டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை சார்பாக அதிக சதங்களைப் பெற்ற வீரர் மற்றும் பங்களாதேஷூக்கு எதிராக அதிக சதங்களைப் பெற்ற வீரர் ஆகிய இரண்டு சிறப்புகளை குமார் சங்கக்கார பெற்றுள்ளார்.
பங்களாதேஷூக்கு எதிரான இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவர் இந்த மைல்கல் சாதனைகளை எட்டினார்.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்டகொங்கில் நேற்று ஆரம்பமானது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை, 49 ஓட்டங்களுக்கு முதலிரண்டு விக்கெட்டுகளையும் இழந்தது. எனினும், அதன் பின்னர் இணைந்த குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஜோடி மூன்றாம் விக்கெட்டில் 178 ஓட்டங்களைப் பகிர்ந்தது.
மஹேல ஜயவர்தன தனது 46 ஆவது டெஸ்ட் அரைச்சதத்தைப் பூர்த்தி செய்ய, குமார் சங்கக்கார தனது 34 ஆவது டெஸ்ட் சதத்தை எட்டினார்.
இதன் மூலம் இலங்கை சார்பாக அதிக டெஸ்ட் சதங்களைப் பெற்ற வீரர் என்ற பெருமையை குமார் சங்கக்கார தனதாக்கிக்கொண்டார்.
இந்தப் பட்டியலில் கடந்த வாரம் முன்னிலை பெற்ற மஹேல ஜயவர்தன, 33 சதங்களுடன் இரண்டாமிடத்தில் உள்ளார். அத்துடன், மஹேல ஜயவர்தன வசமிருந்த பங்களாதேஷூக்கு எதிரான அதிக டெஸ்ட் சதங்கள் சாதனையும் குமார் சங்கக்கார வசமானது.
பங்களாதேஷூக்கு எதிராக மஹேல 5 டெஸ்ட் சதங்களைப் பெற்றுள்ளதுடன் சங்கக்கார நேற்று ஆறாவது சதத்தை அடைந்தார்.