• Paristamil Tamil news செய்திகள்
    • Paristamil France News பிரான்ஸ்
    • Paristamil Srilanka News இலங்கை
    • Paristamil India News இந்தியா
    • Paristamil World News உலகம்
    • Paristamil Cinema News சினிமா
    • Paristamil Sports News விளையாட்டு
    • Paristamil Vinotham News வினோதம்
    • Paristamil France News பிரெஞ்சுப் புதினங்கள்
    • Paristamil Samayal News சமையல்
    • Paristamil Technology News அறிவியல்
    • Paristamil Technology News  தொழில்நுட்பம்
    • Paristamil Medical News மருத்துவம்
    • Paristamil Jokes நகைச்சுவை
    • Paristamil France News கவிதைகள்
    • Paristamil Special Essay சிறப்புக் கட்டுரைகள்
  • Paristamil Currency Convertor நாணய மாற்று விலை
  • Paristamil Annonce விளம்பரம்
  • Paristamil Prenom குழந்தைகள் பெயர்
  • Paristamil Chat  அரட்டை
  • Tamilannuaire தமிழ் வழிகாட்டி
  • Paristamil Annonce விளம்பரம் செய்ய
  •  Paristamil Tamil newsஏனையவை
    • Paristamil France News காணொளிகள்
    • Paristamil Annonceவாங்க - விற்க/ Petites annonces
    • Paristamil FM பரிஸ்தமிழ்FM
    • Paristamil France Administration நிர்வாக தகவல்கள்
    • Paristamil Contact தொடர்புக்கு
z
logo
Desktop version

காட்சியறை அரசியல்..!!

6 January, 2019, Sun 17:32   |  views: 7074

Share

1996இல் ‘சத் ஜெய’ படை நடவடிக்கையின் பின் கிளிநொச்சி ஒரு படை நகரமாக மாறியது. நோர்வேயின் அனுசரணையோடான சமாதான முயற்சிகளின்போது கிளிநொச்சி இலங்கைத்தீவில் இரண்டவாது ராஜீய மையமாக எழுச்சி பெற்றது. இக் காலகட்டத்தில் கிளிநொச்சி சமாதானத்தின் காட்சி அறையாகத் துலங்கியது. அதன்பின் நாலாங்கட்ட ஈழப்போரின்போது கிளிநொச்சி ஆட்களற்ற பேய் நகரமாக மாறியது. 2009ற்குப் பின் அது ஒரே நாடு ஒரே தேசம் என்ற கோஷத்தின் காட்சி அறையாகவும் நல்லிணக்கத்தின் காட்சி அறையாகவும் மாறியது. இப்பொழுது வன்னி வெள்ளத்தின் பின் அது மறுபடியும் வெள்ள நிவாரண அரசியலின் காட்சி அறையாக மாறியிருக்கிறது.

 
வெள்ள அனர்த்தத்தின் பின் எல்லாத் தென்னிலங்கைக் கட்சிகளும் கிளிநொச்சியை நோக்கி படையெடுத்தன. குறிப்பாக கொழும்பில் ஏற்பட்ட ஒக்டோபர் ஆட்சிக் கவிழ்ப்பின்போது தமிழ் தரப்பானது ஒரு தீர்மானிக்கும் தரப்பாக மேலெழுந்திருக்கும் ஒரு பின்னணிக்குள் வன்னியில் வெள்ளம் பெருகியது. இதனால் தமிழ் மக்களுக்கு யார் முதலில் உதவுவது என்பதில் எல்லாக் கட்சிகளுக்கிடையிலும் போட்டி காணப்பட்டது. இந்த வெள்ள நிவாரண அரசியலில் ஆகப்பிந்திய உச்சக்கட்டம் என்று வர்ணிக்கத்தக்கது அமைச்சர் பாலித தேவரப்பெருமவின் கிளிநொச்சி விஜயமாகும்.
 
பாலித தேவரப்பெரும ஒரு வழமையான நாடாளுமன்ற உறுப்பினரைப் போன்றவர் அல்ல. அவருடைய சொந்தத் தேர்தல் தொகுதியில் அவருடைய வாக்காளர்கள் அவரைச் ‘சண்டி மல்லி’-சண்டியன் தம்பி என்றே செல்லமாக அழைப்பதுண்டாம். அங்கேயும் அவர் மிகவும் அடிமட்டத்திற்கு இறங்கி வேலை செய்கிறார். கடந்த வாரம் கிளிநொச்சிக்கு வந்தபோது பரந்தனில் அவருடன் கதைத்த சில ஊடகவியலாளர்களிடம் அவர் பின்வரும் தொனிப்படக் கூறியிருக்கிறார். ‘என்னுடைய கட்சி அடுத்த தேர்தலில் எனக்கு சீற் தராவிட்டாலும் கூட என்னால் சுயேட்சையாகக் கேட்டு வெல்ல முடியும். அந்தளவிற்கு நான் அடிமட்ட மக்களுக்குள் இறங்கி வேலை செய்திருக்கிறேன்’ என்று.
 
இவ்வாறு தனது வாக்காளர்களால் அதிகம் விரும்பப்படும் சண்டிமல்லி ஒக்டோபர் மாதம் ஆட்சிக்குழப்பத்தின் போது நாடாளுமன்றத்தில் ஒரு சிறிய கத்தியைக் காட்டி எதிர்த்தரப்பை மிரட்டியதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பில் புகைப்படங்களும், ஒலிப்பேழைகளும் வெளிவந்தன. அது கத்தியல்ல என்றும் தபாலுறைகளைக் கிழிப்பதற்குப் பயன்படும் ஒரு உபகரணம் என்றும் பாலித தேவரப்பெரும பின்னர் கூறினார். எனினும் படத்தில் காணப்படுவது ஒரு சிறிய கத்தியே என்று கூறப்படுகின்றது. மேலும் றிச்சர்ட் ஆதிதேவ் – richard aadhidev  என்பவருடைய முகநூற் பக்கத்தில் ஒரு காணொளி பகிரப்பட்டள்ளது. அதில் தேவபெரும 2015 ஜனவரி மாதம் தமிழ் பிரதேசசபை உறுப்பினர் ஒருவரை தெருவில் முழங்காலில் இருத்திக் கெட்ட வார்த்தைகளால் திட்டி அடித்து துவைக்கும் காட்சி பதிவாகியுள்ளது. “இன்னும் தேடிப் பார்த்தால் பாடசாலைகளில் புகுந்து ஆசிரியர்களை தாக்குவது, பொதுநிகழ்வில் புகுந்து குழப்பம் விளைவிப்பது என ஏகப்பட்ட வரலாறுகள். பாலித தேவரப்பெரும பாராளுமன்றத்துக்கு சென்ற நாட்களை விட பொலிசுக்கும் நீதிமன்றத்துக்கும் சென்ற நாட்கள்தான் அதிகம்….” என்று ரிச்சர்ட் ஆதிதேவ் தனது முகநூலில் எழுதியுள்ளார்.
 
இவ்வாறு நாடாளுமன்றத்திற்குள் கத்தியைக் கொண்டு சென்ற சண்டிமல்லி கடந்த கிழமை கிளிநொச்சிக்கு நீர் இறைக்கும் இயந்திரங்களோடு வந்து சேர்ந்தார். வெள்ளநீர் புகுந்து அழுக்காகிய கிணறுகளில் அவர் இறங்கி விளக்குமாறால் கிணற்றின் சுவர்களைத் துப்பரவாக்கும் காட்சி பரவலாக ஊடகங்களில் பகிரப்பட்டது. படைவீரர்கள் பயன்படுத்தும் உருமறைப்பு சீருடைகளை ஒத்த ஒரு பெனியனையும் நீளக்காற்சட்டையையும் அணிந்தபடி பாலித தேவரப்பெரும  கிளிநொச்சிக் கிணறுகளுக்குள் இறங்கினார். அவருடைய அந்த உடை தற்செயலானதா என்ற கேள்வியும் உண்டு. ஓரு ராஜாங்க அமைச்சர் இப்படியாகக் கிணற்றுக்குள் இறங்கியது அதுவும் தமிழ்ப்பகுதிகளில் அவ்வாறு செய்தது பரவலாக கவனிப்பை ஈர்த்தது. தமிழ்த் தலைவர்கள் அவ்வாறு இறங்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி பரவலாக விமர்சிக்கப்படுகிறது.
 
தேவரப்பெரும  ஒரு வழமைக்கு மாறான அரசியல்வாதி. கிளிநொச்சியிலும் அவர் வழமையான அரசியல்வாதிகளைப் போலன்றி தன் பாணியிலேயே நடந்து கொண்டார். இத்தனைக்கும் தேவப் பெரும வனஜீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்திகள் பிரதி அமைச்சராகவிருக்கிறார்.இவ்வமைச்சு மத்திய அரசாங்கத்தின் கீழ் வருகிறது. போரை வேறு வழிகளில் தொடரும் அரசின் உபகரணங்களில் ஒன்று. எனவே இதிலவர் சாகச அரசியல் செய்கிறாரா? அல்லது மெய்யாகவே தொண்டு செய்கிறாரா? என்ற விடயத்திற்குள் இக்கட்டுரை இறங்கவில்லை. ஆனால் தேவரப்பெரும  உட்பட பெரும்பாலான தென்னிலங்கைமைய அரசியல்வாதிகளும், உள்ளுர் அரசியல்வாதிகளும் வெள்ள நிவாரண அரசியலின் மூலம் கிளிநொச்சியை ஒரு காட்சியறையாக மாற்றியிருக்கிறார்கள் என்பதே கிடைக்கப்பெறும் ஒட்டுமொத்தச் சித்திரமாகும்.
 
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கபட்ட ஒரு சமூகத்தின் தலைப்பட்டிணத்தை காட்சியறையாக மாற்றுவதில் நன்மைகளுண்டுதான். அந்த மக்களுக்கு உடனடிக்கு உதவிகள் கிடைக்கும். இதன் மூலம் அவர்கள் இழப்புக்களிலிருந்து வேகமாக மீண்டெழ முடியும். ஆனால் இங்குள்ள வரலாற்று அனுபவம் என்னவெனில் காலத்திற்குக் காலம் கிளிநொச்சி ஒரு காட்சியறையாக மாற்றப்பட்டு வருகிறது என்பதும் அதன் மூலம் அந்த மக்களுக்கு தற்காலிய நிவாரணமே கிடைக்கிறது என்பதும்தான். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் தேவை. ஆனால் காலத்திற்குக் காலம் இவ்வாறான நிவாரணங்களை வழங்குவதன் மூலமும் சிறியளவிலான உட்கட்டுமான அபிவிருத்திகளின் மூலமும் அந்த மக்களின் நிரந்தரப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வைக் கண்டுவிட முடியாது.
 
இந்த இடத்தில் கிளிநொச்சி ஒரு குறியீடுதான். முழுத் தமிழ் சமூகத்திற்குமான குறியீடு. வெள்ள நிவாரணத்தின் போது அந்த மாவட்டத்தை நோக்கிக் குவிந்த உதவிகள் நிவாரணங்கள்தான். குறிப்பாக தற்காலிக நிவாரணங்கள்தான். ஆனால் தமிழ் மக்களுக்குத் தேவையாக இருப்பது நிரந்தர நிவாரணமே. அவ்வாறான நிரந்தர நிவாரணங்களைத் தரத்தயாரற்ற அரசியல்வாதிகள் அல்லது அவற்றைப் பெற்றுத்தர முடியாத அரசியல்வாதிகள் அல்லது யுத்தத்தை வேறு வழிகளில் தொடரும் அரசியல்வாதிகள் தற்காலிய நிவாரணங்களைக் கொடுக்கும் ஒரு காட்சியறை அரசியலை முன்னெடுத்து வருகிறார்கள். வன்னிப் பெருநிலம் கடைசிக்கட்ட யுத்தத்தில் அதிகம் சேதமடைந்த ஒரு பிரதேசம் என்பதனால் அதைக் காட்சியறையாக மாற்றும் பொழுது அதற்குக் கிடைக்கும் அரசியற் கவர்ச்சி அதிகமாக இருக்கிறது.
 
ஆனால் இக்காட்சியறை அரசியலும் சலுகை அரசியலும் கிட்டத்தட்ட ஒன்றுதான். இவை தமிழ் மக்களுக்குரிய நிரந்தரத் தீர்வை கண்டுபிடிக்க முடியாத ஒரு வெற்றிடத்திலிருந்தே உற்பத்தியாகின்றன.
 
அண்மை ஆண்டுகளாக அரசியற் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அல்லது அரசியல் அபிலாசை கொண்டவர்கள் கூட்டம் சேர்க்கும்போது ஏதாவது ஒரு பொருளைத் தருவதாகக் கூறி கூட்டம் சேர்க்கும் ஒரு போக்கு அதிகரித்து வருகிறது. தானம் செய்து கூட்டம் சேர்க்கும் அல்லது வாக்காளர்களைக் கையேந்திகளாக வைத்திருக்கும் இப்போக்கும் நிவாரண அரசியலும் சலுகை அரசியலும் ஏறக்குறைய ஒன்றுதான்.
 
அண்மை நாட்களாக சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பிபினர்களின் முகநூல் பக்கங்களில் அல்லது அவர்களுடைய உதவியாளர்களின் முகநூல் பக்கங்களில் ஒரு விடயத்தைத் திரும்பத் திரும்பக் காண முடிகிறது. அதில் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் நிதி உதவியோடு தெருக்கள் திருத்தப்படும் காட்சி அல்லது கிறவல் சாலை தார்ச் சாலையாக மாற்றப்படும் காட்சி போன்றன பிரசுரிக்கப்படுகின்றன. உள்ளுரில் காணப்படும் கிறவல் சாலைகள், ஒழுங்கைகள் தார்ச் சாலைகளாக மாற்றப்படுவது விரும்பத்தக்கதே. அது அந்த மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும். ஆனால் மேற்படி வீதிகளைத் திருத்தும் காட்சிகளை முகநூலில் பகிரும் அரசியல்வாதிகள் வேறு உள்நோக்கங்களைக் கொண்டிருக்கிறார்கள். இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுத் தருவோம் என்று வாக்குறுதியளிப்பதை விடவும் சிறு சிறு உட்கட்டுமான வேலைகளைச் செய்து காட்டுவதன் மூலம் தமது வாக்காளர்களைக் கவர்வது நடைமுறைச் சாத்தியமானது என்று அவர்கள் நம்புகிறார்களா?கைதிகளின் விவகாரம் காணிப்பிரச்சினை காணாமல் போனவர்களின் விவகாரம் போன்றவற்றில் உறுதியான வாக்குறுதிகளை வழங்க முடியாத ஒரு பின்னணியில் சிறு சிறு உட்கட்டுமான அபிவிருத்திகளைக் காட்டி தமது வாக்கு வங்கியைப் பாதுகாக்க விழைகிறார்களா?
 
தமிழ் மக்களுக்கு அபிவிருத்தி வேண்டும். ஆனால் அதைவிட முக்கியமாக அபிவிருத்திக்கான கூட்டுரிமையையும் உள்ளடக்கிய தன்னாட்சி அதிகாரங்களைக் கொண்ட ஒரு நிரந்தரத் தீர்வும் வேண்டும். அப்பொழுதுதான் வன்னியில் வெள்ளம் ஏன் பெருகியது என்பதனை விஞ்ஞானபூர்வமாகக் கண்டுபிடித்து அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வன்னியின் நோக்கு நிலையிலிருந்து மேற்கொள்ளலாம்.
 
வன்னியில் பருவ மழைகள் தோறும் வெள்ளம் பெருகுவதுண்டு. ஆனால் இம்முறை இரணமடுக் குளத்தின் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டதன் பின் வெள்ளம் ஓர் அனர்த்தமாக மாறியது என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. இது தொடர்பில் பின்வரும் வேறுபட்ட பார்வைகள் உண்டு. முதலாவது- சம்பந்தப்படட பொறியியலாளர்கள் பொறுப்பாக நடந்துகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு.இரண்டாவது- இரணமடுவின் கொள்ளளவை அதிகரித்திருக்கக்கூடாது என்று ஒரு வாதம். மூன்றாவது- அவ்வாறு அதிகரிக்கப்பட்ட பின்னராவது மேலதிக நீரை யாழ்ப்பாணத்திற்கு வழங்கலாம்தானே என்ற ஒரு வாதம். நாலாவது- கொள்ளளவை அதிகரித்தபின் நீர் வடியும் இயற்கையான அமைப்புகளை போதியளவு பலப்படுத்தவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு. ஐந்தாவது- வீதி அபிவிருத்தியின் போது குறிப்பாக வீதிகளை உயர்த்தும் போது நீர் வடியும் வழிகளைக்குறித்து போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு.ஆறாவது -அவ்வாறு கொள்ளளவை அதிகரித்தமைதான் வெள்ளப்பெருக்குக்குக் காரணமல்ல என்ற வாதம். இவ்வாதத்தை முன்வைப்பவர்கள் வெள்ள அனர்த்தத்திற்கு பின்வரும் காரணங்களைச் சுட்டிக்காட்டுகிறார்கள். முதலாவது காரணம் யுத்தத் தேவைகளுக்காக கட்டப்பட்டு சிதைக்கப்பட்ட மண் அணைகளும், அரண்களும் கிளிநொச்சியின் நிலக்காட்சி அமைப்பையும் இயற்கையாக நீர் வடியும் வழிகளையும் மாற்றிவிட்டன என்பது. இரண்டாவது காரணம் அத்துமீறிய திட்டமிடப்படாத குடியேற்றங்கள். இவ்விரண்டு பிரதான காரணங்களுந்தான் வெள்ளம் ஓர் அனர்த்தமாக மாறக் காரணமென்று மேற்படி தரப்பினர் வாதிடுகிறார்கள்.
 
ஆனால் வெள்ள அழிவுகளின் பின்னணியில் இரணமடுவிற்கு வந்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் குளக்கட்டில் நின்றபடி என்ன சொன்னார்? இவ்வளவு நீரும் வீணாகக் கடலில் கலக்கும் பொழுது யாழ்ப்பாணத்து மக்களுக்கு நான் என்ன பதிலைச் சொல்வது? என்ற தொனிப்படப் பேசியிருக்கிறார் யாழ்ப்பாணத்திற்கு நீரை வழங்கலாம் என்ற தனது வழமையான அபிப்பிராயத்தையும் தெரிவித்திருக்கிறார்.
 
கண்டி வீதி வழியாக ஆணையிறவைத் தாண்டி யாழ்ப்பாணத்திற்குள் பயணிக்கும் எவரும் சாலையின் ஓரத்தில் பெரிய விட்டமுடைய குழாய்கள் புதைக்கப்பட்டு வருவதைக் கண்டிருப்பார்கள். பளையிலிருந்து தொடங்கி இக்குழாய்கள் புதைக்கப்பட்டு வருகின்றன. வடமராட்சிக் கிழக்கில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தின் ஒரு பகுதியே இதுவென்று கூறப்படுகின்றது. நன்னீராக்கப்பட்ட கடல்நீரை பளைப் பகுதியில் சேமித்து அங்கிருந்து விநியோகிக்கப்படுவதற்காக இக்குழாய்கள் புதைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் இத்திட்டத்தின் நீண்டகால உள்நோக்கம் இரணைமடு நீரை குடாநாட்டிற்குள் கொண்டு வருவதே என்று ஊகிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் பளையில் கட்டப்பட்டிருக்கும் சேமிப்புத் தொட்டிகளையும், இரணைமடுக் குளத்தையும் இணைத்துவிட்டால் அத்திட்டம் பூர்த்தியாகிவிடும் என்றும் ஊகிக்கப்படுகிறது. இரணமடு நீரை குடாநாட்டிற்குள் கொண்டுவரும் திட்டத்திற்கு கிளிநொச்சியில் எதிர்ப்புக் காட்டப்படுகிறது. எனவே அதை உடனடியாக நிறைவேற்றாமல் பிறகொரு காலத்தில் நிறைவேற்றும் உள்நோக்கத்தோடு இவ்வாறு குழாய்கள் புதைக்கப்படுவதாகவும் ஊகிக்கப்படுகிறது. இவ்வாறான ஊகங்களின் பின்னணியில்தான் ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார். 
ஒரு வெள்ள அனர்த்தத்தின் பின்னணியில் மத்திய அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் அதுவும் சிறுபான்மைக் கட்சிகளுக்கிடையில் ஒரு கூட்டை உருவாக்க வேண்டும் என்று அண்மையில் கோரிக்கை விடுத்த ஒருவர் வெள்ளப் பெருக்கிற்குக் காரணம் என்று ஒரு தரப்பினரால் சுட்டிக்காட்டப்படும் ஒரு பெருங்குளத்தின் அணைக்கட்டில் நின்று கொண்டு சர்ச்சைக்குரிய அக்குளத்து நீரை யாழ்ப்பாணத்திற்குக் கொடுங்கள் என்று கூறுகிறார். இது அபிவிருத்தி அரசியலா? அல்லது நீர் அரசியலின் ஒரு பகுதியா? அல்லது நிவாரண அரசியலின் ஒரு பகுதியா? அல்லது காட்சியறை அரசியலா?



  முன்அடுத்த   

ayurveda-muligai-vaidhiya-salai
computer-class-gare-de-bondy
vethalai-mai-jothidam
•  உங்கள் கருத்துப் பகுதி
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சிஸ்மோலொஜி (Seismology)

பூமி அதிர்வு குறித்து படிக்கும் படிப்பு.

முன்னைய செய்திகள்

டொலர் நெருக்கடியை தீர்க்க ரணில் அமைக்கும் வியூகம் வெற்றிபெறுமா?

16 May, 2022, Mon 19:44   |  views: 1234

தமிழ்க் கட்சிகளின் கவனத்திற்கு

27 April, 2022, Wed 17:35   |  views: 8002
 1   2     அடுத்த பக்கம்›        


Advertisement

hik-vision
sri-kaliamman-astrologue
om sakthi Jothidam nilayam
Kaliamman Jothidam nilayam
lebara play

PUB
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்

Tél.: 09 83 06 14 13

தமிழில் தொடர்பு கொள்ள:

Madame. பார்த்தீபன் றஜனி - 07 68 55 17 26

  • Advertisement Contact