் 8ஆம் தேதியை போன்று, அடுத்து வேறு வேறு 4 தினங்களிலும் பூமியை அச்சுறுத்தும் சம்பவங்கள் நடைபெற உள்ளதாக அந்த நபர் கூறுகிறார். மேலும், அந்த தினங்களையும் வரிசையாக குறிப்பிடுகிறார்.
அதாவது, முதல் முதலாக வரும் நவம்பர் 30ஆம் தேதி அன்று நாசாவின் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப், அச்சு அசலாக பூமியை போன்ற மற்றொரு கிரகத்தை கண்டுபிடிக்கும். அடுத்து டிசம்பர் 8ஆம் தேதி ஒரு பெரிய விண்கல் மூலம், வேற்று கிரகவாசிகள் இந்த பூமியை வந்தடைவார்கள். அடுத்தாண்டு பிப்ரவரி 6ஆம் தேதி, இந்த பூமியைச் சேர்ந்த 4 இளைஞர்கள் பழங்கால கட்டட இடிபாடுகளையும், வேற்று கிரகத்திற்கான வாசலை திறக்கும் ஒரு கருவியையும் கண்டுபிடிப்பார்கள்.
அடுத்தாண்டு மார்ச் மாதத்தில், பசிபிக் பெருங்கடலில் உள்ள உலகத்தின் மிக ஆழமான மரியான அகழியில் (Mariana Trench) இருந்து பழமையான இனம் ஒன்று கண்டறியப்படும் என எனோ அலரிக் தெரிவித்துள்ளார். அடுத்து, அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதியை குறிப்பாக, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரை 750 அடி உயரமான மெகா சுனாமி அலை தாக்கும் எனவும் அவர் கணித்துள்ளார்.
தன்னை வருங்காலத்தில் இருந்து வந்ததாக கூறிக்கொள்ளும் அந்த நபர், முன்னரும் இதுபோன்ற கணிப்புகளை வெளியிட்டுள்ளார். அதாவது, 3 அடி சிலந்தி, 18 அடி கொண்டு வண்டு, 1 அடியில் எறும்பு ஆகியவை குறித்து அவர் பல்வேறு கணிப்புகளை தெரிவித்துள்ளார். ஆனால், இவையெல்லாம் நடந்ததா என்பது குறித்து எவ்வித தகவல்களும் இல்லை.