கடந்த சில வாரங்களில் UHT பால், Condensed பால் (கெட்டிப் பால்) ஆகியவை பற்றி தெரிந்துகொண்டோம்.
இன்று Evaporated பால், ‘தண்ணிப்பால்’ என்று மக்கள் இயல்பாகக் கூறும் பாலைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
மற்ற பெயர்கள்:
‘தண்ணிப்பால்’ Evaporated பால் என்றும் அழைக்கப்படுகிறது. (தே சி, கோபி சி போன்றவற்றில் பயன்படுத்தப்படுவது இந்தத் ‘தண்ணிப்பால்’).
எப்படித் தயாரிக்கப்படுகிறது:
கெட்டிப்பாலைப் போலவே 60 விழுக்காட்டுத் தண்ணீர் நீக்கப்பட்ட பாலே ‘தண்ணிப்பால்’ என்று அழைக்கப்படுகிறது.
ஆனால் கெட்டிப்பாலில் சர்க்கரை சேர்க்கப்பட்டுப் பின் கெட்டியாக்கப்படுகிறது.
‘தண்ணிப்பால்’, வெறும் தண்ணீர் நீக்கப்பட்ட பால் என்று கொள்ளலாம். சுண்டக் காய்ச்சிய பால் என்று கூட வைத்துக்கொள்ளலாம்.
அதனால் தான் பால் சற்று பழுப்பு நிறமாக, லேசான சுடப்பட்ட வாசனையுடன் இருக்கும்.
எதில் பயன்படுத்தப்படுகிறது:
பெரும்பாலும், கோப்பி, தேநீர் வகைகளில் ‘தண்ணிப்பால்’ பயன்படுத்தப்படுகிறது.
அது மட்டுமின்றி, பாலை விட அடர்த்தியான திரவமாக இது இருப்பதால், கஸ்டர்ட் (Custard), கேக்குகளின் மேல் ஊற்றப்படும் இனிப்புக் கூழ் ஆகியவற்றைத் தயாரிக்கவும், ‘தண்ணிப்பால்’ பயன்படுகிறது.
சில இந்திய உணவுகளில், குழம்பு வகைகளில், தேங்காய்ப்பாலுக்கு மாற்றாகவும், ‘தண்ணிப்பால்’ பயன்படுத்தப்படுவதுண்டு.
சத்துக்கள்?
30 கிராம் (ஒரு ஔன்ஸ்-2 மேசைக்கரண்டி) ‘தண்ணிப்பாலில்’, சுமார் 40 கலோரிக்கள் உள்ளன. கொழுப்புச் சத்து – 2 கிராம் (1.5 கிராம் கெட்டகொழுப்பு) மாவுச்சத்து – 3 கிராம், புரதச்சத்து – 2 கிராம், கால்சியம் – 80 மில்லிகிராம்.
பாலுக்குப் பதில் பயன்படுத்தலாமா?
தண்ணீர் நீக்கப்பட்ட பால் தான் ‘தண்ணிப்பால்’. இருப்பினும், பால் ஒரு செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டே தயாரிக்கப்படுகிறது.
காய்ச்சப்பட்ட கறந்த பாலில் உள்ள சத்துக்கள் பெரும்பாலும் ‘தண்ணிப்பாலிலும்’ இருப்பதாக ஒரு சில ஆய்வுகளும், அவ்வளவு சத்துக்கள் இல்லை என்று வேறு சில ஆய்வுகளும் கூறுகின்றன.
கால்சியம், புரதச்சத்து, கொழுப்புச் சத்து ஆகிய சத்துக்கள் கட்டாயம் தேவைப்படுவோர், முடிந்தவரை காய்ச்சிய கறந்த பாலைப் பருகுவது நல்லது என்பது மருத்துவர்களின் கருத்து.
ஆனால் எப்படிப் பார்த்தாலும், சர்க்கரை அளவு மிக அதிகமாக உள்ள கெட்டிப்பாலைக் காட்டிலும், ‘தண்ணிப்பால்’ நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.
எத்தனை நாள்வரை வைத்துக்கொள்ளலாம்?
‘தண்ணிப்பால்’ வாங்கும்போது, அது காலாவதியாகும் தேதியைப் பார்த்து வாங்குங்கள். அந்தத் தேதி பாலை உடைக்கும்வரை தான் பொருந்தும்.
உடைத்தபிறகு, அதை மூடி குளிர்பதனப் பெட்டியில் வைத்து, 4 முதல் 6 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
நம்மில் பலர் விரும்பிப் பருகும் 3 in 1 கோப்பி, தேநீர் வகைகளில் இருக்கும் க்ரீமர் (Creamer) பற்றி அடுத்த வாரம் தெரிந்துகொள்வோம்! |