அட, போனால் போகட்டும் போய்யா, யார் மேலும் கொண்டிருக்கும் எந்த வன்மத்தையும் காலத்தால் நீர்த்துப் போகவைத்துவிட்டு, பெருந்தன்மைக் காட்டும் பெரும்பான்மையான தமிழர்களுக்குக் கூட, ராஜபக்ஷே என்றப் பெயரை எந்த நேரத்தில் கேட்டாலும், இருபது நாட்களாக கழுவப்படாத கழிப்பறையில் உள்ளே நுழைந்தால் என்ன ஓர் அசூசையான உணர்வைத் பெறுவோமோ, அந்த குமட்டல் உணர்வு கிடைக்கும்.
ஹிட்லரின் கொடுமைகளை வரலாற்றில் படிக்கும் பொழுது அதன் தாக்கம் அவ்வளவாகப் புரியவில்லை. ஆனால் சமகாலத்தில், என் மொழியைப் பேசும், என் உற்றார் உறவினர் போல் நிறத்தாலும் பண்பாட்டாலும் இருப்பவர்கள் திட்டமிட்டு நசுக்கப்பட்டு ,ஈழத்தில் அழிக்கப்பட்டதைக் கண்கூடாக பார்க்கையில் ஹிட்லரின் கொடுமைகள் கூட இப்படித்தான் இருந்திருக்கும் என உணர முடிகிறது. ஹிட்லரை ராஜபக்ஷேவில் பார்க்கிறார்களோ இல்லையோ, நான் ஹிட்லரில் ராஜபக்ஷேவைப் பார்க்கின்றேன்.
வெறுப்பிற்குரிய ராஜபக்ஷே , டிவிட்டர் என்கின்ற சமூக இணையத் தளத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்து இருக்கின்றார். எனக்கு தெருவில் இறங்கிப் போராட வாய்ப்பு கிடைக்கவில்லை, ஆனால் இந்த டிஜிட்டல் சமரில் என்னால் செய்ய முடிந்த காரியத்தை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், என்னுடைய கண்டனங்களை அவரைக் குறிப்பிட்டு பதிவு செய்துவிட்டேன். டிவிட்டர் இணையத் தளத்திற்கும் ராஜபக்ஷேவை நீக்க வேண்டி , வேண்டுகோள் வைத்துவிட்டேன்.
ஒற்றை தாவீதுகளால் கோலியாத்துகளையும் கொடூரர்களையும் விரட்ட முடியாது. ஒன்று பத்தாக , பத்து நூறாக, நூறு நூறாயிரம் ஆகும் பொழுது கோலியாத்துகளைக் கொஞ்சமேனும் அசைத்துப் பார்க்கலாம்.
வன்முறையற்ற வார்த்தைகளைக் கொண்ட, அஹிம்சா முறையில் நமது கடும் கண்டனங்களை திருவாளர் ராஜபக்ஷேவின் டிவிட்டர் ஹேண்டிலில் பதிவு செய்யலாம். லண்டனில் விடுதியைவிட்டு கீழிறங்காமலேயே காணமல் போகச் செய்ய செய்தப் போராட்டத்தை ஒத்ததுதான் , இந்த டிவிட்டர் முற்றுகைப் போராட்டமும். சமூகவலைத் தளங்களில் மனிதாபிமானம் மிக்க , தமிழுணர்வுள்ள மக்கள் தொடர்ந்துப் போராடிக்கொண்டுத்தான் இருக்கின்றார்கள். இந்த டிவிட்டர் முற்றுகை, அதுவும் அலுவலகப்பூர்வமான டிவிட்டர் கணக்கை முற்றுகை செய்யும்பொழுது, பாராமுகம் காட்டும் உலகத்தின் கவனத்தை ஈர்க்கலாம். 140 எழுத்துகளில் நமது எதிர்ப்பைப் பதிவு செய்வோம்.
ராஜபக்ஷேவின் டிவிட்டர் கணக்கு -
https://twitter.com/PresRajapaksa
நான் எழுதிய டிவிட்
”Dear @twitter @twittermobile@twittermedia Please REMOVE War Criminal @PresRajapaksa 's ID. It hurts the sentiments of millions of Tamils”
நீங்கள் இந்திய குடிமகனாக இருந்தால், கவனத்தில் கொள்ளவும். நீங்கள் இந்திய இறையாண்மையைக் கூட எதிர்த்து எழுதிவிடலாம். ஆனால் இலங்கைக்கு எதிராக எழுதிவிட முடியாது. அத்தகைய வகையில் இலங்கை இறையாண்மை இந்திய இறையாண்மையைவிட , சில சமயங்களில் அதிகமாகப் போற்றப்படுகின்றது. ஆகையால் வன்முறையற்ற வார்த்தைகளையும், சபைகளில் பயன்படுத்தும் வார்த்தைகளுடன் கண்டனங்களைத் தெரிவியுங்கள்.